சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலங்கள் நிறைந்த நீலகிரியில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழா நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான கோடை விழாக்கள் உற்சாகமாக நடைபெற்றுவருகின்றன. லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரியின் அழகைக் கண்டு ரசித்துவருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி கோடை விழாவின் சிறப்பு அம்சமாக முதன்முறையாக ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கவிருப்பதாகச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்திருந்தார்.

அதற்கான கட்டணங்கள் உள்ளிட்ட விவரங்களையும் சுற்றுலாத்துறை அறிவித்திருந்தது. பயணிகளிடம் வரவேற்பு பெற்ற அதே வேளையில், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பின. "ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா! காற்றில் பறக்கவிடப்படுகின்றனவா பாதுகாப்பு விதிகள்?" என்ற தலைப்பில் கடந்த ஜூனில் ஜூனியர் விகடன் இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கவிருப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கு, விசாரணைக்கு இன்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் பறவைகள், வனவிலங்குகள் போன்றவற்றுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையான, அறிவியல்பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

நடப்பு ஆண்டில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. வருங்காலங்களில் அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, எந்தவித பாதிப்பும் இல்லை என்று நிரூபணமானால் மட்டுமே இந்தத் திட்டத்தைத் தொடங்க முயல வேண்டும்" என உத்தரவிட்டனர்.