
நில அபகரிப்பு, வளர்ச்சித் திட்டங்கள், பருவநிலை மாற்றம், காட்டுத் தீ எனத் தொடர்ந்து சிக்கல்களுக்கு ஆளாகும் அமேசான் பழங்குடியினர், முள்ளை முள்ளால் எடுப்பதெனப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
பனிக்கட்டிகள் உருகுகின்றன, மரங்கள் மரிக்கின்றன, விலங்குகள் அழிகின்றன... மனிதனின் நவீனம் வரையும் சித்திரங்கள் எல்லாம், இயற்கை எனும் அவனது வாழ்வாதாரச் சுவர்களை அரித்துக் கொண்டிருக்கின்றன. ‘எதிர்காலம்’ என நாம் சொல்லும் ஒரு கற்பனை உலகம் இன்னும் சில நூறாண்டுகளாவது பிழைத்து நிலைக்குமா என்ற கேள்விகள் ஒருபுறம் சூழ்ந்திருக்கின்றன. மறுபுறம், கடந்த காலத்தை நினைவுபடுத்தும் நம் ஆதிவேர்கள் வெகு வேகமாகத் தொலைந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் இதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தன இரு சூழலியல் நிகழ்வுகள்.
பழங்குடிகளின் டிரோன் பாகுபலி!

நில அபகரிப்பு, வளர்ச்சித் திட்டங்கள், பருவநிலை மாற்றம், காட்டுத் தீ எனத் தொடர்ந்து சிக்கல்களுக்கு ஆளாகும் அமேசான் பழங்குடியினர், முள்ளை முள்ளால் எடுப்பதெனப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
பிரேசில் நாட்டின் பகுதியில் வாழும் உரு-இஉ-வாஉ-வாஉ (Uru-Eu-Wau-Wau) எனும் அமேசான் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமான அடர்ந்த காடுகளைக் காக்க உதவும் நம்பிக்கை நாயகன் இப்போது டிரோன் கேமரா. விண்ணில் பறக்கும் இந்த கேமராக்களின் உதவியோடு காடுகள் அழிப்பை (deforestation) கண்டறிகின்றனர் இந்த மக்கள். பிரேசில் மட்டுமல்ல, ஈகுவடோர், பெரு போன்ற பகுதிகளில் வாழும் அமேசான் பழங்குடிகள் கூட இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

வளர்ச்சி என்ற முகமூடியோடு, அமேசான் காடுகள் அழிக்கப்படுவது சகஜம். அதோடு, காட்டுத்தீயும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழிக்கும். இவற்றைத் தடுப்பதற்காக, World Wildlife Fund (WWF) மற்றும் Kaninde எனும் தனியார் என்ஜிஓ-க்கள் இணைந்து அப்பகுதியின் ஆறு பழங்குடியின இளைஞர்களுக்கு டிரோன் கேமரா வழங்கி, அதை இயக்கப் பயிற்சி அளித்திருக்கின்றன. அவற்றின் மூலம் கண்காணிப்பை மேற்கொண்டு, காடுகள் அழிப்பைப் பற்றிச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் அளிக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம், ரொன்டோனியா எனும் பகுதியில் அழிக்கப்படவிருந்த சுமார் 500 ஏக்கர் காடுகளைக் காப்பாற்றியிருக்கிறது இந்த முயற்சி.
இந்தக் கண்காணிப்புக் குழுவிற்குத் தலைமை வகிக்கும் அவாபு என்ற 28 வயது இளைஞர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பேசியிருக்கிறார். “டிரோன் கேமரா வழியாய், ஒரு பகுதியில் நில அபகரிப்பு நடப்பதை அறிந்துகொள்கிறோம். பின்னர் ஒரு குழுவாக அப்பகுதியை நோக்கி நடக்கத் தொடங்குவோம். நாங்கள் அப்பகுதியை அடைய சமயங்களில் இரு தினங்கள்கூட ஆகும். மரங்களை வெட்டுபவர்கள் எங்களைத் தாக்க ஆயுதங்கள் வைத்திருக்கிறார்களா என்பதையும் நாங்கள் டிரோன் வழியே பார்த்து, அதற்கேற்ப தயாராகிறோம். அவ்விடத்திற்குச் சென்று, புகைப்படங்கள் எடுத்து உரிய அதிகாரிகளுக்கு அவற்றை மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம். ஆனால், பெரும்பாலும் அதிகாரிகள் அவ்விடங்களுக்கு வர பத்து தினங்கள் ஆகிவிடுகின்றன. அதற்குள் மரங்களெல்லாம் வெட்டப்பட்டுவிடுகின்றன. சில நேரங்களில் மட்டுமே எங்களால் எங்கள் காடுகளைக் காப்பாற்ற முடிகிறது. ஆனால், இறுதிவரை அதற்கான முயற்சிகளில் மட்டும் தளரமாட்டோம்” என்கிறார் அவாப்.
1980-கள் வரை வெளியுலகத் தொடர்பின்றி தனித்திருந்த இந்த மக்கள், கடந்த 30 ஆண்டுகளில் பல வழிகளில் புதிய தொழில்நுட்பத்தை, தங்களின் கலாசாரத்தோடு அரவணைத்துக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்பதனப்பெட்டிகள், மடிக்கணினிகள், உயர்ரக கேமரா, வாக்கி-டாக்கி ஜிபிஎஸ் கருவி என அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். வெளியிலிருந்து யாரேனும் இவர்களின் பகுதிக்குச் செல்ல வேண்டுமெனில், முதலில் மின்னஞ்சல் செய்து, அவர்கள் அனுமதி பெற்ற பின்னரே அங்கு செல்ல முடியும்.
காடு காக்க உலகின் எந்த நவீனத்தையும் அழைத்துக்கொள்ளலாம், இயற்கையைச் சிதைக்காமல்!

