மன்னார் வளைகுடா, உலகப் புகழ்பெற்ற உயிர்க்கோளக் காப்பகம். சுமார் 10,500 சதுர கிலோ மீட்டரில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் இனங்களையும், கடற்பசு, டால்பின், திமிங்கிலம், கடற்குதிரைகள் போன்ற அரியவகை உயிரினங்கள் மற்றும் கடல்பாசி, பவளப்பாறைகள், கடல் புற்கள், கடல் தாவரங்கள் எனப் பல்லுயிர்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. இவை மட்டும்தான் வெளியுலகுக்குத் தெரிந்தவை. இதுவல்லாமல் ஏராளமான கனிம வளங்களையும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், இயற்கை வாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களையும், நிலக்கரி படிமத்தையும் கொண்டிருக்கிறது.
தமிழகக் கடற்பகுதியும், மன்னார் வளைகுடாவும் தற்போது மிகப்பெரும் ஆபத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. அதற்குக் காரணம், அவற்றில் அடங்கியிருக்கும் அளவில்லாத இயற்கை வளங்களே எனலாம். அவைதான், அவற்றுக்குக் காவு கொடுக்கும் காரணியாக அமைந்துவிடக்கூடிய சூழல் உள்ளது.
ஐ.நா சபை கடந்த சில தினங்களுக்கு முன் வெளிட்ட அறிக்கையில் சுமார் 10 லட்சம் உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை பவளப்பாறைகள், 400 வகையான சுறா மீன்கள், 120 வகையான கடல்வாழ் பாலூட்டிகள் எனப் பெரும்பாலும் கடல் உயிரினங்களே கடும் ஆபத்தில் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதற்கு முழுமுதற் காரணம் “மனிதனின் தவறான செயல்பாடுகள் (human error) என்று கூறி முற்றுப்புள்ளி வைக்கிறது அறிக்கையின் முடிவுகள். மனிதனின் அதிகப்படியான நுகர்வு, மீன்பிடித்தல், பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பயன்பாடுகளால் கடல்வளம் அழிந்துவருவதாகத் தெரிவிக்கிறது. மேலும் ஒரு வருடத்துக்கு 40 கோடி டன் நெகிழிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
கடல்வள அழிப்பில் எண்ணெய் நிறுவனங்களின் பங்கு:
பிளாஸ்டிக் கழிவுகளைவிடவும் மோசமான காரணி ஒன்று, தன் மீது யார் கவனமும் விழாதவாறு கடல்வளத்தைப் பெருமளவுக்கு மாசுபடுத்திக்கொண்டிருக்கிறது. பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களால் உலகின் பல இடங்களில் கடல்வளம் மாசடைந்துள்ளது. உதாரணமாக, எக்சஸன் வால்டெஸ், பீ.பி போன்ற பல்வேறு நிறுவனங்களால் பல்வேறு காலகட்டங்களில் நூற்றுக்கணக்கான டன் அளவுக்கு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு கடற்பரப்பில் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக அதிகளவிலான மனித உயிர்களும் லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களின் உயிர்களும் பறிக்கப்பட்டுள்ளன. மேலும் கடல்வளங்களும் பெருமளவு அழிக்கப்பட்டுள்ளன.

மெக்சிகோ வளைகுடாவைத் தொடர்ந்து மன்னார் வளைகுடா?
மன்னார் வளைகுடாவைப் போன்றே மெக்சிகோ வளைகுடாவும் ஏராளமான கனிம வளங்களைக் கொண்டது. இந்தக் கடற்பரப்பின் மிசிசிபி ஆற்றுப்படுகையில் கொட்டிக்கிடக்கின்ற வளங்களைச் சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு சுரண்ட முன்வந்தன. இதில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் சுமார் 8,000 அடி ஆழத்தில், நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. 2010-ம் ஆண்டில், திடீரென பயங்கரச் சத்தத்துடன் எண்ணெய்க் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். சுமார் 50,000-லிருந்து 1,00,000 வரையிலான பேரல் எண்ணெய், தினமும் கடலில் கசிந்தது. கிட்டத்தட்ட 6,500 சதுர கிலோ மீட்டரிலிருந்து 1,76,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு, 200 மில்லியன் கேலன் அளவிலான கச்சா எண்ணெய் கடலில் பரவியது. அந்தக் கோரவிளைவில் 82,000 பறவைகள், 25,900 கடல்வாழ் பாலூட்டிகள், 6,000 கடல் ஆமைகள், 10,000-க்கும் மேற்பட்ட மீன்கள் உயிரிழக்க நேரிட்டது. இன்றுவரை அதன்தாக்கம் அப்படியேதான் உள்ளது. மெக்சிகோ வளைகுடாவுக்கு முன்னதாக 2004-ம் ஆண்டில் ஏற்பட்ட டெய்லர் எனர்ஜி எண்ணெய்க் கசிவு இன்றுவரை அந்த நிறுவனத்தால் தடுக்க வழியின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 150 கேலன்வரை எண்ணெய் கசிந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தை மன்னார் வளைகுடாவுடன் பொருத்திப் பார்த்தால் இங்கும் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு மிக அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. மன்னார் வளைகுடாவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, நார்வே மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள், புவிசார் அரசியலில் போட்டி போட்டுக்கொண்டு எண்ணெய் எடுப்பதற்கான ஒப்பந்தங்களை இலங்கை அரசிடம் பெற்றிருக்கின்றன.
