Published:Updated:

சாலைகளுக்காக வெட்டப்பட்டும் நூற்றுக்கணக்கான பனை மரங்கள்; அரசே விதிகளை மீறுகிறதா?

லாரிகளில் ஏற்றப்படும் பனை மரங்கள்
News
லாரிகளில் ஏற்றப்படும் பனை மரங்கள்

சாலை விரிவாக்கப் பணிக்காக, விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பனைமரங்கள் வெட்டப்பட்டு வரும் செயல் பொதுமக்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

Published:Updated:

சாலைகளுக்காக வெட்டப்பட்டும் நூற்றுக்கணக்கான பனை மரங்கள்; அரசே விதிகளை மீறுகிறதா?

சாலை விரிவாக்கப் பணிக்காக, விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பனைமரங்கள் வெட்டப்பட்டு வரும் செயல் பொதுமக்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

லாரிகளில் ஏற்றப்படும் பனை மரங்கள்
News
லாரிகளில் ஏற்றப்படும் பனை மரங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழக சட்டமன்றத்தில் முதல் முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ``பனைமரங்கள் வெட்டுவது தடை செய்யப்படும். தவிர்க்க முடியாத சூழலில் பனைமரங்களை வெட்ட வேண்டியிருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் அனுமதிக்கப்படும். நியாய விலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; 3 கோடி ரூபாய் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும். 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், 1 லட்சம் கன்றுகளும் முழு மானியத்தில் கொடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

மறுமுனைக்கு சபாநாயகர் அப்பாவு, ``ஆண்டுதோறும் ஒரு லட்சம் பனை விதைகளை வேளாண்மை துறைக்கு நான் தருகிறேன்" என்று கூறி அதிரடி காட்டியிருந்தார்.

இப்படி பனை மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்ட ஓரிரு மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிக்காகப் பனை மரங்கள் வெட்டப்படும் செயல் பொதுமக்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

விழுப்புரம் - புதுவை இடையேயான மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதியான வளவனூர், கெங்கராம்பாளையம் அருகே நூற்றுக்கணக்கான பனை மரங்கள் வெட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக நம்மிடையே பேசிய சமூக ஆர்வலர் கிரில் அலெக்சாண்டர், ``வளவனூர் அருகே, சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரமாக உள்ள பனை மரங்கள் வேக வேகமாக வெட்டப்பட்டு வருகின்றன. ஒரு ராட்சத ஜே.சி.பி எந்திரம் சாலை ஓரமாக உள்ள பனை மரங்களை லாவகமாக வேருடன் பெயர்த்து தள்ளுகிறது. மரம் அறுக்கும் ரம்பத்துடன் தயாராக இருக்கும் பணியாளர்கள் சிலர், ஒரு சில நிமிடங்களில் அந்த மரங்களை துண்டு துண்டாக அறுத்தெடுத்து வேன்களில் ஏற்றி விடுகின்றனர்.

சிறிது நேரத்தில் அந்த இடத்தில் பனைமரம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடுகிறது. இதுபோன்ற பனைமரங்களை உருவாக்குவதற்கு பலப் பத்தாண்டுகள் ஆகும். ஆனால் அவற்றை நொடிப்பொழுதில் அகற்றி விடுகின்றனர். இந்தப் பனை மரங்களை அகற்றும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று கையில் எடுத்து செய்துவருவதாகத் தெரிகிறது" என்றார்.

பனை மரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு பனைத் தொழிலை செய்து வரும் சமூக செயல்பாட்டாளர் பாண்டியன் என்பவரிடம் இது தொடர்பாகப் பேசினோம். `` `பனை மரங்கள் வெட்டப்படக் கூடாது. அவசியம் என்றால் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் வெட்டலாம். இல்லையெனில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியிருந்தார்கள். இருந்தாலும், இதனால் பாதிக்கப்படுவது அடித்தட்டு ஏழை மக்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது இடங்களில் உள்ள ஒரு சில மரங்களை வெட்ட வேண்டும் என்னும்போதுதான் பிரச்னை பண்ணுவார்கள்.

பாண்டியன்
பாண்டியன்

சூளைக்கு மரம் வெட்டுபவர்கள், சாலை விரிவாக்கப் பணிக்காக மரம் வெட்டுபவர்கள் நிச்சயம் பெரிய கான்ட்ராக்ட்காரர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு அரசு அதிகாரிகளை ஏமாற்றி அனுமதி பெறுவது சுலபமானது. இப்போது கூரைக் கொட்டகை முதல் அனைத்தையும் தகர ஷீட்டுகளைக் கொண்டு ஏழை மக்கள் அமைத்துக்கொள்கிறார்கள். வீடுகள் கான்கிரீட் வீடாக மாறி வருகின்றன. அதனால் ஏழை மக்கள் அதிகம் பனை மரங்களை வெட்டுவது கிடையாது.

சூளைகளுக்காகவும், சாயப்பட்டறை பணிகளுக்காகவும்தான் பெரும் முதலாளிகள் மூலமாகப் பனைமரங்கள் அதிகம் வெட்டப்படுகின்றன. இது உடனே தடுக்கப்பட வேண்டியது அவசியமானது. சாலை விரிவாக்கப் பணிகளுக்காகப் பனை மரங்களை வெட்டுவது நியாயமில்லை. இதை அங்குள்ள அரசு அதிகாரிகள்தான் உடனடியாகத் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்களை ஒதுக்கிவிட்டு சாலை போட வேண்டும். ஆனால், அதை யாரும் இங்கு செய்வதில்லை. பனைமரங்கள் பயனற்று இருக்கின்றன என்று கருதுவதால்தான் அவற்றை வெட்டுகிறார்கள்.

உரிய அளவில் முறையாக அவற்றைப் பயன்படுத்தினால், யாரும் அதை வெட்ட மாட்டார்கள். பனைத்தொழில் என்றாலே இழித்தொழிலாகவும், நன்மதிப்பு இல்லாத தொழிலாகவும்தான் இருக்கிறது. அதைச் சரி செய்துவிட்டால் யாரும் அதை வெட்டிவிட மாட்டார்கள். அரசு அதை அடிப்படையில் இருந்தே முறையாக அவற்றைச் சரி பண்ணணும்" என்றார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க விழுப்புரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியரை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.