Published:Updated:

விழுப்புரத்தில் 7.9 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை, ஒரே வருடத்தில் பலவீனமான அதிசயம்!

Vilupuram Check dam
Vilupuram Check dam

4 ஆண்டுகளாக நீர்வரத்தைப் பார்க்காத தொண்டி ஆற்றில், நீர்வரத்து தொடங்கியதை அடுத்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த இரட்டணை வழியே வீடூர் அணையைச் சென்றடையும் தொண்டி ஆற்றுக்கு விசிட் செய்தோம்.

பருவமழை, தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தையும் பிற மாநிலங்களில் பல இடங்களையும் புரட்டிப் போட்டிருந்தாலும் விழுப்புரம் மாவட்டத்தை எட்டியும் பார்க்காமல் ஏமாற்றி வந்தது. இந்த நிலையில் கடந்த 17, 18-ம் தேதி பொழிந்த மழையால் 4 ஆண்டுகளாக நீர்வரத்தைப் பார்க்காத தொண்டி ஆற்றில், நீர்வரத்து தொடங்கியதாக வந்த செய்தியை அடுத்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த இரட்டணை வழியே வீடூர் அணையைச் சென்றடையும் தொண்டி ஆற்றுக்கு விசிட் செய்தோம்.

Vilupuram Check dam
Vilupuram Check dam
ஷாஹென்ஷா

தொண்டி ஆற்றில் நீர் வந்திருந்தது. ஆனால், அந்த நீர் இரட்டணை மேம்பாலத்தையும் தொடவில்லை என்பது உற்றுநோக்கிய பின்தான் தெரிந்தது. ஆறு இருந்த இடத்தில் தற்போது சீமைக்கருவேலம் முட்புதர் பரந்தும், படர்ந்தும் காணப்பட்டதோடு புதிய தடுப்பணையோ பல்வேறு மணல் மூட்டைகளால் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், முதியோர்கள் சிலரிடம் விசாரித்தோம். "எங்க வாழ்நாளில் இப்படி ஒரு முட்புதரை இந்த ஆற்றில் நாங்கள் பார்த்ததில்லை. தண்ணீர்ப் பஞ்சத்தையும் பார்த்ததில்லை. மேல்ஒலக்கூர், தொண்டூர், பூதேரி, அகலூர், அபியூர், வீரணாமூர், போந்தை, நெற்குணம், மேலாத்தூர் உள்ளிட்ட ஏரிகள் எல்லாம் நிரம்பினால்தான் இந்த ஆற்றுக்குத் தண்ணீர் வரும். முன்பெல்லாம் 50 அடியில் கிடைத்த தண்ணீர், இப்போது 250 அடி போனாலும் கிடைப்பதில்லை. காரணம், இந்த ஆற்றில் தண்ணீர் வந்து 4 வருடங்களுக்கு மேலாகுது. அப்படித் தண்ணீர் வந்தாலும் தேக்கி வைக்கத் தவறிவிடுகிறார்கள். 1980-ல் கட்டிய தடுப்பணை கொஞ்சம் சிதிலமடைந்திருந்தாலும் நன்றாகத்தான் இருந்தது.

Thorny bushes
Thorny bushes
ஷாஹென்ஷா

கடந்த 6 வருஷத்துக்கு முன்னாடி தடுப்பணை உயரத்தையும் கரை உயரத்தையும் உயர்த்தி கட்ட வேண்டும் என்பதற்காக 7.9 கோடி ரூபாய் மதிப்பில் பழைய தடுப்பணையை இடித்துவிட்டு, புது தடுப்பணை கட்டினார்கள். அப்படிக் கட்டியும் பலனில்லை. கட்டி முடித்த வருடமே ஆற்றில் தண்ணீர் வந்து, ஒரு துளி தண்ணீரைக்கூடத் தேக்கி வைக்க முடியவில்லை. தடுப்பணைகளை ஒழுங்காகக் கட்டாததால், மதகு கதவு வழியாகவும் அடித்தளம் வழியாகவும் எல்லாத் தண்ணீரும் ஓடிப்போய்விட்டது. தண்ணீர்தான் நிற்கவில்லை என்று பார்த்தால் தடுப்பதற்கான வசதியும் உறுதியாக இல்லை. கட்டி முடித்த 4 வருடத்திலேயே ஆயிரத்தெட்டு பிளவுகள்.

தடுப்பணை கட்டுகிறோம் என்ற பெயரில் ஊழல் செய்திருக்கின்றனர். சீமைக் கருவேலமரம் நிலத்தடியில் இருக்கும் தண்ணீரை எல்லாம் உறிஞ்சிவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த ஆற்றில் எல்லா இடத்திலேயும் அந்த மரம்தான் படர்ந்திருக்கிறது. பல அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுத்திருக்கிறோம். யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஆனால், ஆற்றின் கரையோரம் பலர் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.

