பறவைகள். பூவுலகில் வாழும் உயிரினங்களில் மனித இனத்தின் ஈர்ப்பையும் அன்பையும் சற்றுக் கூடுதலாகப் பெற்ற உயிரினம். மனிதனால் இவ்வுலகில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களால் வெகுவாகப் பாதிக்கப்படுவதும் பறவைகளே. சூழலியல் பாதுகாப்பில் ஒருவரை ஈடுபடுத்த வேண்டுமென்றால் முதலில் அவரைப் பறவை நோக்குதலுக்குப் பழக்க வேண்டும். அதுவே தானாக அவரை அடுத்தகட்டத்துக்கு இட்டுச்சென்றுவிடும். அத்தகைய பறவை நோக்குதலைத் தமிழகத்தில் பரவலாக்கியதில் பல பறவை ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் முக்கிய பங்குண்டு. அத்தகைய பறவை ஆய்வாளர்களில் முக்கியமானவர் ப.ஜெகநாதன். மக்கள் அறிவியல் (Citizen Science), தமிழ்ச் சமுதாயத்தில் பரவலானதிலும் இவருடைய பங்கு மிக முக்கியமானது. ஆய்வாளர்கள் மக்களிடமிருந்து பிரிந்து நிற்கக் கூடாது, அவர்கள் மக்களுடன் நிற்க வேண்டும். அதை நடைமுறையில் செய்துகொண்டிருப்பவர். இயற்கைப் பாதுகாப்பு நிறுவனம் (Nature Conservation Foundation) சார்பாகக் காட்டுயிர் ஆய்வாளராக வால்பாறையில் ஆய்வுகளைச் செய்துவரும் அவருடனான நேர்காணல் இனி.
"ஆய்வுத்துறையில் குறிப்பாகப் பறவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற உந்துதல் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?"
"1996-ம் ஆண்டு மாயவரத்திலுள்ள ஏ.வி.சி கல்லூரியில் முதுகலையில் காட்டுயிரியல் படித்துக்கொண்டிருந்தேன். மக்கள் மத்தியில் காட்டுயிர் ஒளிப்படக்கலை மீதான ஆர்வம் வளர்ந்துகொண்டிருந்த சமயம். என் களஆய்வுக்காகத் தவளைகள், பாம்புகள், முதலைகள் போன்ற உயிரினங்களை ஆய்வு செய்துகொண்டிருந்தேன். ஒகேனக்கல், பிலிகூண்டு, ராசிமணல் போன்ற பகுதிகளின் நதியோரங்களில்தான். அப்போது பறவைகள்மீது அதீத ஆர்வம் இல்லையென்றாலும், ஓரளவுக்குப் பறவைகளைப் பார்க்கும் பழக்கமிருந்தது. அந்தச் சமயத்தில் என் பெற்றோர்கள் ஒரு தொலைநோக்கியைப் பரிசளித்தார்கள். அது மிகவும் பயனுடையதாக இருந்தது. காவிரிக் கரையில் நடந்து செல்லும்போது பல விதமான பறவைகளை முதன்முதலாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது."

கொண்டைக் குயில் (Chestnut winged cuckoo)
Photo Courtesy: Rushen
"ஆக, பறவைகள்மீது உங்களுக்கு அளப்பரிய ஆர்வம் வந்ததற்கு அந்தத் தொலைநோக்கியைக் காரணமாகச் சொல்லலாமா?"
"அதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். நான் பறவைகளைப் பார்க்கத் தொடங்கியது நூல்களில்தான். சாலிம் அலி எழுதிய இந்தியப் பறவைகள் (The Book of Indian Birds) எனும் நூலை ஆர்வத்துடன் தினமும் புரட்டிக்கொண்டிருப்பேன். அதிலுள்ள பல்வகையான பறவைகளின் ஓவியங்களைப் பார்க்கையில் அவற்றை நேரில் பார்க்கும் ஆசை எழும். பறவை பார்த்தல் எப்போதும் அங்கிருந்துதான் தொடங்கும். நூலில் நாம் பார்க்கும் படங்கள் மனதில் பதியும்போது அவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இயல்பாகவே குழந்தையைப்போல் துள்ளிக் குதிப்போம். படத்தில் பார்த்த ஒன்றை நேரில் பார்த்தால் யாருக்குத்தான் ஆனந்தமாக இருக்காது."
