அருணாசலப் பிரதேசத்தில் இதுவரை அங்கே யாரும் கண்டிராத மலைகளின் பேய் என்று அழைக்கப்படுகிற பனிச்சிறுத்தையின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆவலில் வன அதிகாரிகள் உள்ளனர். என்ன இதுவரை யாரும் காணாத சிறுத்தையைக் கண்டுபிடிக்கப் போகிறார்களா என்று உங்களுக்குக் குழப்பமாக உள்ளதா?

பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தென் ஆசிய மலைகளில்தான் அதிகமாகக் காணப்படுக்கின்றன. பொதுவாக, பனிச்சிறுத்தை கூச்ச சுபாவம் கொண்டது. மேலும், பனிச் சிறுத்தைகளின் தோல் பனிப் பாறைகளின் நிறத்திலேயே இருப்பதால், இதை `மலைகளின் பேய்' என்று அழைப்பார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தில், இமயமலைப் பகுதியில் மேற்கே தவாங்கிலிருந்து கிழக்கே அனினி வரை வனவிலங்குகள் உள்ள 11 பிரிவுகளில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு ஆய்வுக்காக, இயற்கைக்கான உலகளாவிய நிதியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் நவம்பர் மாதத்தில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நம்தாபா தேசியப் பூங்காவிலும், சாங்லாங் மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பகத்திலும் பனிச்சிறுத்தை இருக்கும் ஆதாரங்கள் இதுவரை கிடைத்ததில்லை.
இயற்கைக்கான உலகளாவிய நிதியம் நவம்பர் மாதம் தரவுள்ள கணக்கெடுப்பு ஆய்வறிக்கையில் அருணாசலப் பிரதேசத்தில் பனிச்சிறுத்தையின் இருப்பு தெரிந்துவிடும்.

நம்தாபா பகுதியில் புலி, சிறுத்தை மற்றும் படைசிறுத்தைகள் அதிகமாகக் காணப்படும். நம்தாபாவை சேர்ந்த லிசு இன மக்களில் ஒருவர் பனிச்சிறுத்தையின் தோல் தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அவரது வீடு எரிந்ததில் பனிச்சிறுத்தையின் தோலும் எரிந்துவிட்டதால் அந்த ஆதாரம் வன அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை.
பத்தாண்டுகளுக்கு முன்னர், பனிச்சிறுத்தை நடமாட்டம் அருணாசலப் பிரதேசக் காடுகளில் பொருத்தப்பட்ட கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. இதைத் தவிர அருணாசலப் பிரதேசக் காடுகளில் பனிச்சிறுத்தை இருப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

அருணாசலப் பிரதேசத்தில் பனிச்சிறுத்தை இருக்கிறதா, இல்லையா? என்பது வரும் நவம்பரில் தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்.