Published:Updated:

`எல்லாம் இந்த இரும்புக்காகத்தான்!' யானைகளைக் கொல்லும் ஒடிசாவின் சுரங்கங்கள்!

Mining
Mining

யானைகளைக் கொல்லும் சுரங்கங்கள்... கொந்தளித்த ஒடிசா மக்களும் சூழலியலாளர்களும்!

எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அது வளர்ச்சித் திட்டமா வீழ்ச்சித் திட்டமா என்பதை அதன் சாராம்சத்தின் தன்மையைப் பொறுத்தே முடிவாகும். திட்டத்தின் சாராம்சம் மக்களுக்கும் அவர்கள் வாழும் நிலத்தின் ஆரோக்கியத்துக்கும் பயனளிப்பதாக இருக்கவேண்டும். ஆனால், அத்தகைய பார்வையை தற்கால அரசுகள் கடைப்பிடிப்பதில்லை. அவர்கள் பொருளாதாரரீதியாக ஒரு திட்டம் எவ்வளவு லாபகரமானது என்பதைப் பொருத்தே வளர்ச்சித் திட்டம் என்று கருதுகிறார்கள். நாம் அரசுகள் அளவிடுவதைப் போல் லாபத்தை வைத்துக் கணக்கிடாமல், நியாயமாகக் கணக்கிட்டால் ஒடிசாவில் மூன்று யானைகளைக் கொன்றுள்ள சுரங்கத் திட்டம் நிச்சயம் வளர்ச்சித் திட்டமில்லை.

Elephant
Elephant

ஒடிசாவின் கேன்ஜார் மாவட்டத்தில் பாலிஜோடி (Balijodi village) என்ற கிராமம் உள்ளது. NH 20 தேசிய நெடுஞ்சாலை அந்தக் கிராமத்திலுள்ள காடாகோன் காப்புக் காட்டை ஊடுருவிச் செல்கிறது. கடந்த 22-ம் தேதி, அதிகாலை நான்கு மணிக்கு பத்து யானைகளைக் கொண்ட மந்தை ஒன்று அந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல முயன்றபோதுதான் இந்தத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. அந்தச் சாலை வழியாக அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த இரண்டு லாரிகள் மோதியதில் மந்தையிலிருந்த மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. காட்டுப்பகுதிக்குள் ஊடுருவிச் செல்லும் சாலைகளில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்ற விதிகள் உள்ளன. ஒன்றல்ல இரண்டல்ல, பத்து யானைகள் சாலையைக் கடப்பதைக்கூட கவனிக்காத அளவுக்கு அவ்வளவு வேகமாகச் சென்றுகொண்டிருந்த லாரிகளுக்கு அப்படியென்ன அவசரம்!

ஆம், அவசரம்தான். காடாகோன் மலைப்பகுதியில் மட்டும் 16 இரும்புச் சுரங்கங்கள் செயல்படுகின்றன. அந்தச் சுரங்கங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 2020-ம் ஆண்டோடு முடிவடைகின்றது. ஆகவே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் இரும்பைத் தோண்டியெடுத்துச் சம்பாதித்துவிட வேண்டுமென்ற அவசரம். அந்தப் பதினாறு சுரங்கங்களின் லாப வெறிதான் 22-ம் தேதி மூன்று யானைகள் சாலை விபத்தில் இறக்கக் காரணமாக இருந்தன.

Mining
Mining

வேகவேகமாகச் சுரங்கம் தோண்டி முடிந்த அளவுக்கு இரும்பு எடுத்துவிட வேண்டுமென்று யானை வழித்தடங்களையும் அவற்றின் முக்கிய வாழிடங்களையும் பற்றிய அக்கறையின்றி அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையெல்லாம், 2020-ம் ஆண்டு செல்வதற்குள் அங்கிருக்கும் அத்தனை இரும்பையும் எடுத்துவிட வேண்டும். அதையெல்லாம் எடுத்துவிட்டு அவர்கள் சென்றுவிடுவார்கள். ஆனால், அவர்கள் விட்டுச் செல்லும் வடுக்கள் ஆண்டாண்டு காலத்திற்கும் மாறாமல் இருக்கும். அது அந்தக் காட்டையும் அதைச் சார்ந்திருக்கும் வாழ்வையும் அழித்த நினைவுச் சின்னமாக நிற்கும்.

