'செவ்வாயின் பரப்பை பற்றி நமக்குத் தெரிந்த அளவுகூட நமது ஆழ்கடல் பற்றி தெரியாது' எனப் பிரபல இயற்கை வர்ணனையாளர் டேவிட் அட்டன்ப்ரோவ் 'Planet Earth II' தொடரில் குறிப்பிடுவார். அது முற்றிலும் உண்மையான ஒரு விஷயம்தான். பல கிலோமீட்டர் ஆழம் செல்லும் கடல்களில் நாம் சென்றதும் பார்த்ததும் மிகவும் குறைவானதைத்தான். ஆழம் செல்ல செல்ல கடல்நீரின் அழுத்தம் அதிகமாகும். சூரிய ஒளி அவ்வளவு தூரம் ஊடுருவமுடியாது என்பதால் அங்கு இருள் சூழ்ந்திருக்கும். ஆனால், இந்த ஆழத்தில் நிலவும் கடுமையான சூழலிலும், மர்ம உயிரினங்கள் பல வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் பலவற்றை நாம் இதுவரை பார்த்திருக்கவே மாட்டோம். சில கிலோமீட்டர் ஆழம்வரை செல்லும் இயந்திரங்களே இதுவரையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்படி நாம் பெரிதும் அறியாத ஒரு மர்ம உயிரினம்தான் ராட்சத கனவா மீன் (Giant Squid).

இந்த ராட்சத கனவா மீன் பற்றி புராணக் கதைகள் பல இருக்கின்றன. 'க்ரகேன்' (Kraken) என்ற கடலில் வாழும் ராட்சத உயிரினம் பற்றி நார்வே, டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் வாழ்ந்த நார்ஸ் மக்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அந்த நார்ஸ் கதைகளின்படி இது நார்வே, கிரீன்லாந்து கடல்களில் இருப்பதாக முன்பு நம்பப்பட்டது. இந்த நார்ஸ் மக்கள் கடல்கடந்து பல ராஜ்ஜியங்களைக் கைப்பற்றிய வைக்கிங்ஸ் காலத்தில் கடல் மாலுமிகள் பெரிதும் அச்சப்பட்டது இந்த க்ரகேன் கதைகளைக் கேட்டுத்தான்.
ஏனென்றால், இந்தக் கதைகளின்படி க்ரகேன் எப்போது வரும், எப்படி வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆழ்கடலில் நேராகக் கப்பலுக்கு கீழ் அவை அமைதியாக மறைந்திருக்கக்கூடும். அது தாக்கினால் மொத்த கப்பலையும் அப்படியே கடலுள்ளே இழுத்துவிடும் என்பர். இதற்காகவே வலையில் அதிக மீன்கள் சிக்கினால் அந்த இடத்தைக் காலிசெய்துவிட்டு உடனே கிளம்பிவிட வேண்டும் என்று கூறுவர். காரணம், ஆழ்கடலில் க்ரகேன் இருந்தால் பயத்தில் மீன்கள் அதிக அளவில் மேற்பரப்புக்கு வந்துவிடுமாம். அதனால், இப்படி நடக்கும்போது அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்துதான் என்பர். சில நேரங்களில் இவற்றைச் சிறிய தீவுகள் என்று நினைத்துவிடுவராம் மாலுமிகள். அந்த அளவு பெரிதாக இருக்கும் என்பர். 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' போன்ற பிரபல ஹாலிவுட் படங்களிலும் தோன்றியிருக்கிறது இந்த 'க்ரகேன்'. ஆனால், இது அனைத்துமே கட்டுக்கதைகள்தான் இதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

