இந்தியாவைச் சேர்ந்த குப்தா குடும்பத்தின் நிறுவனங்கள், தென்னாப்பிரிக்காவில் மிக முக்கியமான குழுமங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவர்களின் இல்லத் திருமண நிகழ்வு உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆலியில் (Auli), கடந்த 18 முதல் 22-ம் தேதிவரை நடைபெற்றது. அந்தத் திருமண நிகழ்வில் உற்பத்தியான குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது அந்த நகராட்சி நிர்வாகம், என்ற செய்தி நாம் அறிந்ததே.

திருமண வேலைகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில், குப்தா சகோதரர்களான அஜய் குப்தா மற்றும் அதுல் குப்தா இருவரும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், திருமணம் நடக்கவுள்ள கமோலி (Chamoli) மாவட்ட நிர்வாகத்திடம் 3 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்தியிருந்தனர். தற்போது திருமணம் முடிந்துவிட்ட நிலையில், அந்த வைப்பு நிதியைத் திருப்பித் தருவது குறித்த வழக்கு விசாரணையை வருகின்ற ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது அந்த மாநில உயர்நீதிமன்றம்.
ஆரம்பகட்டத் தகவல்களின்படி அங்கு 4000 கிலோ குப்பைகள் குவிந்திருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது, ஜோஷிமாத் நகராட்சி நிர்வாகம் எவ்வளவு கழிவுகள் சேர்ந்துள்ளன என்ற கணக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி திருமணம் நடந்த இடத்தில் சுமார் 240 குவின்டால், அதாவது 24,000 கிலோ குப்பைகள் கிடக்கின்றன. அதைத் தினமும் நான்கு லாரிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுத்தம் செய்தவண்ணம் இருக்கிறார்கள். இந்த நிலையில், இந்தக் கழிவுகளை அகற்றும் செலவுக்காக 54,000 ரூபாயை குப்தா சகோதரர்கள் வழங்கியுள்ளனர்.

Photo Courtesy: Twitter/@ANI
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வனத்துறை, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கமோலி மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 13 அதிகாரிகள் திருமணத்தின்போது கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருமணத்தில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், முதல்வர் வருகைக்காகப் போடப்பட்டிருந்த ஹெலிபேடில் திருமணத்துக்கு வந்த விருந்தினர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவந்து அங்கிருந்து மகிழுந்துகளில் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அதிகாரிகள் திருமணத்தில் எந்தவித விதிகளும் மீறப்படவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்தத் திருமணத்தில் உற்பத்தியான கழிவுகளை முப்பதாம் தேதிக்குள் அகற்றிவிடுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதைக் கணக்குப் பார்த்து அவற்றை அப்புறப்படுத்த எவ்வளவு செலவு ஆனது ஆகிய தகவல்கள் இந்த மாத இறுதியில் தெரியவந்துவிடும். அந்தத் தகவல், குப்தா சகோதரர்கள் செலுத்திய மூன்று கோடி வைப்புத் தொகையைத் திருப்பித் தரவேண்டுமா இல்லையா என்ற வழக்கிலும் கவனத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.