யானைகளுக்கு என்னதான் ஆச்சு!?
சிங்கம் காடுகளின் ராஜாவாக இருக்கலாம். ஆனால், காடுகளின் பாதுகாவலன் யானைகள்தாம்! பேருயிர்களான யானைகள் அதிகம் வாழும் கண்டம் ஆப்பிரிக்கா. அதிலும் போட்ஸ்வானா நாட்டில் யானைகள் மிக அதிகம். சுமார் 1.3 லட்சம் யானைகள் போட்ஸ்வானாவின் சவானா சமவெளிகளில் சுற்றியலைகின்றன. போட்ஸ்வானாவில் வேட்டையாடுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு என்பதால் சுதந்திரமாக அங்கு வாழ்ந்துவருகின்றன யானைகள். இந்தச் சூழலில், மே மாதம் அந்த நாட்டிலிருக்கும் ஒக்கவங்கோ டெல்டா பகுதிகளில் திடீரென யானைகள் கொத்துக்கொத்தாக மடிந்தன. இதுவரை 350-க்கும் அதிகமான யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

இதற்குக் காரணம் என்ன என ஒவ்வொன்றாக அலசப்பட்டது. முதல்கட்ட விசாரணையிலேயே பசி பட்டினி காரணம் இல்லை என்பது தெளிவாகத் தெரிய வந்தது. எப்போதையும்விட வெயில் காலத்தில் தண்ணீர் குறைவாகத்தான் இருக்கும் என்றாலும் தாகத்தில் சாகும் அளவுக்கு வறட்சியும் அங்கு இல்லை. யானைகள் மரணம் நிகழ்ந்தால் அது மனித வேட்டையின் விளைவாகத்தான் இருக்கும். ஆனால், அதுவும் இல்லை என்பதும் தெளிவானது. இறந்த எந்த யானையிலிருந்தும் தந்தங்கள் பறிக்கப்படவில்லை. போட்ஸ்வானா அரசும் வேட்டையாடும் விஷயத்தில் கண்டிப்பாகவே இருக்கிறது.அருகி லிருந்த விவசாய நிலங்களைச் சேதப்படுத்துவதால் விவசாயிகள் விஷம் வைத்திருக்கக்கூடுமோ எனவும் விசாரிக்கப்பட்டது. சோதனையிலும் சயனைடு போன்ற விஷங்களுக்கான தடயங்கள் இல்லை. அதனால் இதுவும் காரணமில்லை என்பது தெளிவானது.