ஆனால், காலப்போக்கில் இவர்கள் சொல்லுமளவுக்கு இல்லையென்றாலும் ராட்சத கனவா மீன்கள் ஆழ்கடலில் இருக்கின்றன என்பது கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாகத்தொடங்கியது. 2012-ல் முதல்முறையாக ஜப்பான் கடல் பகுதியில் கேமராவில் வீடியோவாக ஆழ்கடலில் படம்பிடிக்கப்பட்டது இப்படியான ஒரு ராட்சத கனவா மீன். இது ஆழ்கடல் ஆராய்ச்சியில் பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. அதில் 4 மீட்டர் வரை வளர்ந்திருந்த குட்டி படம்பிடிக்கப்பட்டது. முழுவதுமாக வளர்ந்தால் 10 மீட்டர் நீளத்தை அது எட்டலாம் என்று கணித்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
இப்போது இரண்டாம் முறையாக அமெரிக்க கடல்பகுதியில் இந்த உயிரினத்தை வீடியோவாகப் படம்பிடித்துள்ளது ஒரு குழு. மெக்ஸிகோ வளைகுடாவில் 759 மீட்டர் (2,500 அடி) ஆழத்தில் இந்த ராட்சத கனவா மீன் கேமராவில் சிக்கியிருக்கிறது. National Oceanic and Atmospheric Administration(NOAA) உதவியுடன் இந்த ஆராய்ச்சிக் குழு இதைச் சாதித்திருக்கிறது. இந்தக் குழு 'மிட்நைட் ஸோன்' என அழைக்கப்படும் கடும் ஆழமான பகுதியில் (1,000 மீட்டர் ஆழம்) ஒளி இல்லாமல் வாழும் உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்தது. "Journey into Midnight" எனப் பெயரிடப்பட்ட இந்த ஆராய்ச்சியில்தான் இந்த வீடியோ படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இது எப்படிச் சாத்தியமானது?
இதற்காக மெதூசா (Medusa) என்ற சிறப்பு கேமரா இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. போலி ஜெல்லி மீன் ஒன்று இதில் பொருத்தப்படும். ஆபத்தின்போது அது வெளியிடும் உயிரொளிர்வு (bioluminescence) அப்படியே இதிலும் வரும்படி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இது இரையை தேடும் விலங்குகளை இதை நோக்கிக் கொண்டுவரும்.
தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ஜெல்லி மீன்கள் தாக்கப்படும்போது ஒருவகையான ஒளியை வெளியிடும். இது தப்பிப்பதற்காக அது கொடுக்கும் இறுதி சிக்னல், இதைக் கண்டு ஜெல்லி மீனைத் தாக்கும் விலங்கைவிடப் பெரிய விலங்கு தனக்கான இரை கிடைத்துவிட்டது என ஜெல்லி மீனைத் தாக்கும் விலங்கை நோக்கிவரும். இதனால் ஜெல்லி மீன் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியான ஒளியைக் கண்டுதான் இந்த ராட்சத கனவா மீன் இந்த மெதூசாவிடம் வந்திருக்கிறது. இது கேமராவில் பதிவாகியிருக்கிறது. இதே தொழில்நுட்பம்தான் 2012-ல் எடுக்கப்பட்ட வீடியோவிலும் பயன்படுத்தப்பட்டது. 5 நாள்கள் வெவ்வேறு இடங்களில் இந்த கேமரா பொறிகள் வைக்கப்பட்டன. இதனால் இறுதியாக 120 மணிநேர காட்சிகள் இவர்களிடம் இருந்தது. இதன் இறுதி சில மணிநேரங்களில்தான் இந்தப் பரிசு இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

Photo: Dante Fenolio
இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்த முனைவர் எடித் விட்டருக்கு இது இரண்டாவது வெற்றிக்கனி. அவர் பேசுகையில், "இப்போதும் இந்த ஆழத்தில் இந்த உயிரினங்கள் எப்படி உயிர்வாழ்கின்றன என்பது மர்மமாகதான் இருக்கிறது. இது போன்ற ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும்தான் ஓரளவு இந்த உயிரினங்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஆனால் இவை பத்தாது" என்றார்.
இந்தக் குழுவைச் சேர்ந்த முனைவர் ஜான்சன் இதைப் போன்ற கண்டுபிடிப்புகள் இயற்கை பாதுகாப்பு உணர்வை மக்களிடையே விதைக்கும் என நம்புகிறார். "நாம் இதுவரை பார்க்காத விலங்குகளை அதன் இருப்பிடத்திலேயே பார்க்கும்போது இயற்கை மீதான வியப்பு நம்மைத் தொற்றிக்கொள்ளும். இயற்கையின் மீதான அன்பு அதிகரிக்கும். தப்பு செய்யக்கூடாது என்ற உணர்வைவிடவும் இயற்கை மீதான இந்த அன்புதான் மனிதனை இயற்கை பாதுகாப்பு நோக்கி நகர்த்தும்" என்கிறார் அவர்.
இந்த ஆராய்ச்சிகளை ஆழ்துளைக் கிணறுகளாக எடுத்துக்கொள்ளலாம். இப்போதுதான் ஆழம்பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். இன்னும் தண்ணீரே வரவில்லை. ஆனால், அது கிடைக்கும்போது பூமியில் வாழும் உயிர்கள் பற்றிய பல உண்மைகள் நமக்குத் தெரியவரும்.