தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள மரங்களை புதிய செயலி மூலமாகத் துல்லியமாகக் கணக்கெடுக்கும் பணியைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்தப் புதிய முயற்சியால் மரங்கள் பாதுகாக்கப்படுவதோடு, வனப்பரப்பும் அதிகரிக்கத் தொடங்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள். அதேசயம் செல்போன் செயலி மூலம் மரங்களைக் கணக்கெடுக்கும் பணியோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், மரங்களைப் பராமரிக்க, சில சிறப்புத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையை முன் வைக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, ``தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். இது மிகவும் பாராட்டுக்குரியது. சுற்றுச்சூழல் சேவைகளில் ஈடுபடுவோர்களுக்குத் தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்து வருவதால், இப்பணிகளைத் தொய்வின்றி தொடர்ந்து செய்ய முடிகிறது. காலநிலை மாற்றங்களால் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கவுள்ள கடலோர மாவட்டங்கள் மிகுந்துள்ள தமிழகத்தில் காலநிலை மாற்றங்களுக்கென தனி அமைச்சரையே நியமித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பனை மரங்களை வெட்டக் கூடாது என அறிவிப்பு வெளியிட்டு, ரேஷன் கடை மூலமாகப் பனைவெல்லம் விற்பனையைத் தொடங்கியதால் பனை ஆர்வலர்களும், பனை தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், மரங்களைக் காக்க அரசு நிலங்களில் உள்ள அனைத்து மரங்களையும் புதிய செயலி மூலம் துல்லியமான அறிவியல் முறையில் கணக்கெடுக்கும் பணியைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இப்பணியால் மரங்களின் பெயர், இருப்பிடம், அம்மரங்களில் வாழும் பல்லுயிர்கள், மருத்துவ குணங்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும் என்பதால் மக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
அதே நேரத்தில் ஒரு மரத்தை வெட்டினால் இரண்டு மரங்களை நட வேண்டும் என ஒரு அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இரண்டு மரம் என்பதை 20 மரங்கள் நட வேண்டும் என மாற்றி அமைத்தால் மரங்கள் வெட்டப்படுவது சற்று குறையும். ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக மரங்கள் வெட்டப்பட்டால், அதிக எண்ணிக்கையில் மரங்களை உருவாக்க உறுதுணையாக இருக்கும்.

பொது இடங்களில் உள்ள மரங்களைக் கணக்கெடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமை கமிட்டி அமைத்து, அதில் வனத்துறையினர், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இடம்பெற செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் மரங்கள் கணக்கெடுப்பு பணியில் இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்படுவர் என அறிவித்திருப்பது, கணக்கெடுப்பு துல்லியமாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். தமிழகம் முழுவதும் ஏராளமான சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆயிரக்கணக்காண குறுங்காடுகளை உருவாக்கி லட்சக்கணக்கான மரங்களை வளர்த்துள்ளனர். இம்மரங்களை பராமரிக்க சிரமப்பட்டும் வருகின்றனர்.
இதைப் பராமரிக்க அரசு உரிய கவனம் செலுத்திட வேண்டும். சமூக நலனில் அக்கரை கொண்ட பலர், பொது இடங்களிலும் ஏராளமான மரங்களை வளர்த்துள்ளார்கள். அவற்றைப் பராமரிக்கவும் தமிழக அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்.
பொது இடங்களில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் குறுங்காடுகளை உருவாக்குவதற்காக நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை வளர்த்தெடுக்க, தண்ணீர் ஊற்றுதல், கவாத்து செய்தல், களை எடுத்தல், கால்நடைகளால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க கூண்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை செய்ய, நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களைப் பயன்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் இதற்கென தனியாக நிதியும் ஒதுக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான், தமிழ்நாட்டில் மரங்கள் வளர்ப்பு முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும்’’ எனத் தெரிவித்தார்.