Thorny bushes
Thorny bushes
ஷாஹென்ஷா

திண்டிவனம் நகராட்சிக்கு 3 வருடத்துக்கு முன்பு இங்கிருந்துதான் தண்ணீர் செல்லும். இப்போது அதுவும் போவதில்லை. எங்களுக்கும் குடிநீர்த் தட்டுப்பாடு வரத் தொடங்கிவிட்டது” என்று வருத்தத்தோடு சொல்லிக் கடந்தனர்.

மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து இரட்டணை கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகனிடம் பேசினோம். “புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்பது இரட்டணையில் இல்லை. இருளர் சமூகத்தினர் சிலர் குளத்தின் கரையில் வீடு கட்டியுள்ளனர். மற்றபடி, ஆக்கிரமிப்பு ஏதுமில்லை. தடுப்பணையில் ஏற்பட்ட பழுது குறித்து நானும் மக்களும் பல மனுக்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறோம். இந்தத் தடுப்பணை பழுது பற்றி பொதுப்பணித்துறைதான் முடிவெடுக்க வேண்டும். சீமைக் கருவேல மரங்களை நீக்குவதற்கான படிநிலைகள் தொடங்கியிருக்கிறது. எழுத்துபூர்வமான அனுமதி வந்தவுடன் பணிகள் தொடங்கும்” என்றார்.

MLA Masilamani
MLA Masilamani

பின்னர், மயிலம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ மாசிலாமணியைத் தொடர்புகொண்டு பேசினோம். "தொண்டி ஆறு, இரட்டணை மற்றும் அதைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. தடுப்பணையின் முறையற்ற அமைப்பால் ஏற்பட்ட பழுது, முட்புதர் அகற்றுதல் மற்றும் ஆக்கிரமிப்பு குறித்து செயற்பொறியாளர் சண்முகம் என்பவரிடம் மனு கொடுத்தோம். அன்று அவர், பணியிடமாற்றம் ஆனதால் மறுநாள் ஜவகர் என்பவர் பணி ஏற்று, 'தற்காலிகமாக தண்ணீர் செல்லாமல் மணல் மூட்டைகளை கொண்டு அடைத்து தருகிறோம்.விரைவாகவே அந்த தடுப்பணையை சீர் செய்வதற்கும்,கரையை உயர்த்துவதற்கும் நிதி வாங்கி தருகிறோம்’ என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், ஒரு வருடம் ஆகப்போகிறது. தற்போது இரண்டு மாதத்திற்கு முன்பு மனு கொடுத்தோம். இன்று வரை எந்த வேலையும் செய்யவில்லை.

இதுகுறித்து, மூன்று தினங்களுக்கு முன்பு உதவி நிர்வாகப் பொறியாளர் சுமதியிடம் பேசினேன். அவரோ, `தற்போது நிதி இல்லை அடுத்த வருடம் செய்துகொடுக்கிறோம்’ என்றார். குடிமராமத்து திட்டத்துக்கு பல கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால், முக்கிய வாழ்வாதார பிரச்னையான இதைக் கண்டுகொள்வதில்லை. மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்துள்ளேன். ஆனால், இதுவரை அந்தப் பகுதியை புனரமைக்க ஒரு ரூபாயும் ஒதுக்கவில்லை” என்றார்.

இந்த நிலையில், மறுதினமே தடுப்பணையைப் பார்வையிட்ட எம்.எல்.ஏ மாசிலாமணி, "இன்னும் 10 தினங்களுக்குள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில் மக்கள் மற்றும் விவசாயிகளுடன் கூட்டேரிபட்டு வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

மண்ணால் கட்டப்பட்ட அணை... மண்ணுக்குள் மூழ்கிய கோயில்! - பவானி அணை சுவாரஸ்யங்கள்

இதுதொடர்பாக உதவி நிர்வாகப் பொறியாளர் சுமதியிடம் பேசினோம். "எம்.எல்.ஏ-விடம் நான் அடுத்த வருடம் தயார்செய்து தருவதாகக் கூறியதற்குக் காரணம், தனியாக இப்பணி தொடர்பாக அரசிடம் நிதி கேட்கும்போது குறைவாகவே கிடைக்கிறது. அடுத்த வருடம் குடிமராத்து பணியில் சேர்த்துவிட்டால் பணியை முடிப்பதற்கான அனைத்து நிதியும் கிடைக்கும் என்பதால்தான். சீமைக் கருவேல மரங்களை அகற்ற வாகனத்தை வரசொல்லி இருக்கிறோம். தடுப்பணையின் கதவை சரிசெய்ய முன்பு ஒருவரிடம் டெண்டர் கொடுத்திருந்தோம். காலம் கடந்துசெல்வதால் மற்றொருவரிடம் பேசியிருக்கிறோம். முதலில் பணியைத் தொடங்குபவர்களுக்கே டெண்டர் கொடுப்போம். இதற்கு நிதி மிகவும் குறைவாகவே உள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு