Published:Updated:

நிறம் மாறும் உம்பளாச்சேரி மாடுகள்... வேற எந்த நாட்டு மாடுகளிலும் இல்லாத பல ஆச்சர்யங்கள்! | Video

உம்பளாச்சேரி மாடுகள்
News
உம்பளாச்சேரி மாடுகள்

"மழையாவது, வெயிலாவது... எதுவும் எங்களை ஒண்ணும் பண்ண முடியாது என சவால் விடும் மாடுகள் இவை. எந்த சிதோஷனநிலையிலும் வெட்டவெளியில் கிடந்தாலும் அதனை எதிர்கொண்டு ஆரோக்கியமாக வளரக்கூடியவை!"

Published:Updated:

நிறம் மாறும் உம்பளாச்சேரி மாடுகள்... வேற எந்த நாட்டு மாடுகளிலும் இல்லாத பல ஆச்சர்யங்கள்! | Video

"மழையாவது, வெயிலாவது... எதுவும் எங்களை ஒண்ணும் பண்ண முடியாது என சவால் விடும் மாடுகள் இவை. எந்த சிதோஷனநிலையிலும் வெட்டவெளியில் கிடந்தாலும் அதனை எதிர்கொண்டு ஆரோக்கியமாக வளரக்கூடியவை!"

உம்பளாச்சேரி மாடுகள்
News
உம்பளாச்சேரி மாடுகள்

இந்தியாவில் வேறு எந்த நாட்டின மாடுகளுக்கும் இல்லாத பல தனித்துவமான ஆச்சர்யங்களை கொண்டது உம்பளாச்சேரி மாடுகள். காவிரி டெல்டா மாவட்டங்களின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகவே உம்பளாச்சேரி மாடுகள் திகழ்கின்றன. அறிவாற்றல், கடும் உழைப்பு, உடல் வலிமை, நோய் எதிர்பாற்றல், மனிதர்களிடம் காட்டும் பாசம், சத்து மிக்க கழிவுகளை வழங்கி மண்ணை வளப்படுத்துதல் ஆகியவை உம்பளாச்சேரி மாடுகள் பற்றி பலரும் அறிந்த பொதுவான சிறப்புகள். ஆனால், இந்த மாடுகளை பற்றிய விநோத ஆச்சர்யங்கள், உம்பளாச்சேரி மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களுக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.

உம்பளாச்சேரி மாடுகள்
உம்பளாச்சேரி மாடுகள்

உம்பளாச்சேரி மாடுகளின் வாழ்வியலையும், இவற்றின் வரலாற்றையும் ஆவணப்படமாகப் பதிவு செய்ய, இவற்றின் பூர்வீக பூமியான நாகப்பட்டினம் - திருவாரூர் மாவட்டங்களின் எல்லையோர கிராமங்களான உம்பளாச்சேரி, கொருக்கை, ஓரடி அம்பலம், பாமணி உள்ளிட்ட கிராமங்களுக்குள் உலா வந்தோம். பெரும்பலான வீடுகளில் உம்பளாச்சேரி மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இப்பகுதி மக்களின் வாழ்வியலோடு இம்மாடுகள் இரண்டற கலந்து இழையோடி வாழ்கின்றன. இந்த மாடுகளுக்கு தீவனச் செலவுகள் கிடையாது. மேய்ச்சலின் மூலம் கிடைக்கும் புற்களையும் மூலிகைத் தாவரங்களையும் சாப்பிட்டு வளர்வதால், இவை ஆரோக்கியமாக வளர்கின்றன.

இம்மக்களின் பிரதான தொழில் விவசாயம். அதிக சேறு நிறைந்த நிலத்திலும் கூட, அநாயாசமாக நீண்ட நேரம் உழவு ஓட்டும் உம்பளாச்சேரி காளைகள், வண்டி மாடுகளாக பழக்கப்படுத்தப்பட்டு பல டன் எடை வரை பாரம் இழுக்கின்றன. உம்பளாச்சேரி காளைகள் உருண்டு திரண்ட திமிலுடன் தோற்றமளிக்கின்றன. சமீபகாலமாக, ஜல்லிக்கட்டுக்கும் பழக்கப்படுத்தப்பட்டு போட்டிகளில் பங்கேற்பதால் வெளிமாவட்டங்கலில் இருந்து பலர் இங்கு வந்து உம்பளாச்சேரி காளை கன்றுக்குட்டிகளை அதிக விலை கொடுத்து வாங்கி செல்கிறார்கள்.

ஒரு வயது நிறைவடைந்த காளை கன்றுக்குட்டி, 15 ஆயிரம் ரூபாய் வரை விலைப்போகிறது. உம்பளாச்சேரி நாட்டுப் பசுக்களின் பால், சத்துக்கள் நிறைந்தவை. இதில் மருத்துவ குணங்கள் அதிகம். இந்தியாவில் உள்ள நாட்டின மாடுகளிலேயே உம்பளாச்சேரி மாடுகளின் சாணம் மற்றும் கோமியத்தில்தான் வீரியமிக்க நுண்ணூயிர்கள் கோடிக்கணக்கில் நிறைந்திருப்பதாக, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்றவர்கள் பதிவு செய்திருப்பதாக பெருமிதப்படுகிறார், உம்பளாச்சேரி மாடுகள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஜானகிராமன்.

