
டி.எம்.ராதாகிருஷ்ணா செட்டி அண்ட் கோ கம்பெனியால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மக்களுக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
‘‘கடுமையான மூச்சுத்திணறலால் என் அப்பா இறந்துவிட்டார். எதிர்வீட்டு இளைஞரும், பக்கத்துத் தெருவில் ஒருவரும் புற்றுநோயால் இறந்துவிட்டார்கள். கதவைத் திறந்தாலே கடும் நெடியால் தும்மல் வருகிறது. எனக்குக் கடுமையான சுவாசப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், எங்கள் வீட்டின் அருகிலுள்ள துத்தநாக முலாம் பூசும் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் நச்சுப்புகைதான்’’ - இப்படி நம்மிடம் கொந்தளித்தார் வியாசர்பாடியைச் சேர்ந்த சீனிவாசன்.
சென்னை வியாசர்பாடி கூட்டுறவுத் தொழிற் பேட்டையிலுள்ள டி.எம்.ராதாகிருஷ்ணா செட்டி அண்ட் கம்பெனி என்ற துத்தநாக முலாம் பூசுகிற ஆலையை நோக்கித்தான் மேற்கண்ட குற்றச்சாட்டுகள் நீளுகின்றன. இதையடுத்து, அந்த இடத்துக்குச் சென்றோம். டாக்டர் அம்பேத்கர் அரசு கலை, அறிவியல் கல்லூரியிலிருந்து சற்று தொலைவில், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையை யொட்டி அமைந்திருக்கிறது அந்த ஆலை. நாம் சென்றபோது நெடுஞ்சாலை வரை சூழ்ந்திருந்தது கரும்புகை. ஆலையின் அருகில் ஏராளமான கடைகள், வணிக வளாகம், பள்ளிக்கூடம், கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன. இவை தவிர சர்மா நகர், புதுநகர், சாலைமா நகர், சாஸ்திரி நகர், பக்தவத்சலம் காலனி, காந்தி நகர், பாரதி நகர், சிவகாமி அம்மையார் காலனி என இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஆலையைச் சுற்றி நெருக்கமான குடியிருப்புகள் இருக்கின்றன.
தலைநகர் சென்னை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இளங்கோ,
‘டி.எம்.ராதாகிருஷ்ணா செட்டி அண்ட் கோ கம்பெனியால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மக்களுக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே, அந்த கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை மாவட்ட நிர்வாகம் உட்பட பல்வேறு துறைகளிடம் தொடர்ந்து முறையிட்டு வந்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்குவதற்கு மட்டுமே இந்த ஆலைக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது. ஆனால், 24 மணி நேரமும் ஆலையை இயக்குகிறார்கள். துத்தநாகம் முலாம் பூசப்படுவதால் வெளியாகும் நச்சுப்புகையையும் ரசாயனக் கழிவுநீரையும் சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றுகிறார்கள். அதனால், இங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், வாய்க்கசப்பு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தோல் எரிச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. வணிகர் சங்கத்தினர், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இது குறித்துப் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்றார் ஆதங்கத்துடன்.
ஆலையையொட்டிய பகுதியில் வசிக்கும் கலா என்ற பெண்மணியோ, ‘‘வீட்டுக் கதவையும் ஜன்னலையும் சாத்தியேவெச்சிருக்க வேண்டியிருக்கு. கொஞ்ச நேரம் திறந்தாலே ஆலைப் புகை உள்ளே புகுந்து, மூச்சுத் திணறுது. இதனால கடந்த சில வருஷமாவே எனக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டிருக்கு. டாக்டர்கிட்ட போனா, அவங்களும் நச்சுப்புகையைத்தான் காரணமா சொல்றாங்க... என்ன செய்யறதுன்னே தெரியலை” என்றார் வருத்தத்துடன்.
டாக்டர் கருணாகரன் என்பவர் இந்த ஆலைக்கு அருகில் கிளினிக் வைத்திருந்ததாகவும், நச்சுப்புகை தாங்க முடியாமல் வேறு இடத்துக்கு கிளினிக்கை மாற்றிவிட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, டாக்டர் கருணாகரனிடம் பேசினோம். ‘‘அந்த ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப்புகையைத் தாங்க முடியாமல்தான் கிளினிக்கை அங்கிருந்து மாற்றிவிட்டேன். இந்தத் தொழிற்சாலையில் துத்தநாக முலாம் பூசுவதற்கு ஆசிட் பயன்படுத்துகிறார்கள். அந்த வெப்பத்தால் வெளியேறும் புகையில் மாசு இருக்கும். நச்சு கலந்த கழிவுநீரையும் புகையையும் சுத்திகரித்து வெளியேற்றுவதற்கான தொழில்நுட்பங்கள் இருந்தும்கூட, செலவு பிடிக்கும் என்பதால் அப்படியே வெளியேற்றுகிறார்கள்’’ என்றார். இதற்கிடையே இந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கே.மகேந்திரன் தலைமையில் சமீபத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அந்த ஆலையின் உரிமையாளரான ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டோம். ‘‘1967-ம் ஆண்டிலிருந்து இந்த ஆலையை நடத்திவருகிறோம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத்தான் எங்களிடம் சிலர் பிரச்னை செய்துவருகிறார்கள். எங்கள் மீதான புகார்களில் உண்மையில்லை. மாசு கட்டுப்பாடு வாரியம் உட்பட சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி பெற்று முறைப்படி ஆலையை இயக்குகிறோம். இந்தப் பகுதியில் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த சிலர் உள்நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்’’ என்றார்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் இணை தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டியிடம் பேசினோம். ‘‘சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு எதிராகப் புகார்கள் வந்தன. அங்கு விதிமீறல் நடப்பது எங்கள் ஆய்வில் தெரியவந்தது. எனவே, மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவரின் உத்தரவுப்படி அந்த ஆலையின் மின் இணைப்பைத் துண்டித்திருக்கிறோம்’’ என்றார். அடுத்த சில நாள்கள் கழித்து இந்தப் பிரச்னையை முன்னெடுத்த இளங்கோவிடம் பேசினோம். “ஆலையின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், எங்களுக்குத் தேவை நிரந்தரத் தீர்வு” என்றார்.
சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமை, நிரந்தரமாக அந்த மக்களுக்கு அமையட்டும்!