சித்ரா பௌர்ணமி... அன்றைய தினத்தில் கல்யாண தீர்த்தம் அழகாக இருக்கும். இரவு அங்குச் செல்கிறோம் வாருங்கள் என நண்பர்கள் என்னை அழைத்தனர். நானும் அவர்களுடன் முழு மனதுடன் இணைந்துகொண்டேன்.
திருநெல்வேலி அருகே உள்ள `பாபநாசம்' மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஓர் அழகான ஊர். அங்கே ஒரு நீர்மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் அகத்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் பகல் நேரத்தில் குளிக்க அனுமதியுண்டு. குளுமையான அகத்தியர் அருவியில் குளித்து மகிழலாம். இரவில் அங்கு குளிப்பதற்கு அனுமதியில்லை. அகத்தியர் அருவியில் நான் பலமுறை குளித்து நீராடியுள்ளேன். ஆனால், அதன் அருகில் கல்யாண தீர்த்தம் என்ற இடம் உள்ளது. அங்கே நான் சென்றதில்லை. ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 40 ஆண்களையும் பெண்களையும் சுமந்து கொண்டு இரவு 9 மணிக்குத் திருநெல்வேலியிலிருந்து பேருந்து நகரத் தொடங்கியது. சுமார் 10 மணியளவில் பாபநாசம் சென்றடைந்தது. ஒரு வனத்துறை சோதனைச்சாவடி அருகே எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டு நாங்கள் நிலா வெளிச்சத்தில் நடக்க ஆரம்பித்தோம்.

இருபுறமும் நீண்ட மரங்கள், வளைந்து நெளிந்து செல்லும் ராட்சச பாம்பு போல் கருநிறத்தில் தார்ச்சாலை நீண்ட தூரத்துக்குக் கண்ணில் தெரிந்தது. இதமான குளிர்ந்த காற்று எங்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றது போல் ஓர் உணர்வு. கல்யாண தீர்த்தம் செல்வது இதுவே முதல் முறை . அந்த நடுச் சாமத்திலும் நீர்மின் நிலையம் அருகில் இலவச சாப்பாடு பரிமாறப்பட்டது. எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், புளியோதரை என வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்திருந்தனர். அதை அங்கே வந்திருந்த மக்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தனர்.
பௌர்ணமி இரவு, நடுச்சாம நேரத்தில் கல்யாண தீர்த்தத்தில் இயற்கையின் படைப்பைக் கண்டு ரசிக்க முடிந்தது. சுமார் 11 மணி அளவில் கல்யாண தீர்த்தம் வந்தடைந்தோம். அந்த அருவிக்கு மேற்புறம் இன்னும் ஓர் பிரமாண்டமான அருவியுள்ளது. அதன் அருகில் செல்ல முடியாது. அருவியில் கொட்டும் சுத்தமான நீர் ஒரு தடாகமாகக் கீழே காட்சியளிக்கிறது. அருவியையொட்டிய மலையில் ஒரு பழைமையான சிவன் கோயில் உள்ளது. அங்கு இடுப்புயர கருங்கல் அகத்தியர் சிலை நின்றுகொண்டிருந்தது. அந்த இடத்திலிருந்த அகத்தியர் சிலை 1992-ல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறினார்கள்.