"அப்படிப் பார்த்தவற்றில் எந்தப் பறவை முதலிடத்தில் உள்ளது?"
"முதலிடம் என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. எனினும், இன்னும் நீங்காமல் நினைவில் நிற்பது ஒகேனக்கல் வனப்பகுதியில் கண்ட மஞ்சள் தொண்டைச் சிட்டு (Chestnut Shouldered Petronia), மாயவரம் கல்லூரி விடுதியிலிருந்து பார்த்த கொண்டைக் குயில் (Chestnut-winged cuckoo), களக்காட்டில் பார்த்த பெரிய இருவாச்சி (Great Hornbill) போன்றவற்றைச் சொல்லலாம். இன்னும் பார்க்க வேண்டிய பறவைகள் எத்தனையோ உள்ளன. ஆக, இந்தப் பட்டியல் என்றுமே முடியாது.
இந்தப் பறவைகளையெல்லாம் புத்தகத்தில் பார்த்துப் பழகியபின் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தேன். அப்படித் தொடங்கிய ஆர்வம்தான் இதுவரை இழுத்து வந்துள்ளது. பறவைகளைப் பார்க்க தொலைநோக்கி வேண்டுமென்றில்லை, ஆர்வமிருந்தால் போதும். முதலில் பறவைகளின் படங்களை நாம் பார்க்க வேண்டும். அதை நேரில் பார்க்கையில் நாமே தானாக இனம் காண முயல்வோம். அதுதான் ஆர்வத்தின் முதல்படி. அவற்றின் குரலைக் கேட்டு அறிந்துகொள்வோம். அதன்பிறகு அவற்றைக் கூர்ந்து கவனிக்கத் தொலைநோக்கிகள் நமக்குப் பயன்படும்."

"மக்கள் அறிவியல், தமிழகத்தில் தற்போது அதிகமாகப் பேசப்படுகிறது, நடைமுறையிலும் செயல்பட்டு வருகிறது. மக்களை இதுமாதிரியான அறிவியல்பூர்வ முயற்சிகளில் பங்கெடுக்க வைப்பது எப்படிச் சாத்தியமானது? இதுபற்றிக் கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா?"
"நீங்களும்தான் இதைச் செய்கிறீர்கள். விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் திட்டத்தை நடத்துகிறீர்களே, அது எதற்காக?"
"மாணவர்களுக்கு சமுதாயப் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதை எப்படி அணுக வேண்டுமென்ற புரிதல் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் பத்திரிகையாளராக வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, சமூக மற்றும் அரசியல் பிரச்னைகளைப் பற்றிய புரிதல் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக நடத்துகிறோம். அதுதானே சமுதாயத்தின் சிறந்த மனிதராக அவர்களுக்குத் துணைபுரியும்."
"இதுவும் கிட்டத்தட்ட அதேபோலத்தான். இதழியல் என்பது ஒரு துறை என்பதையும் தாண்டி அதைப் பொதுமக்களும் செய்ய முடியுமென்ற நம்பிக்கையை Citizen Journalism மூலமாக எப்படி நீங்கள் விதைத்தீர்களோ அதையேதான் மக்கள் அறிவியல் (Citize Science) மூலம் சூழலியல் துறையிலும் செய்ய முடிகிறது. அப்போதுதானே சிறந்த சூழலியல் பாதுகாவலனாக மக்கள் வாழமுடியும்."
"மக்கள் அறிவியல் பற்றி இன்னும் விரிவாகக் கூறமுடியுமா... அது எப்படி அறிவியல் வளர்ச்சியில், பறவைகள் அல்லது இயற்கைப் பாதுகாப்பில் பங்கு வகிக்கின்றது?"
