ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

'மரம் நட்டால், பணம் பரிசு!' வறட்சியில் சிக்கிய கிராமம்.... வளமாக்கும் மனிதர்!

அம்மாவுடன் சந்தானம் காவேரி
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மாவுடன் சந்தானம் காவேரி

மரம் வளர்ப்பு

வாழ்க்கையில் எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், தனது சொந்த கிராமத்தை மறக்கக் கூடாது... தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களில் ஒருவராக விளங்குகிறார் நாமக்கல் மாவட்டம், கோனூரைச் சேர்ந்த சந்தானம் காவேரி. ஊர் முழுக்க வறட்சி, 1,200 அடிக்கு கீழே சென்ற நிலத்தடி நீர்மட்டம் என்று ‘வறட்சிசூழ் பகுதி’யாக மாறிய தனது கிராமத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்த, கிராமம் முழுக்க மரக்கன்றுகளை நட்டு, பசுமையை வளர்த்தெடுக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கிராமத்தில் வளர்ந்து வரும் மரங்கள்
கிராமத்தில் வளர்ந்து வரும் மரங்கள்

மரங்களும், மரங்கள் சார்ந்த பணியும் என இயற்கைச் சூழலைச் செப்பனிடும் பணியில் மும்முரமாக இருந்த சந்தானத்தைச் சந்தித்தோம். சிறுபிள்ளைப்போல் துள்ளலும் ஓட்டமுமாக, நம்மை அழைத்துச் சென்று ஊர் முழுக்க தான் வைத்த மரங்களை காண்பித்தவர், “என்னோட பூர்வீக கிராமம் இது. என் அப்பா காவேரி, நெசவுத் தொழிலாளியா இருந்தார். இது விவசாய கிராமம்னாலும், எங்களுக்குச் சொந்தமா விவசாய நிலம் எதுவும் இல்லை. எங்க வாழ்க்கை கஷ்ட ஜீவனமாதான் ஓடுச்சி. அதனால், நல்ல நிலைக்கு வந்து குடும்ப கஷ்டத்தைப் போக்கணும்னு நினைச்சு படிச்சேன். பள்ளியில படிக்கும்போது, எங்க ஊர்ல வறட்சி. 1991-ம் வருஷம் எங்கப் பள்ளிக்கு தலைமை ஆசிரியரா வந்த கந்தசாமி சார், பள்ளி வளாகத்துல நிறைய மரங்களை நட்டு வளர்க்க ஆரம்பிச்சார். அப்பெல்லாம், அந்த மரக்கன்றுகளுக்கு விடுமுறை நாட்கள்ல தண்ணி ஊத்தி பராமரிப்பேன். அதனால, எனக்குள்ள இயல்பா இயற்கை மீது ஓர் ஈர்ப்பு வந்துச்சு.

கிராமத்தில் வளர்ந்து வரும் மரங்கள்
கிராமத்தில் வளர்ந்து வரும் மரங்கள்

இந்த நிலையில்தான், 1998-ம் வருஷம் டிப்ளமோ படிச்சு முடிச்சுட்டு, பெங்களூர்ல ஒரு கம்பெனியில வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு, பெல்காம், மும்பைனு வேல செஞ்சேன். கடந்த 3 வருஷமா சொந்தமா தொழில் செஞ்சுக்கிட்டு இருக்கேன்” என தனது வாழ்க்கை பயணத்தை விவரித்த சந்தானம், பசுமை சேவையைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

