தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு, ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் திருப்பூர் வனக் கோட்டத்தில் மருள்பட்டி குளம், பாப்பான் குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல் குளம், ஒட்டுகுளம், பெரியகுளம், செங்குளம், ராயகுளம், தேன்குளம், சின்ன ஆண்டிபாளையம் குளம், சாமளாபுரம் குளம், ராமியம்பாளையம் குளம், சங்கமாங்குளம், சேவூர் குளம், செம்மாண்டம்பாளையம் குளம், தாமரைக்குளம், நஞ்சராயன்குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் அணை போன்றவற்றில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

இதில், வனத்துறையினருடன் திருப்பூர் சுற்றுச்சூழல் அமைப்பு, பள்ளி மாணவர்கள் இணைந்து இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உதவி வனப் பாதுகாவலர் கணேஷ்ராம் கூறுகையில், ``திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி பிற்பகல் வரை பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. மாணவர்களுக்கு பறவைகள் இனம் கண்டறிவது குறித்து ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டது. நீர்நிலைகள் மற்றும் அவற்றின் அருகிலுள்ள உள்ள புதர்கள் ஆகியவற்றில் உள்ள பறவைகள் கணக்கிடப்பட்டன.

அதில், நத்தை குத்தி நாரை, புள்ளி மூக்கு வாத்து, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, பாம்பு தாரா, நீர் காகம், சாம்பல் நாரை, செந்நீல நாரை, நீலதாலைக்கோழி, நாமக்கோழி, தாமரைக்கோழி, மண் கொத்தி, சிறிய நீல மீன்கொத்தி, முக்குளிப்பான், வெள்ளை அரிவாள் மூக்கன், நீலவால் கீச்சன், தவிட்டுக் குருவி, நீலவால் பஞ்சுருட்டன், தையல் சிட்டு, ஊதா தேன்சிட்டு, பனை உழவாரன், வால் காக்கை, சின்ன கீழ்க்கைக் சிறகி, சூரமாறி, பொறி மண் கொத்தி, பொறி வல்லூறு, குள்ளத் தாரா போன்ற 54 வகையான பறவைகள் கணக்கிடப்பட்டன'' என்றார்.