பின்னர், அமெரிக்க வாழ் ஒரு மென்பொருள் வல்லுநர் இந்த சிலையை அதே இடத்தில் நிறுவப் பொருளுதவி செய்தார் என்றனர். நீர்த்திவலையில் நனைந்தபடிதான் அகத்தியர் காட்சியளித்தார். அந்தச் சிலையின் அருகில் நின்று அருவியைக் கண்டு ரசிக்கலாம். அதன் அருகில் உள்ள படிக்கட்டு வழியே தடாகத்தை அடையலாம். அந்த இடம் கல்யாண தீர்த்தம் என அழைக்கப்படுகிறது!
அருவியின் சாரல் கலந்த குளிர்ந்த தென்றல் சருமத்தில் வருடிக் கிளர்ச்சியூட்டிய வண்ணம் இருந்தது. கூர்ந்து பார்த்தால்தான் மலை கண்ணுக்குத் தெரியும். ஆனால், அதனிடையே துள்ளிக்குதித்து தடாகத்தில் பாயும் அருவி நிலவின் ஒளியில் எதிரொலித்துக் கண்ணைப் பறித்தது. இரவில் இந்த அருவி பார்ப்பதற்கு வெள்ளியை உருக்கி ஓடவிட்டது போல் காட்சியளித்தது. தடாகம் ஒரு பெரிய குளம் போல் காட்சியளித்தது.
நள்ளிரவு நேரத்தில் முழு நிலவின் பிம்பம் தடாகத்தில் அழகாகத் தெரிந்தது. தடாகத்திலிருந்துதான் தாமிரபரணி ஆற்றின் ஒரு கிளை உருவாகிறது. தவழத் தொடங்கும் தாமிரபரணியின் அழகைப் பார்த்து மலையில் வளர்ந்துள்ள செழித்த மரங்கள் தலையசைத்துக் கொண்டிருந்தது. நிலவின் மென்மையான ஒளிக்கற்றையை என்னாலும் மிஞ்ச முடியும் என விண்மீன்கள் கண்சிமிட்டித் போட்டி போட்ட வண்ணமிருந்தது. விண்மீன்களுக்குப் போட்டியாக மின்மினிப் பூச்சிகள் ஆங்காங்கே பிரகாசித்துக்கொண்டிருந்தது.

மேகங்கள் நிலவை மூடிய தருணத்தில் விண்மீன்கள் மற்றும் மின்மினிப் பூச்சிகளின் ஆதிக்கம் அதிகரித்தன. அந்த அழகைக் காணும் எங்கள் கண்கள் ஆனந்த கூத்தாடின. பல கோடி ரூபாய் செலவு செய்தாலும் இப்படி ஓர் அலங்காரம் மனிதனால் சாத்தியமில்லை. அருவியின் மென்மையான இசைக்கும், மின்மினிப் பூச்சியின் நடனத்துக்கும், தகுந்தாற்போல் தவளைகளும், பூச்சி இனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பாடிக்கொண்டிருந்தது. காதுகள் அன்றுதான் பிறவிப்பயனை அடைந்தது. தவளை மற்றும் பூச்சிகளின் பாட்டுக்குத் தகுந்தாற் போல் நடனம் ஆடியபடி தாமிரபரணி தன் பயணத்தைத் தொடர்ந்தது.
மென்மையான குளிர்ந்த தென்றல் ஒரு நறுமணத்தைச் சுமந்து வந்துகொண்டிருந்தது. அது நுரையீரல் வரை சுவாசப்பாதையை உணர வைத்தது. இயற்கை என்றால் சும்மாவா? மேற்குத் தொடர்ச்சிமலை என்றால் சாதாரணமா? உலகின் மூத்த மலை அல்லவா? இங்குள்ள மரங்களும் செடிகளும் பூக்களும் உலகின் தனித்துவம் வாய்த்தவை அல்லவா? உலகின் தலைசிறந்த இடங்களில் இதுவும் ஒன்றல்லவா? காற்றில் கலந்த குளிர்ந்த நீர்த்திவலை நுரையீரலில் ஆவியாகி சுவாசத்தில் குபுகுபு என வெண் புகையாக வெளிவந்த வண்ணம் இருந்தது. காற்றின் தரத்தின் வித்தியாசத்தை என்னால் உணர முடிந்தது.