“2014-ம் வருஷம், நான் இந்த ஊருக்கு வந்தப்ப கடுமையான வறட்சி நிலவுச்சு. உஷ்ணம் வாட்டியெடுத்துச்சி. 1,000 அடிக்குக் கீழே நிலத்தடி நீர்மட்டம் போனதை பத்தி சொல்லி, பலரும் புலம்புனாங்க. ஊர் முழுக்க மரங்களை வளர்த்தால்தான் இந்த நிலைமையை மாத்த முடியும்ங்கற முடிவுக்கு வந்து இதுக்கான பணிகள்ல தீவிரமா இறங்கினேன். ஊர் பொது இடங்கள்ல சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள்ல மரக்கன்றுகளை நட ஆரம்பிச்சேன். அந்த பணியில என்னோட இணைஞ்சி செயல்பட எங்க ஊர் இளைஞர்கள் பலரையும் அழைச்சேன். ஆனா, யாரும் பெருசா ஆர்வம் காட்டல. ஆனா, நான் தனி ஆளா மரம் நடுற வேலையைத் தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சேன். அதுக்குப் பிறகு ஓரு சிலர் ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பிச்சாங்க. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துல புங்கன், அரசு, பூவரசு, அத்தி, வாகைனு 200 மரக்கன்றுகளை நட்டேன். என்னோட அப்பா, அம்மா பராமரிப்பு வேலையை பார்த்துக்கிட்டாங்க. அந்த மாதிரியான ஒரு சமயத்துலதான், வாகனம் மோதி எங்க அப்பா இறந்துட்டார். அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டேன். ஆனால், அடுத்த மூணே மாசத்துல மறுபடியும் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிட்டேன்.

கிராமத்தில் வளர்ந்து வரும் மரங்கள்
கிராமத்தில் வளர்ந்து வரும் மரங்கள்

ஈரோட்டுல இருந்து நிறைய மரக்கன்றுகளை நல்லா வளர்ந்த நிலையில, விலைக்கு வாங்கிக்கிட்டு வந்து எங்க ஊர்ல உள்ள மதுரைவீரன் கோயில், பெரியசாமி கோயில், உப்பிலியப்பன் கோயில், கருப்பண்ணன் கோயில், ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோயில்னு 9 கோயில்கள்ல நட்டேன். அதுக்குத் தண்ணி ஊத்த, 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய சைஸ் பேரலை ஒவ்வொரு கோயிலுக்கும் தலா அஞ்சுனு வாங்கி வச்சேன். வாரத்துக்கு ரெண்டு தடவை பணத்துக்கு தண்ணி வாங்கி, அந்த பேரல்கள்ல நிரப்பி, மரக்கன்றுகளுக்கு தண்ணி கொடுத்தோம். நாம மட்டும் இதை செஞ்சா போதாது. ஊரைச் சீக்கிரத்துல பசுமையாக்கணும்னா, ஊர் மக்களையும் மரக்கன்றுகள் நட வைக்கணும்னு தோணுச்சு. ஒரு நபர், இன்னொரு நபரை மரக்கன்று நட வச்சா 100 ரூபாய் பரிசு தர்றதா அறிவிச்சேன்.

சந்தானம் காவேரி
சந்தானம் காவேரி

இளைஞர்கள் பலரும், ஊர்ல உள்ள 100 பேர்களை மரக்கன்றுகள் நட ஒப்புக்க வச்சாங்க. போக்குவரத்துச் செலவுக்கு 25,000 ரூபாய், மரக்கன்றுகளுக்கு 70,000 ரூபாய்னு செலவு பண்ணி, ஆந்திராவுல இருந்து 8 அடி உயர மரக்கன்றுகளை வாங்கிக்கிட்டு வந்து மக்களுக்குக் கொடுத்தேன். மரக்கன்றுகள் நட ஒத்துக்கிட்ட மக்களை ஊக்குவிக்க, அவங்க ஒவ்வொருத்தருக்கும் 1,000 ரூபாய் மதிப்புள்ள 200 லிட்டர் பேரல் பரிசா கொடுத்தேன். அதுக்காகவே பலரும் ஆர்வமா மரக்கன்றுகள் நட முன்வந்தாங்க.