"ஒருவர் ஒரு பறவையைப் பார்க்கிறார். அதன் பெயர், பார்த்த இடம், நேரம் அனைத்தையும் குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொள்கிறார். இதுவொரு முக்கியமான தரவு. உதாரணத்துக்கு, 1980-களில் தஞ்சாவூரில் ஒருவரிடம் பாறு கழுகின் படமும் பார்த்த நேரம், இடம் போன்ற தகவல்களும் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதை அவரே வைத்திருந்தால், அவர் இறந்தபின் அது பயனில்லாமல் போய்விடும். பொதுவெளியில், அதாவது eBird, wikipedia போன்ற இணையதளங்களில் பதிவேற்றினால் அதே தரவுகள் ஆவணமாகும். உதாரணமாக, ஒரு பகுதியில் வாழும் ஒருவர் பாறு கழுகுகள் அங்கு இருந்ததைப் பதிவிட்டிருந்தால் இங்கெல்லாம் முன்பு பாறுகள் இருந்திருக்கின்றன. இப்போது இல்லாமல் போய்விட்டன என்ற தகவல் ஆய்வுகளில் பயன்படும். அதுவும், அழிவின் விளிம்பிலிருக்கும் பாறு போன்ற பறவைகளின் தரவுகள் பொக்கிஷங்களைப்போல. அது பல முடிச்சுகளை அவிழ்க்கவும், ஆய்வுகளை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தவும்கூடப் பயன்படும்.
அதாவது citizen sparrow போன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் சிட்டுக்குருவிகள் அழியும் தருவாயில் இல்லை என்பதை நிரூபிக்க உதவியதுபோல.

மஞ்சள் சிட்டு (Chestnut-shouldered Petronia)
Photo Courtesy: Tsrawal
ஓர் ஏரி அல்லது குறிப்பிட்ட வனப்பகுதியிலிருக்கும் பறவைகளை அதைச் சுற்றி வாழும் மக்கள் பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமாகவும், அவற்றை eBird-ல் பதிவேற்றுவதன் மூலமும் அங்குள்ள பொதுப் பறவைகளையும், அரிய பறவைகளையும், வலசை வரும் பறவைகளையும், அவற்றின் எண்ணிக்கை அடர்த்தியையும் அறியமுடியும். சில ஆண்டுகளுக்குமுன் அதிகமாக இருந்த ஒருவகைப் பறவை இந்த ஆண்டு கணக்கெடுப்பில் குறைந்து போனதென்றால் அதை அறிந்துகொண்டு அதற்கான காரணம் என்னவென்பதை ஆராய்ந்து அவற்றைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம்.
ஒருவேளை யாரேனும் அந்த ஏரியில் மண்கொட்டி நிரப்பி கட்டடம் கட்ட வந்தாலோ, குறிப்பிட்ட வனப்பகுதியின் குறுக்கே பெரிய அகலமான சாலையைப் போட வந்தாலோ அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளைப் பொதுவெளியில் இருக்கும் மக்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்தே அந்தத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பதை அறிவியல்பூர்வமாக நிர்ணயிக்க முடியும்."
"அப்படியென்றால் தரவுகள் சேகரிப்பதுதான் இதன் நோக்கமா?"
"இல்லை. இதுபோன்ற தரவுகளை மக்கள் அறிவியல் மூலமாகச் சேகரிக்க வைப்பது மக்களுக்கும் அறிவியல் தொடர்பான புரிதலை ஏற்படுத்தும். அவர்கள் சேகரிக்கும் தரவுகளைப் பொதுத்தளத்தில் பதிவிட ஊக்குவிக்கும்போது அதன்மூலம் மிகப்பெரிய ஒரு கடலில் நாம் போட்ட துளியும் இருக்கிறதென்று அவர்கள் உணர்வார்கள். அது அறிவியல் மனப்பான்மையோடு அனைத்தையும் அணுக வேண்டுமென்ற சிந்தனையை அவர்களிடம் மேன்மேலும் அதிகரிக்கும்.
