சென்னையில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை (USAID) இணைந்து செயல்படுத்த உள்ள `இந்தியாவில் காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்பு’ (Trees Outside Forests in India TOFI) திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் இயக்குநர் தீபக் பேசும் போது,
``பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் ஆகியவற்றை நிறுவியதன் மூலம் காடுகளுக்கு வெளியே மரங்களை விரிவுபடுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பருவநிலை நெருக்கடியைச் சமாளிக்கவும், இன்று தொடங்கப்பட்ட புதிய திட்டம் மாநிலத்தின் முன்னேற்றத்தைக் கட்டமைக்கவும், விவசாயச் சவால்களை எதிர்கொள்ளவும், வேளாண் காடுகளை உருவாக்கவும், தமிழ்நாட்டில் விவசாயிகளின் வருமானத்தை மேலும் அதிகரிக்கச் செய்யவும் உதவும்’’ என்றார்.
சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் ஜூடித் ரவின் பேசும்போது, ``இந்தியாவில் காடுகளுக்கு வெளியே மரங்கள்’ திட்டத்தை ஆதரிப்பதில் அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. வனவியல் மற்றும் காலநிலை சவால்களைத் திறம்பட எதிர்கொள்ளும் வேளாண் நடவடிக்கைகளில் பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பின் மீது இத்திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளுக்கு வெளியே மரங்களை விரிவுபடுத்துவது நமது பரஸ்பர காலநிலை மாற்ற இலக்குகளை அடையவும், கரியமில சிக்கல்களை எதிர்கொள்ள உதவுவதுடன் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கும்” என்றார்.
தமிழ்நாடு அரசின் வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு பேசுகையில், ``விஷன் 2023 திட்டத்தின்படி காடு மற்றும் மரங்களின் பரப்பை 33 சதவிகிதமாக அதிகரிக்கும் இலக்குடன் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் சமச்சீரான சூழலியல் அமைப்பை உருவாக்கவும், மாநிலத்தின் இலக்குகளை அடைவதற்கும் `இந்தியாவில் காடுகளுக்கு வெளியே மரங்கள்’ திட்டம் துணைபுரியும்.

என்னதான், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கார்பன் கிரெடிட் என்று பேசினாலும் கடைசியில் விவசாயிகளுக்கு மரம் வளர்ப்பு மூலம் வருமானம் கிடைக்கிறதா? என்பதுதான் முக்கியமானது. விவசாயிகள் வளம் பெற வேண்டும் என்ற நோக்கில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். தற்போது தமிழ்நாட்டில் மரகத பூஞ்சோலை என்னும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து ஒரு ஹெக்டேர் அளவில் தரிசு நிலத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மரகத பூஞ்சோலை திட்டம் ஒரு மாவட்டத்தில் 3 இடங்களில் கொண்டு வரப்படும். இந்த மரகத பூஞ்சோலையை உருவாக்கி, அந்தக் கிராமத்து மக்களிடம் கொடுத்துவிடுவோம். அதிலிருந்து மனிதர்களும் கால்நடைகளுக்கும் உணவும் கிடைக்கும். வருமானமும் உருவாகும். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள 17,000 கிராமங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிச்சயம் பசுமையும் வருமானமும் பன்மடங்கு பெருகும். சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமையை இந்தத் திட்டத்திலும் எங்களுடன் இணைந்து செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள், அரசு உயர் அலுவலர்கள், முன்னோடி மர விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மர விவசாயி `எழில்சோலை’, ``தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் காடுகளுக்கு வெளியே மரம் வளர்க்கும் பணியைப் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டோம். பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதை வரவேற்கிறோம். இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருமானமும் கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டின் பசுமை பரப்பு அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரும் பசுமை ஆர்வலருமான ‘மரம்’ கருணாநிதி,
``மரம் வளர்ப்புக்காக இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் அமெரிக்கா நம் நாட்டில் மரம் வளர்க்க நிதி உதவி செய்கிறார்கள். அதன் பலன் ஒவ்வொரு விவசாயிக்கும் சென்று சேர வேண்டும்’’ என்றார்.
`இந்தியாவில் காடுகளுக்கு வெளியே மரங்கள் திட்டம்’ செப்டம்பர் 2022-ல் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் லீனா நந்தன் மற்றும் அப்போதைய அமெரிக்கப் பொறுப்புத் தூதர் பாட்ரிசியா லசினா ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. அஸ்ஸாம், ஆந்திரா, ஹரியானா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஒதுக்கப்பட்டு, சர்வதேச வேளாண் வனவியல் ஆராய்ச்சி மையத்துடன் (ICRAF) இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.