என்னைச் சுற்றி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என சுமார் நூறு பேர்கள் கோயிலில் பூஜைக்குத் தயாராகிய வண்ணம் இருந்தனர். என்னால் அவர்களைப் பின்பற்ற முடியவில்லை. திடீரென முரசு கொட்டியது ஆலயமணியோசை விண்ணையும் எட்டும்படி எழுந்தது. இளம் வாழை இலையில் சர்க்கரைப் பொங்கலை ஏந்திய வண்ணம் ஒரு சிறுமி என் முன் நின்றுகொண்டிருந்தாள். எனக்குக் கொடுத்தாள் பெற்றுக்கொண்டேன்.
அவள் கண்களில் கொடுப்பதின் மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது. சிறுமியின் துருதுரு கண்கள் மற்றும் அவளின் அழகிய முகம் மனதில் பதிந்தது. சர்க்கரைப் பொங்கலின் சுவை என்னை மயக்கியது. என் நாக்கு இனிப்புக்கு ஒரு மாற்று சுவையைத் தேடியது. என் மனதறிந்து கையில் சுண்டலுடன் வந்தாள் அந்தக் குட்டி தேவதை. அவளிடம் இருந்து சுண்டலைப் பெற்றுக் கொண்டேன். நன்றி என்றேன். கோயில் யாரும் அவளுக்கு நன்றி சொன்னதில்லை போலும், என்னை வித்தியாசமாகப் பார்த்தாள். ஆனால், உதட்டில் ஒரு புன்னகை. அது என் நன்றியை அவள் ஏற்றுக்கொண்டாள் என்பதற்கான சான்றாயிற்று. பார்த்தாலே இலையிலிருந்த சுண்டல் பக்குவமாகச் சமைத்தது என்பதை அறிய முடிந்தது. நிறைய தேங்காய்த் துருவலும், தாளித்த கடுகு, உளுந்தம் பருப்புடன் சுண்டல் மேல் படிந்த எண்ணெய்யில் நிலவொளி எதிரொலித்து மின்னியது. சுவைக்கும் பஞ்சம் இல்லை. சிறிதளவு சர்க்கரைப் பொங்கல், பின் தேவையான மட்டும் சுண்டலால் வயிறு நிரம்பியது. நல்ல அருமையான உணவு.
நிலா வெளிச்சத்ததில் சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்து எங்கள் பேருந்தை அடைந்தோம். வரும் வழியில் சத்தம் இல்லாமல் நடக்கச் சொன்னார்கள். அமைதியாக நடந்தால் இரவில் சுற்றித்திரியும் வனவிலங்குகளைப் பார்க்கலாம் என்றார்கள். எதிர் பார்த்தே நடந்தேன். ஆனால், என் கண்ணில் எந்த வனவிலங்குகளும் தென்படவில்லை. மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். நான் விலங்குகளைப் பார்ப்பதோ விலங்குகள் என்னைப் பார்ப்பதோ இந்த நடு இரவில் நல்லதில்லை என எண்ணிக் கொண்டேன்! அதிகாலை சுமார் 3 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தேன்.

மலைகள் மக்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதை நோக்கிப் பயணப்படத்தான் மனிதர்களுக்கு நேரமில்லை..! நம் இன்றைய வாழ்க்கை இயந்திரமாகிவிட்டது.
பணி, பொறுப்பு, வேலை எனக் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடவேண்டியுள்ளதால் நாள்களும் வாரங்களுக்கு வருடங்களும் நம்மை வேகமாக கடந்து செல்கின்றன. வார இறுதியில் நேரம் கிடைத்தால் தூங்குதே நல்லது என்ற நிலைக்கு மனிதன் வந்துவிட்டான்.
ஆனால், நேரம் கிடைக்கும்போது இத்தகைய சூழல் பயணங்களை மேற்கொண்டால். நம்மை புத்துணர்வுடன் செயல்பட வைக்கும். ஆம், மனதைப் புத்துணர்வாக்கவும், மகிழ்ச்சியைத் தக்கவைக்கவும், கவலைகளை மனதைவிட்டுத் துரத்தியடிக்கவும் இத்தகைய சூழல் பயணங்கள் மனிதனுக்கு மிகவும் உதவுகிறது என்பதை அன்றுதான் உணர முடிந்தது.
இயற்கையிலிருந்து முரண்பட்ட வாழ்க்கையால் நம்முடைய இயல்பான குணங்களை இழந்தோம்... அதனால் மன அழுத்தம் உட்பட பல பிரச்னைகளுக்கு ஆளானோம். இத்தகைய பயணங்களை மேற்கொள்ளும் நபர்களின் வாழ்கையில் இறுக்கம் இல்லாமல், சுறுசுறுப்பாக இருப்பதை அறிய முடிந்தது. மனம் லேசாகி தொலைந்து போனதை அன்று உணர முடிந்தது. இத்தகைய பயணங்கள் மனதைச் சமநிலைக்குக் கொண்டு வரும், இயற்கையோடு இணைவோம். இயற்கையுடனான நம் உறவை மேம்படுத்த இதுபோன்ற பயணங்கள் மனிதனுக்கு அவசியமாகும்.