கோவை மாவட்டம், டாப்ஸ்லிப்பில் வளர்ப்பு யானைகளுக்கான முகாம் உள்ளது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, யானைகளுக்கான சிறப்பு பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான யானைகள் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதில், முகாமில் உள்ள கலீம், மாரியப்பன், பாரி உள்ளிட்ட 18 யானைகள் கலந்துகொண்டன.

குறிப்பாக, கடந்த ஆண்டு கோவையிலிருந்து பிடித்து கூண்டில் அடைத்து பயிற்சி கொடுக்கப்பட்ட சின்னத்தம்பி யானையும் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டது.
இதற்காக யானைகளுக்கு மஞ்சள், குங்குமம் பூசப்பட்டு, பழங்குடி மக்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனர். வழக்கம்போல, டாப்ஸ்லிப் முகாமின் கேப்டனான கலீம் யானைக்கு அரசன் பட்டம் சூட்டப்பட்டு, ராஜ குடை பிடிக்கப்பட்டு அணிவகுப்புக்குத் தலைமை தாங்க வைத்தனர்.

மேலும், பாகன்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. யானைகளுக்குப் பொங்கல், கரும்பு போன்றவை கொடுக்கப்பட்டன. குட்டி யானைகளின் சேட்டை, பெரிய யானைகளின் கர்ஜனை, அணிவகுப்பு போன்றவற்றை சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
18 யானைகள் இருந்தாலும், நேற்றைய விழாவில் அதிக கவனம் ஈர்த்தது சின்னத்தம்பி யானைதான். மற்ற யானைகளைவிட மக்களிடம் அதிக பரிச்சயம் என்பதால், பொதுமக்கள் `ஹேய்.. இது நம்ம சின்னத்தம்பி’ என்று அதன் அருகில் சென்று கரும்புகளைக் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மற்ற யானைகளுக்குப் பெரிதாக கட்டுப்பாடு இல்லாத நிலையில், சின்னத்தம்பி யானைக்கு மட்டும் சங்கிலி போட்டு கட்டப்பட்டிருந்தது. மேலும், சின்னத்தம்பி யானையின் எடை குறைந்துள்ளதாக பார்வையாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்தனர்.
சின்னத்தம்பி நின்றுகொண்டிருக்கும்போதுகூட சங்கிலி அவிழ்த்துவிடப்படவில்லை. மேலும், சின்னத்தம்பி அருகே இரண்டு பேர் குச்சியுடன் நின்றுகொண்டிருந்தனர். `சின்னத்தம்பி பயிற்சிக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது.

சின்னத்தம்பிக்கு இது தலைப் பொங்கல் என்பதால் அழைத்து வந்தோம். ஆனால், பல மாதங்களுக்குப் பிறகு மக்களைப் பார்ப்பதால் ஒரு பாதுகாப்புக்காகத்தான் இதைச் செய்துள்ளோம்” என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.