இமயமலைப் பகுதியில் `எட்டி’ என்று அழைக்கப்படும் மனிதனைப்போல உருவம் கொண்ட பனிமனிதனின் காலடித் தடத்தைக் கண்டதாக இந்திய ராணுவம் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தது. பல வருடங்களாக பல்வேறு நிரூபிக்கப்படாத தகவல்கள் பனிமனிதனைச் சுற்றியே வலம் வந்துகொண்டிருக்கின்றன. இது உண்மையா, இல்லை கட்டுக்கதையா என மக்கள் மத்தியில் விடை தெரியாத கேள்வி ஒன்று இருந்துகொண்டே வருகிறது.

இப்படி 32 இன்ச் நீளமும் 15 இன்ச் அகலமும் கொண்ட கால்தடம் கிடைத்துள்ளது. இது அந்தப் பனிமனிதனின் கால்தடம்தான் என்று தெரிவிக்க, நேபாள ராணுவமோ இதற்கு மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸுடன் பேசிய நேபாள ராணுவத்தின் செய்தி தொடர்பாளர், ``கால்தடங்களைக் கண்டறிந்த இந்திய ராணுவக் குழுவுடன் எங்களது தொடர்புக் குழு ஒன்றும் செயல்பட்டது. இதற்குப் பின்பு அந்தக் கால்தடங்களைப் பற்றி உறுதிசெய்ய அருகில் வாழும் மக்களிடம் இதுகுறித்து நாங்கள் விசாரித்தோம். அவர்கள் இது பெரும்பாலும் அங்கு வாழும் கரடி ஒன்றின் கால்தடமாகத்தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இப்படியான கால்தடங்கள் அடிக்கடி அந்தப் பகுதிகளில் தென்படுமாம். எனவே, இது எட்டியின் கால்தடமாகத்தான் இருக்குமா என்பது சந்தேகம்தான்" என்று கூறியுள்ளார். முன்பும் ஒருமுறை ரோமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அது கரடியின் மரபணுக்களுடன் ஒத்துப்போவதாகத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே `ஒரு கால்தடம்தானே இருக்கே, எட்டி ஒற்றைக் காலில் நடக்குமா?' என்பது தொடங்கி இதுகுறித்து நெட்டிசன்கள் பல கேள்விகள் கேட்டதுடன் இதுகுறித்து ஜோக், மீம் என பலவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.