Published:Updated:

தாயை இழந்த ஆட்டுக்குட்டிகள், பரிவோடு பாலூட்டும் பசு; ராசிபுரம் நெகிழ்ச்சி!

ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு
News
ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு

ராசிபுரம் அருகே விவசாயி ஒருவர் வளர்த்து வந்த ஆடு, இரண்டு குட்டிகளை ஈன்றுவிட்டு இறந்துவிட, தாய் இல்லாமல் பரிதவித்த அந்த ஆட்டுக்குட்டிகளுக்கு பசுமாடு ஒன்று பால் கொடுத்து அரவணைப்பது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர், சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்து வருகிறார். அதோடு, தனது விவசாய நிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் மற்றும் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். அவரது தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடு, இரண்டு குட்டிகளை ஈன்றது. பின்னர், தாய் ஆடு இறந்து விட்டநிலையில் குட்டி ஆடுகள் பால் இல்லாமல் தவித்து வந்தன.

இந்நிலையில், விவசாயி ராமசாமி புட்டியில் பசும்பாலை ஊற்றி, அந்த ஆட்டுக்குட்டிகளுக்கு வழங்கி வந்திருக்கிறார். இருந்தாலும், அந்த ஆட்டுக்குட்டிகள் தாயில்லாத சூழலில் அல்லாடி வந்திருக்கின்றன.

ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு
ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு

இந்நிலையில், ஆடுகள் மற்றும் மாடுகளை விவசாயி ராமசாமி மேய்ச்சலுக்கு வயலுக்கு ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது, அவர் வளர்த்து வந்த பசுமாடுகளில் ஒரு பசுவின் மடியில் ஆட்டுக்குட்டிகள் பால் குடித்துக் கொண்டிருந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கிறார். பின்னர், தினந்தோறும் அந்த ஆட்டுக்குட்டிகள் பசுவின் மடியில் பால் குடித்து வர, தாயில்லாமல் தவித்த குட்டிகளுக்கு அந்தப் பசுவே தாயாகிப் போயிருக்கிறது. இந்த காட்சியை சிலர் வீடியோ எடுத்துப் பதிய, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நெகிழ்வான சம்பவம் குறித்து பேசிய விவசாயி ராமசாமி, ``நானும் சரி, எங்க வீட்டுல உள்ளவங்களும் சரி ஆடு, மாடுகளை வெறும் கால்நடைகளாக நினைச்சு வளர்க்க மாட்டோம். அதுகளுக்கு பேர் வைத்து, செல்லப்பிள்ளை போல், வீட்டுல ஒருத்தர் போல பாசத்தோட வளர்ப்போம். அதனால, நாங்க பேசுவதுகூட அதுங்களுக்கு புரியும்.

நாங்க எவ்வளவு முயற்சி பண்ணியும், கன்று ஈன்ற ஆட்டை காப்பாத்த முடியலை. அந்தக் குட்டிகள் ரெண்டும் தவிச்சுப் போயிருச்சு. அதுங்களுக்கு புட்டி பால் கொடுத்தும் சரியா குடிக்கலை. ரெண்டு குட்டிகளும் தெளிவு இல்லாம சுணக்கமாவே இருந்துச்சு.

ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு
ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு

எங்களுக்கு மனசுக்கு கஷ்டமா போச்சு. தாய் ஆட்டைப்போலவே, குட்டிகளையும் இழந்துடுவோமோனு பயந்து கிடந்தோம். இந்த நிலையிலதான், ஒருநாள் ரெண்டு குட்டிங்களும் பசு மடியில பால் குடிச்சதுங்க. அந்தப் பசுவும், தன் கன்றுக்கு பால் ஊட்டுற அதே பரிவோட இந்தக் குட்டிகளை அரவணைச்சது, எங்களை ஆச்சர்யப்பட வச்சுச்சு. அதை சிலர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்கள்ல போட, இப்போ பலரும் இந்த அற்புத காட்சியைப் பார்க்க என்னோட தோட்டத்துக்கு படையெடுக்குறாங்க" என்றார் முக மகிழ்ச்சியோடு!