கோவை மக்களுக்கு மட்டுமே பரிட்சயமான சின்னத்தம்பி யானை, தமிழகம் கடந்து தேசிய அளவில் அறியப்படும் யானையாக மாறிவிட்டான். சோலைக் காடுகள், கான்கிரீட் காடுகளாக மாறிவரும் நிலையில், வனவிலங்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் தான் வாழ்ந்து வருகின்றன. அதிலும், யானைகள் நிலை மிகவும் மோசம். வழித்தடம் ஆக்கிரமிப்பு, வாழ்விடம் பாதிப்பு போன்ற காரணங்களால் மின்வேலிகளும், ரயில் தண்டவாளங்களும் யானைகளை எமனாக அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. சில யானைகள் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்படும்.

இதனிடையே, விளை நிலங்களுக்கு பாதிப்பு தருவதாகக் கூறி, வனத்துறையினர் கடந்த ஜனவரி மாதம் சின்னத்தம்பி யானையை பிடித்தனர். பிடிக்கும்போதே, தந்தம் உடைந்து, உடல் முழுவதும் காயங்கள் அடைந்து, உறவுகளை விட்டுப் பிரித்து நீண்ட போரட்டத்துக்குப் பிறகு, டாப்ஸிலிப் அருகே உள்ள வரகளியாறு பகுதியில் விடப்பட்டான் சின்னத்தம்பி. இவ்வளவு சித்தரவதைகள் செய்தும், சின்னத்தம்பி ஆரவாரம் இல்லாமல் அமைதியாக சென்றான். இதையடுத்து, சின்னத்தம்பிக்காக அனைவரும் பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், சின்னத்தம்பியோ வரகளியாறு பகுதியில் விட்ட ஒரே வாரத்தில் தன் வாழ்விடத்தைத் தேடி மீண்டும் வெளியில் வந்தான்.

அங்கலக்குறிச்சி பகுதியில் தன் பயணத்தைத் தொடங்கிய சின்னத்தம்பி, உடுமலைப்பேட்டை கண்ணாடிப்புத்தூர் வரை சென்றான். நூறு கி.மீ தூரம் பயணித்தாலும், யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தான் சின்னத்தம்பி. அவன் நினைத்திருந்தால் அந்த வழியில் பல மனிதர்கள், வீடுகள், வாகனங்களை தாககியிருக்க முடியும். சின்னத்தம்பி அதிகபட்சம் செய்த தவறு(மனிதர்களின் பார்வையில்) விளை நிலங்களை சேதப்படுத்தியதுதான். ஆனால், சின்னத்தம்பிகளின் வாழ்விடம் என்ன நிலையில் இருக்கின்றன..? அவை ஏன் விளை நிலங்களை சேதப்படுத்துகின்றன..? என்பது குறித்தெல்லாம் யாரும் யோசிக்கவில்லை. இந்நிலையில், தன்னை மீண்டும் பிடிக்க வந்த கும்கி கலீமுடன் விளையாடுவது, உணவு சாப்பிடுவது என்று சமத்துக் குட்டியாக இருந்து தன் குணத்தையும், தன் இனம் சந்தித்து வரும் பிரச்னை குறித்தும் உலகுக்கு உரக்க சொன்னான் சின்னத்தம்பி.

இதைத்தொடர்ந்து, சின்னத்தம்பியை அதன் வாழ்விடத்திலேயே விடவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. சமூக வலைதளங்களிலும் பேசுபொருளானான். சின்னத்தம்பி பாதுகாப்பு குழு தொடங்கப்பட்டது. அதற்குள், சின்னத்தம்பியால் விளை நிலங்கள் சேதப்படுத்துப்படுவதாக மீண்டும் புகார் எழுந்தது. சின்னத்தம்பியை பிடித்து, கும்கியாக மாற்று வனத்துறை முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், "சின்னத்தம்பியை பிடித்து வனத்துறை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனால், பிப்ரவரி 15-ம் தேதி மயக்க ஊசி செலுத்தப்பட்டு சின்னத்தம்பி மீண்டும் பிடிக்கப்பட்டான். இந்தமுறை சின்னத்தம்பி கூண்டில் அடைக்கப்பட்டான். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்த சின்னத்தம்பி கூண்டில் அடைக்கப்பட்டு, இன்றுடன் 100 நாள்கள் ஒடிவிட்டன.
அவ்வபோது சின்னத்தம்பி குறித்து, வனத்துறை அதிகாரிகளிடம் கேட்போம். அவனை நேரில் பார்க்கவும் முயற்சி செய்தோம். ஆனால், தற்போது சின்னத்தம்பிக்கு பயிற்சியில் முக்கியமான காலகட்டத்தில் இருப்பதால், அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

சின்னத்தம்பி குறித்து உலாந்தி பகுதி வனச்சரகர் நவீன்குமார், "சின்னத்தம்பிக்கு இயற்கை உணவுகள் கொடுத்து வருகிறோம். அதை அவன் நன்கு உட்கொள்கிறான். இதனால், சின்னத்தம்பியின் எடையும் குறையவில்லை. சின்னத்தம்பி ஏற்கெனவே மனிதர்களுடன் பழகியதால், அதை பழக்கப்படுத்துவது பாகன்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கிறது. எங்களுக்கு சின்னத்தம்பியோ, சின்னத்தம்பிக்கு நாங்களோ எந்த கஷ்டத்தையும் கொடுக்கவில்லை. அதன் உடல்நிலை கவலைக்கிடம் என்று வரும் தகவல் எல்லாம் உண்மையில்லை. தற்போது கயிறு உதவியுடன் பாகன்கள் சின்னத்தம்பி மீது அமர்ந்துவிட்டனர். விரைவில், எந்த உதவியும் இல்லாமல் பாகன்கள் சின்னத்தம்பி மீது அமர்வார்கள். அதன் பிறகு, சின்னத்தம்பியை கூண்டில் இருந்து வெளியில் கொண்டு வந்துவிடுவோம். அதையடுத்துதான், சின்னத்தம்பியை கும்கியாக மாற்றலாமா என்பது தொடர்பாக முடிவு செய்வோம்" என்றார்.

சின்னத்தம்பிகளின், வாழ்விடத்தில் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும். சூழல் பாதுகாவலர்களான யானை உள்ளிட்ட வனவிலங்குகளை அதன் வாழ்விடத்தில் வாழவைப்பதே அறம்.