மக்கள் அறிவியல் தரவு சேகரிப்பதற்கான கருவி மட்டுமல்ல. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது போன்றவற்றை மக்கள் புரிந்துகொள்ள உதவும் ஒரு செயல்முறை. அதற்கான தேவை இங்கே அதிகமாக இருக்கிறது."
"மக்கள் அறிவியல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்துகொள்ளவும் அதைக் கணிக்கவும்கூடப் பயன்படுமாமே! உண்மையாகவா?"
"சூழலியல் சுட்டிக்காட்டிகளான பறவைகளுக்குக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை வைத்து அவற்றோடு இவ்வுலகில் இருக்கும் நமக்கும் எந்தவிதத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை நம்மால் அறியமுடியும். பூமி சூடாதல், காலந்தவறி பெய்யும் மழை, பனி, உயரும் கடல் மட்டம் போன்றவை பறவைகளையும் அவற்றின் வாழிடங்களையும் வெகுவாகப் பாதிக்கிறது.
வெப்பநிலை உயர்வால் உலகிலுள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் பல பறவைகள் பாதிப்படைந்துள்ளன. வெகுதூரத்திலிருந்து வலசை வரும் பறவைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஒரு பழந்தின்னிப் பறவை வகை அது வலசைச் சென்ற இடத்திலிருந்து கிளம்பிக் கூடமைக்கும் இடத்துக்குச் செல்கிறது. அவ்வேளையில் அங்கே அவை உண்ணும் ஒரு பழமரம் காலந்தவறி முன்னமே பூத்துக் காய்ந்து பழுத்து ஓய்ந்துவிடுகிறது. அப்போது அங்கு வரும் அப்பறவைகளுக்குப் போதுமான உணவு கிடைக்காமல் போகலாம். அவை அங்கே செல்வது கூடமைத்துத் தம் இனத்தைப் பெருக்க. ஆனால், போதிய உணவு கிடைக்காமல் சில பறவைகள் கூடமைக்காமல் போகலாம். அப்படியே கூடமைத்தாலும் குஞ்சுகளுக்குச் சரிவர உணவு கிடைக்காமல் அவை இறந்துபோகலாம்."

பெரிய இருவாச்சி (Great Hornbill)
Photo Courtesy: Nandha
"ஒருபகுதிக்கு ஒரு வகையான பறவை வலசை வரும் நாள் அல்லது வாரத்தை வைத்து நீங்கள் கூறியவற்றைப் புரிந்துகொள்ளலாமா?"
"அதைவைத்து நன்றாகவே புரிந்துகொள்கிறோம். அவை அந்த இடத்தைவிட்டுக் கிளம்பும் நாள் அல்லது வாரம் என்பது மிகவும் முக்கியமான தரவு. இதைப் பல பறவையாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பதிவு செய்து பொதுவெளியில் பதிவேற்றும்போது இதுவொரு முக்கியமான தரவாகிறது. இந்தத் தரவுகள் மூலமாக ஒரு பறவை ஓரிடத்தில் எத்தனை நாள்கள் தங்குகின்றன என்பது தெரியும். அதேபோல் இதற்குமுன் எத்தனை நாள்கள் தங்கியிருந்தன என்பதும் தெரியும். இந்தக் காலகட்டம் தற்போது மாறுபடுகிறது. அதற்குக் காரணம் அந்த இடத்தின் தட்பவெப்ப நிலையில் நடைபெறும் மாற்றங்கள். அந்த மாற்றங்களுக்குக் காரணம் காலநிலை மாற்றமா என்பதை ஆராய முடியும். மக்கள் தரவுகளாகப் பதிவேற்றும்போது அதைவைத்து ஆய்வுமாதிரி ஒன்றை உருவாக்கி அந்தப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் என்னென்ன விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படுமென்றுகூடக் கணிக்க முடியும். அதற்கு மக்கள் அறிவியல் உதவும்.
