மலைப்பிரதேசமான நீலகிரியின் முக்கிய நுழைவு வாயில்களில் ஒன்றாக இருக்கிறது குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை. அடர்ந்த வனப்பகுதியின் ஊடாக இந்த மலைப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. யானைகள் முதல் இருவாச்சிப் பறவைகள் வரை பல்வேறு வனவிலங்குகளின் மிக முக்கிய வாழிடப்பகுதியாக இந்த வனப்பகுதி அமைந்திருக்கிறது. ஹில் குரோவ் - கல்லாறு யானைகளின் முக்கியமான வழித்தடமும் இந்தப் பகுதியில்தான் அமைந்திருக்கிறது.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் தனியார் தோட்டங்களும் இருக்கின்றன. தனியார் தோட்டம் என்றாலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். அதுவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மட்டுமே வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், குறும்பாடி பகுதியிலுள்ள ஒரு தனியார் தோட்டத்தில் அரியவகை காட்டு மரங்களை வெட்டி, முறையான அனுமதியின்றி ஜேசிபி இயந்திரங்களைக்கொண்டு சுமார் 2 கிலோமீட்டர் வரை சாலை அமைத்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. யானைகள் வழித்தடத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெற்ற இந்த அத்துமீறலுக்குச் சூழலியல் செயற்பாட்டாளர்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தது வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரிகள், "குறும்பாடி பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தில் யானைகள் வழித்தடத்தைச் சிதைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதை அறிந்தோம். வாகை உள்ளிட்ட காட்டு மரங்களை வெட்டி, 1 மீட்டர் ஆழத்துக்கு மண்ணைத் தோண்டி சாலை அமைத்திருக்கின்றனர். இதனால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, வருவாய்த்துறை அளித்த அனுமதியை ரத்துசெய்யவும், வருங்காலங்களில் இது போன்ற அனுமதியை வழங்க வேண்டாம் என்றும் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமாருக்கு கடந்த 10-ம் தேதியே கடிதம் அனுப்பியிருக்கிறோம். அவர்கள்தான் கண்டுகொள்ளவில்லை. அத்துமீறல் தொடர்பாக சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர்கள்மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.

இது குறித்து தெரிவித்த வருவாய்த்துறை அதிகாரிகள், ``காபி, குறுமிளகுப் பயிர்களைச் சாகுபடி செய்ய நிலத்தைச் சீரமைக்க அனுமதி கேட்டனர். குறிப்பிட்ட நேரத்தில் ஜேசிபி இயந்திரங்களை இயக்க அனுமதி கொடுத்தோம். ஆனால், விதிகளை மீறி செயல்பட்டிருக்கிறார்கள். எனவே, அனுமதியை ரத்துசெய்திருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல் மிகவும் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமாரை, பலமுறை தொடர்புகொண்டோம். முறையான பதிலளிக்காமல் தவிர்த்துவிட்டார். அவர் விளக்கமளிக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதைப் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.