பள்ளியில் வளர்ந்து வரும் மரக்கன்றுகள்
பள்ளியில் வளர்ந்து வரும் மரக்கன்றுகள்

அப்துல்கலாம் இறந்தப்ப, எங்க ஊர்ல உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துல 200 மரக்கன்றுகளை நட்டேன். அந்த மரக்கன்றுகளை ஈரோட்டைச் சேர்ந்த, ‘ஈரம் நண்பர்கள் குழு’வைச் சேர்ந்தவங்க வாங்கி கொடுத்தாங்க. இதுக்கு, தண்ணி பாய்ச்ச டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி வந்து, எங்க ஊர்ல பயன்பாட்டில் இல்லாமல் இருந்த 30,000 லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில பம்பிங் மூலம் நிரப்பி, அதில் இருந்து சொட்டுநீர் முறையில் மரக்கன்றுகளுக்கு பாய்ச்ச ஆரம்பிச்சோம். எங்க ஊர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்துலயும் நிறைய மரக்கன்றுகளை நட ஆரம்பிச்சோம். நான் வசிக்கிற ஈரோட்டுல இருந்து சனி, ஞாயிறுகள்ல இங்க வந்துவிடுவேன். மரம் வளர்ப்புக்கான வேலைகளைப் பார்ப்பேன். மத்த 5 நாட்கள் இதையெல்லாம் கவனிச்சிக்க, ரெண்டு பேரை வேலைக்கு நியமிச்சிருக்கேன்” என்றவர் நிறைவாக,

“எங்க ஊர் சொஸைட்டியில் 32 மரக்கன்றுகளை நட்டதோடு, ஒவ்வொரு மரக்கன்றுக்கும் தண்ணி ஊத்த, அதுக்கு பக்கத்துலயே, 50 லிட்டர் பேரல் வச்சிருக்கோம். எங்க ஊர் பள்ளிக்கூட வளாகத்துக்கு வெளியில் 50 மரக்கன்றுகளை நட்டு பராமரிச்சிக்கிட்டே இருக்கோம்.

தண்ணீர் லாரி
தண்ணீர் லாரி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில 30 மரக்கன்றுகள் வச்சி, அதுக்குத் தண்ணீர் பாய்ச்ச 200 லிட்டர் பேரல்கள் 6 வச்சிருக்கோம். பால்வாடியில 8 மரக்கன்றுகள், 2 பேரல்கள்னு வச்சிருக்கோம். அதன்பிறகு, மியாவாகி முறையில குறுங்காடு உருவாக்க 1,750 மரக்கன்றுகள் நட்டு, சொட்டுநீர்ப் பாசன வசதியும் ஏற்படுத்தியிருக்கோம்.

மரங்களுக்குத் தண்ணீர்
மரங்களுக்குத் தண்ணீர்

வரப்போகும் குடியரசு தினத்தையொட்டி 500 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுருக்கேன். நான் என்னோட சொந்த செலவுல வைக்கிற மரக்கன்றுகள் மட்டுமல்லாமல், கரூர் டி.என்.பி.எல் ஆலை மாதிரியான மற்ற நிறுவனங்கள் கொடுக்குற, மரக்கன்றுகளையும் வாங்கி நட்டு வச்சி பராமரிச்சிக்கிட்டு இருக்கோம்’’ என மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, சந்தானம் காவேரி,

செல்போன்: 88709 99911

அம்மாவுடன் சந்தானம் காவேரி
அம்மாவுடன் சந்தானம் காவேரி

50,000 மரக்கன்றுகளை நடணும்!

‘‘ஒரு லோடு தண்ணி 2,500 ரூபாய்னு மாசத்துக்கு 10 லோடு தண்ணி வாங்க 25,000 ரூபாய் செலவு செய்றேன். வேலையாள்களுக்குக் கூலி கொடுக்க, மாசம் 10,000 ரூபாய் செலவு ஆகுது. மொத்தமா இதுவரைக்கும் எனக்கு 25 லட்சத்துக்கும் மேல செலவாகி இருக்கு. நான் வச்ச மரங்கள் அதிகபட்சம் 20 அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கு. இதைத் தவிர்த்து, கோனூர் கந்தம்பாளையம் ஏரி, மங்கரடு, ஆலங்குட்டை பகுதிகள்ல 4,000 பனைவிதைகளை விதைச்சுருக்கோம். கொரோனா காலத்தில் 2,000 விதைப்பந்துகளை தூவியிருக்கிறோம். நான் இந்த ஊர்ல இல்லாத நாள்கள்ல, வேலை ஆள்கள் மட்டுமல்லாம, எங்க அம்மாவும் மரக்கன்றுகளை கண்ணும் கருத்துமாக பராமரிப்பாங்க. எங்க ஊர்ல குறைந்தபட்சம் 50,000 மரங்களை வளர்க்கணும்ங்கிற தாகத்தோடு பயணிச்சுக்கிட்டு இருக்கேன்” என்கிறார் சந்தானம் காவேரி.