இதுமாதிரியான தரவுகளை மக்கள் பதிவிட்டதன் மூலமாகக் கார்னெல் பல்கலைக்கழக (Cornell University) ஆய்வாளர்கள் தற்போது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பைக் கணிக்கின்றனர். வலசைகள் முன்பு எப்படியிருந்தன, இப்போது எப்படி மாறியிடுக்கின்றன, காலப்போக்கில் அது எப்படி மாறுபடும் என்பதையும் அவர்கள் இதன்மூலம் சொல்கிறார்கள். மக்கள் அறிவியல் குடிமக்களிடம் அறிவியல்சார்ந்த புரிதலை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஆய்வுகளில் அவர்களையும் பங்கெடுக்க வைக்கின்றது. ஆம், அறிவியல் ஆய்வுகளில் மக்களும் பங்கெடுக்க முடியும். மக்கள் அறிவியலைக் கையிலெடுப்பதன் மூலம் ஆய்வாளர்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் கணிப்பதற்கு மக்கள் உதவ வேண்டும்."
"சமீப காலங்களில் போலி அறிவியல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அறிவியல்பூர்வமாக ஆதாரமற்றவற்றை அறிவியல் சாயம் பூசி பிரசாரம் செய்கிறார்களே! அதை எப்படி அணுகுவது?"
"இப்போதில்லை. இந்த மாதிரியான பிரச்னைகள் ஆரம்பக் காலத்திலிருந்தே இருந்துவருகின்றன. இன்னமும் பூமி தட்டை என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இவற்றைக் கண்டு சினங்கொண்டு, மிரண்டு, மன அழுத்தத்தில் அமர்ந்துவிடக் கூடாது. சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். காலநிலை மாற்றமே பொய்யென்று சொல்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். தெரியாமல் பேசுபவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கலாம். தெரிந்தே அரசியல் ஆதாயத்துக்காகப் பேசுபவர்களைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிட வேண்டும். அவை காலப்போக்கில் நீர்த்துப்போகும். அதைக்கண்டு பயப்பட வேண்டியதில்லை. ஆனால், ஒரு விஞ்ஞானி இந்த விஷயங்களில் அமைதியாக இருந்துவிடக் கூடாது.
அவர்கள் சொல்வதிலிருக்கும் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமில்லை, அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுமே இதில் வாய்திறந்து பேச வேண்டும். அதுமாதிரியான போலி அறிவியல்களைத் தக்க ஆதாரங்களோடு போட்டுடைக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்களாக அது அவர்களுடைய கடமை."
"இந்தப் போலி அறிவியல் சூழலியல் பாதுகாப்பையும் பாதிக்கிறதா! மக்களிடம் பரவிக்கொண்டிருக்கும் இதுமாதிரியான விஷயங்களைக் கலைந்து உண்மைகளை எப்படிக் கொண்டுசெல்வது?"
"அறிவியல்பூர்வ மனப்பான்மை என்பது ஒரு சமுதாயத்துக்கு மிக முக்கியமானது. எதையும் பகுத்தறியும் திறன் சமுதாயத்தில் வளர வேண்டும். அது நம்மிடம் மிகக் குறைவாகவே இருந்தது. தற்போதும் அப்படித்தான் இருக்கிறதென்றாலும் ஓரளவுக்கு அது மாறிவருகிறது. ஒருவர் அறிவியலுக்குப் புறம்பான கருத்தைச் சொல்லும்போது பெரும்பாலானவர்கள் அவரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். மக்கள் மத்தியில் அறிவியல் பார்வை வளர்ந்து வருகிறது. முன்பே சொன்னதுபோல் மக்கள் அறிவியல் மூலமாகவும் அறிவியல்பூர்வ மனப்பாங்கை வளர்த்தெடுக்க முடியும். அறிந்தவர்கள் அனைவரும் இதற்காக உழைத்துக்கொண்டேயிருந்தால் போதும். அவை தானாக நீர்த்துப்போய்விடும்."