1991-ம் ஆண்டு வளைகுடாப் போரின்போது, அமெரிக்காவின் ஊடுருவலைத் தடுப்பதற்காக ஈராக் படையினரால் கரையோரமிருந்த எண்ணெய்க் கிணறுகள் திறக்கப்பட்டு, சுமார் 4,000 சதுர மைல்வரை கடலில் எண்ணெய் பரவியது. அதே ஆண்டில் ஈரான் - ஈராக் போரின்போது ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில், இத்தாலி நிறுவனத்தின் எண்ணெய்க் கிடங்கு வெடித்து, கடலுக்குள் மூழ்கியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் சுமார் 12 ஆண்டுகள்வரை மத்திய தரைக்கடல் பகுதி பாதிப்புக்குள்ளானது. ஒருவேளை தெற்காசிய நாடுகளான சீனா, இலங்கை, இந்தியா இடையே போர் ஏற்படும்பட்சத்தில் மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணெய்க் கிடங்குகளும் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடற்பகுதிகளை உள்ளடக்கிய காவிரிப்படுகையில் வேதாந்தா, ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனங்களுக்கு எண்ணெய் எடுக்கும் உரிமத்தை வழங்கியிருக்கிறது இந்தியா. மொத்தம் 7,000 சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இந்திய அரசு, மூன்று சுற்றுகளாக ஏலமிட்டு வருகிறது.முதல் சுற்று ஏலம் கடந்த 2018-ம் ஆண்டில் 5,099 ச.கி.மீ. பகுதிகளை மூன்று ஹைட்ரோகார்பன் மண்டலங்களாகப் பிரித்து, நிலப்பகுதியில் ஒரு மண்டலத்தை 731 ச.கி.மீ. பரப்பை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும், கடற்பகுதியில் மீதமுள்ள இரண்டு மண்டலங்களை ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனத்திற்கும் ஏலம் விட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் சுற்று ஏலம் மே மாதத்திற்குள் நடந்து முடியும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏல அறிவிப்புகள் நடந்து முடிந்து ஹைட்ரோகார்பன் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள், கடல் படுகைகளில் இருந்து எடுக்கப்பட்டால் காவிரிப்படுகை வரலாறுகாணாத பேரழிவைச் சந்திக்கும். அவ்வளவு பெரிய தொழில்நுட்பம் கொண்ட பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனமே தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால் மூன்று ஆண்டு கடுமையானப் போராட்டத்திற்கும், பொருட்செலவிற்கும் இடையே மெக்சிகோ வளைகுடாவின் எண்ணெய்க் கசிவை ஓரளவிற்குத் தடுக்கமுடிந்தது. ஆனால், இந்தியாவிடம் உள்ள தொழில்நுட்பம் என்னவென்பதற்கு எண்ணூரில் நடந்த எண்ணெய்க்கசிவை அப்புறப்படுத்திய விதமே சாட்சி. நிலத்தில் கசிந்த எண்ணெய்க் கசிவையே அப்புறப்படுத்தும் தொழில்நுட்பம் இல்லாமல் கதிராமங்கலத்திலும், எருக்காட்டூரிலும் ஆற்றுமணலைக் கொண்டு மூடிமறைத்தது ஓ.என்.ஜி.சி. நிறுவனம். கடலில் எண்ணெய் கசிந்தால் என்ன செய்யும் என்பதைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
புயலுக்குத் தாக்குப்பிடிக்குமா எண்ணெய்க் கோபுரங்கள்?
தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள்தான் அதிகளவில் புயல் பாதிப்புக்குள்ளாகக் கூடியவை. தானே, வார்தா, கஜா என தமிழகத்தைக் கடுமையான புயல்கள் தொடர்ந்து தாக்கியுள்ளன. கடற்பகுதியில் அமைக்கும் எண்ணெய்க் கிணறுகள் இதுபோன்ற புயல்களால் நிச்சயம் பாதிப்புக்கு உள்ளாகும். உதாரணமாக 2004-ம் ஆண்டு மெக்சிகோ வளைகுடா பகுதியில் வீசிய ஐவன் புயலால் சுமார் 25 எண்ணெய்க் கிணறுகள் பழுதடைந்து, எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இன்றுவரை அதைச் சரிசெய்ய முடியாமல் பின்வாங்கியது. முக்கியமாகக் கடந்த ஆண்டு வீசிய கெய்ட்டி புயலின் தாக்கத்துக்கு ஆந்திராவின் (கிருஷ்ணா - கோதாவரி படுகை) கடற்பகுதியில் அமைக்கப்பட்ட ஒலிண்டா ஸ்டார் என்ற ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க்கிணறு ஒருபக்கமாகச் சாய்ந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவு நடந்த ஒருமாத காலத்துக்குப் பிறகும் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, அந்தச் சம்பவம் தொடர்பாக மௌனம் சாதித்தார் என்று கூறப்படுகிறது. 'எண்ணெய் நிறுவனங்களை ஒபாமா எளிதில் நம்பிவிட்டார்' என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்படியிருக்க. இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் மன்னார் வளைகுடாவில் அதுபோன்றதொரு கசிவு சம்பவம் நேர்ந்தால் இந்தியா அதை எப்படிச் சமாளிக்கும்? தமிழ்நாடு பார்த்துக்கொள்ளும் என்று தள்ளிவிடுமா. அமெரிக்க அதிபரைப்போல மௌனம் காக்காமல் இந்திய அரசு பொறுப்பேற்குமா என்பது கேள்விக்குறியே..!