சின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது? #DoubtOfCommonman

``யானை வழித்தடங்களையும் வாழிடங்களையும் அழித்து இவர்கள் இவ்வளவு அவசரமாக மேற்கொள்ளும் சுரங்கவேலை, யானைகளை மட்டுமல்ல அங்கிருக்கும் பலவகையான உயிரினங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது" - பிஸ்வஜித் மோஹன்டி, ஒடிசா காட்டுயிர்ப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர்.

மேற்கொண்டு இதுகுறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ``சுரங்கம், கல்குவாரி என்று பலவும் அங்கு நடைபெறுவதால் அந்தப் பகுதியின் நீர்நிலைகள், அருவிகள், சிற்றாறுகள் என்று இயற்கையான நீர் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் உப்புத்தன்மை அடைந்தோ அல்லது முற்றிலுமாக வற்றியோ விட்டன. இது கேன்ஜார் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டங்களின் கிராமங்களுக்கு உணவு தேடியும் தண்ணீர் தேடியும் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காகச் சாலையைக் கடக்கும்போதுதான் அந்த மூன்று யானைகளும் விபத்துக்குள்ளாகி இறந்தன.

Elephants
Elephants

இந்தச் சுரங்கங்களும் கல்குவாரிகளும் அங்கிருப்பதால், அந்தக் காட்டுப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களும் தண்ணீர் மாசுபாடு, பற்றாக்குறை, ஒலி மாசு என்று பல பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளார்கள். நீதித்துறை இதைக் கவனித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சூழலியலாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அரசாங்க அதிகாரிகளிடம் எவ்வளவோ முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் இன்றுவரை அதுகுறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 160 கிலோமீட்டருக்கு நீளும் இந்த நெடுஞ்சாலை கேன்ஜாரிலிருந்து பாராதீப் வரை உள்ளது. இந்த நெடுஞ்சாலை தினசரி இரும்புத் தாதுக்களைச் சுமந்து செல்லும் சுமார் 4,000 லாரிகளால் நிரம்பி வழிகின்றது. 

நாளுக்கு நாள் யானை போன்ற பேருயிர்களின் இறப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. காடுகளுக்குள் போடப்படும் சாலைகள் என்ன மாதிரியான ஆய்வுகளின் அடிப்படையில் போடப்படுகின்றன. குறிப்பிட்ட இடத்தில் சாலை போடுவதற்குமுன் அந்தப் பகுதியில் என்னென்ன வகையான ஆய்வுகள் நடத்தப்பட்டன போன்ற விவரங்களை அரசாங்கம் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் வைக்கவேண்டும். வனப்பகுதி வழியாகச் சாலைகளை அதிகமாக்குவது சமீப காலங்களில் வாடிக்கையாக நடந்துவருகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை விலங்குகள் தானே அனுபவிக்கின்றன, நமக்கு லாபம் கிடைக்கிறதல்லவா என்ற போக்கிலேயே இனியும் செயல்பட முடியாது. காலநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் அனைத்தும் பல பேரழிவுகளை ஒவ்வோர் ஆண்டும் நமக்குப் பரிசளித்துக் கொண்டிருக்கின்றன. இனியும், காட்டுயிர்களின் அழிவும் காடுகளின் அழிவும் என்ன மாதிரியான பிரச்னைகளை உருவாக்கும் என்பதை உணராமல் செயல்பட்டால், அதைவிட ஆபத்து வேறெதுவுமில்லை.

அரசே யானை வழித்தடத்தை ஆக்கிரமிக்கலாமா... தமிழக அரசுக்கு `குட்டு' வைத்த நீதிமன்றம்!
அடுத்த கட்டுரைக்கு