அந்தராக்ஸ் போன்ற கொடிய பேக்ட்ரி யாக்களும் இந்த இறப்புகளுக்குக் காரணம் இல்லை என்பதும் உறுதிப் படுத்தப்பட்டது. இன்னும் ஒரு சோதனையின் முடிவு மட்டும் வந்தால் இயற்கையான நச்சுதான் காரணமா என்பது தெரியவந்துவிடும் எனத் தெரிவித்திருந்தது போஸ்ட்வானா சுற்றுச்சூழல் அமைச்சகம். அதன்படி நீர்நிலைகளில் தங்கியிருக்கும் பாசிகளிலிருக்கும் நச்சுதான் இந்த மரணங்களுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்கின்றனர் உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள். முதலில் இதற்குத் துளியும் வாய்ப்பில்லை என்றுதான் கருதப்பட்டது. காரணம், ஒரு குதிரையைத் தவிர தண்ணீர் குடித்த எந்த விலங்குக்கும் இதுபோன்ற எந்த பாதிப்புமே இல்லை. மேலும், யானைகள் பொதுவாகப் பாசி இல்லாத இடமாகப் பார்த்து நீர்த்தேக் கங்களின் நடுவில் இருக்கும் தண்ணீரைத்தான் குடிக்கும். ஆனால், யானைகள் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீர் குடிப்பதால் அதிக நச்சை எடுத்திருக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக 70% யானைகள் நீர்த்தேக்கங்களின் அருகில்தான் செத்துக் கிடந்திருக்கின்றன. இதனால் இதுவே காரணமாக இருக்கும் எனக் கருதுகின்றனர். ஆனால், இன்னும் எதுவும் தெளிவாகத் தெரிய வரவில்லை. இதைத் தீர்மானமாகச் சொல்லத் தண்ணீரின் மாதிரிகளும் தேவைப்படும். ஆனால் கோடைக்காலம் முடிந்து அங்கு மழை பெய்யத் தொடங்கி விட்டது. இதனால் ஏற்கெனவே இருந்த பாசிகள் அதிக தண்ணீரில் இப்போது கரைந்திருக்கும். இது அல்லாமல் எலிகளிருந்து பரவும் encephalomyocarditis என்னும் வைரஸ் இருக்கிறதா என்றும் ஆராய்ந்துவருகிறார்கள்.

ஜூன் மாதத்திற்குப் பிறகு இப்படி எந்த இறப்பும் நிகழவில்லை, இனி எந்தப் பிரச்னையும் இருக்காது என போட்ஸ்வானா அரசு நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில், பக்கத்து நாடான ஜிம்பாப்வேயில் 22 யானைகள் மரணித்துள்ளன. இதற்கும் ஒக்கவங்கோ டெல்டா சம்பவங் களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற நோக்கில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை யென்றாலும் மறைமுகமாக இதிலும் மனிதர்களின் பங்கு உண்டு. போட்ஸ்வானாவைச் சுற்றிய நாடுகள் அனைத்திலும் வேட்டையாடுதல் அதிகமாக நிகழ்கிறது. இதனால் எல்லைகள் அறியாத யானைகளும் தனக்கான எல்லைகளை வகுத்துக்கொள்ளத் தொடங்கின. பல யானைகளும் மற்ற நாடுகளிலிருந்து போட்ஸ் வானா பகுதிகளுக்குள் வந்திருக்கின்றன. இப்படி யானைகள் அதிக அளவில் போட்ஸ்வானாவில் குவிந்திருப்பதால், அங்கு சமநிலை தவறத்தொடங்கியிருக்கிறது. தண்ணீர் போன்ற வளங்கள் குறையத் தொடங்கியிருக்கின்றன. இதுதான் மறைமுகமாக இந்த யானைகளின் மரணங்களுக்குக் காரணமாக இருக்கும் என்பதுதான் சூழலியலாளர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.
காரணம் எதுவாக இருந்தாலும், யானைகள் முக்கியம்... காப்பாத்திருங்க!