உம்பளாச்சேரி மாடுகள்
உம்பளாச்சேரி மாடுகள்

"உம்பளாச்சேரி மாடு ஒண்ணு இருந்தாலே போதும், பல ஏக்கர் விவசாயத்துக்குத் தேவையான உரம் கிடைச்சிடும். இந்த மாடுகளோட சாணமும் சிறுநீரும் மண்ணுல பட்டால், அந்த நிலம் பொண்ணு விளையுற பூமியா மாறிப் போயிடும். அதாவது பயிர்கள் அந்தளவுக்கு செழிப்பா விளையும். இதனாலதான் வெளிமாவட்டங்கள் மட்டுமில்லாம கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்கள்ல இருந்தெல்லாம் கூட, இயற்கை விவசாயிகள் இங்கே வந்து மாடுகளை வாங்கிட்டு போறாங்க. கன்றுக்குட்டியுடன் கூடிய தாய் பசு 25-32 ஆயிரம் ரூபாய்க்கு விலை போயிக்கிட்டு இருக்கு. உம்பளாச்சேரி பசுவோட பால், தயிர், நெய்ல வாசனையும் சுவையும் அதிகமா இருக்கும். இதனாலதான் காளமேகப்புலவர் 'முத்துமுத்தாய் நெல் விளைந்தாலும் உம்பளாச்சேரி மோருக்குச் சோறு கிடைக்காது'னு ஒரு பாடல்ல எழுதியிருக்கார்.

மழையாவது, வெயிலாவது... எதுவும் எங்களை ஒண்ணும் பண்ண முடியாது என சவால் விடும் மாடுகள் இவை. எந்த சிதோஷனநிலையிலும் வெட்டவெளியில் கிடந்தாலும் அதனை எதிர்கொண்டு ஆரோக்கியமாக வளரக்கூடியவை’’ என்றார்.

ஜானகிராமன்
ஜானகிராமன்

இதே பகுதியைச் சேர்ந்த விவசாயியும் ஓய்வுப்பெற்ற ஆசிரியருமான வீரையன், "உம்பளாச்சேரி மாடுகளை மிக எளிதா அடையாளப்படுத்தி கண்டுபிடிச்சிடலாம். நெத்தி வெள்ளை, நாலு கால் வெள்ளை, வால் வெள்ளை... இந்த மூணு அடையாளங்களும் கண்டிப்பா இருக்கும். அதாவது, நெத்தியில நட்சத்திர குறியிடு மாதிரி வெள்ளை நிறம் இருக்கும். நாலு கால்கள்லயும் குளம்புப் பகுதிக்கு மேல வெள்ளை நிறத்துல வளையம் மாதிரி இருக்கும். வாலோட நுனிப்பகுதியில வெள்ளை நிறம் இருக்கும். உம்பளாச்சேரி மாடுகளைத் தெற்கத்தி மாடு, மொட்டை மாடு, மோழை மாடு, தஞ்சாவூர் மாடுனு டெல்டா மாவட்டங்களின் மற்ற பகுதிகள்ல வெவ்வேறு பெயர்கள்ல அழைப்பாங்க.

உம்பளாச்சேரி மாடுகள்ல வெண்ணா மாடு, ஆட்டுக்காரி மாடு, கணபதியான் மாடு, சூரியங்காட்டு மாடு பல உட்பிரிவுகள் உண்டு. எங்களோட முன்னோர்கள் இந்த உட்பிரிவுகளின் அடையாளங்களைத் துல்லியமா அடையாளபடுத்தியிருக்காங்க. ஆனால், இப்ப அந்தளவுக்கு அடையாளப்படுத்தி சொல்லக்கூடியவங்க இங்க இல்லை" என்றார்.

வீரையன்
வீரையன்

இக்கிராமங்களில் உள்ள இன்னும் பல விவசாயிகளைச் சந்தித்தோம். இவர்கள் சொல்லும் தகவல்கள் ஆச்சர்யத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.

"உம்பளாச்சேரி கன்றுக்குட்டிகள் பிறக்கும் போது செம்பழுப்பு நிறத்துலதான் இருக்கும், அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு சாம்பல், வெள்ளை அல்லது கறுப்பு நிறமாகவோ மாறிடும். சினையாக இருக்கும்போது, உடல் முழுவதுமே அடர் சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும். கன்றுபோட்ட பிறகு தன்னோட இயல்பான நிறத்துக்கு வந்துடும். இதுமாதிரியான சிறப்புகள் வேற எந்த நாட்டுமாடுகளுக்கும் கிடையாது" என்கிறார்கள்.

"இந்தப் பகுதியில இயற்கையாகவே ‘உப்பளப்புல்’ என்ற ஒரு வகையான புல் அதிகமா வளர்ந்திருக்கும். இதுல அதிக உப்புத்தன்மையும் சத்துக்களும் நிறைஞ்சிருக்கும். இதை சாப்பிடுறதுனாலதான் இந்த மாடுகள் ஆரோக்கியமாவும் திடகாத்திராகவும் இருக்கு. இந்தப் புல்லை ‘உப்பள் அருகு’னு சொல்லுவாங்க. இதுதான் உப்பளச்சேரி என்று மாறி கடைசியில் ‘உம்பளாச்சேரி’ என மருவி வந்துடுச்சி. அதுவே எங்க ஊருக்கும், இந்தப் பகுதி மாட்டிற்கும் பெயராகிவிட்டது" என முத்தாய்ப்பான தகவலைத் தெரிவித்தார்கள் உம்பளாச்சேரி மக்கள்.