Published:Updated:

சின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது? #DoubtOfCommonman

சின்னத்தம்பி
News
சின்னத்தம்பி

சராசரியாக ஒரு காட்டு யானைக்கு இருக்கும் அத்தனை குணாதிசயங்களும் அந்த யானைக்கு இருந்தன. ஆனால், அதன் வாழ்விடம் சராசரியாக யானைகள் வாழும் இடமாக இல்லை.

Published:Updated:

சின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது? #DoubtOfCommonman

சராசரியாக ஒரு காட்டு யானைக்கு இருக்கும் அத்தனை குணாதிசயங்களும் அந்த யானைக்கு இருந்தன. ஆனால், அதன் வாழ்விடம் சராசரியாக யானைகள் வாழும் இடமாக இல்லை.

சின்னத்தம்பி
News
சின்னத்தம்பி

யானை... இந்தப் பெயரைக் கேட்டால் சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கும். சிலருக்கு அதிசயமாக இருக்கும். சிலருக்கு பயமாக இருக்கும். இப்படி யானைகளைப் பற்றி நம் ஒருவருக்கொருவர் பார்வை மாறுபடும். ஆனால், அந்த யானைகளுக்கு என்ன தேவை, யானைகளால் என்ன பயன், அவற்றின் பார்வை என்ன, அவற்றின் பிரச்னை என்ன என்பது குறித்து நம்மில் சிலருக்கு தெரிந்திருக்கும். பலருக்கும் தெரியாது. மேற்கண்ட அனைத்துக் கேள்விகளுக்கும், தனது மொழியில் பதில் அளித்தான் சின்னத்தம்பி யானை.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி
அந்த யானையின் தற்போதைய நிலை என்ன, சின்னத்தம்பி இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது என விகடனின் Doubt Of Commonman பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தார் லக்ஷ்மண குமார் என்ற வாசகர். அவருக்கான பதில் இதோ.

ம்மில் பலருக்கும் சின்னத்தம்பி யானையை, கோவையில் மயக்க ஊசி செலுத்தி, டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதியில் விட்டு, மீண்டும் வெளியில் வந்த பிறகுதான் தெரியும்.

#DoubtOfCommonman
#DoubtOfCommonman

இதுபோன்ற கேள்விகள் உங்களிடமும் இருக்கிறதா? இங்கே கேளுங்கள்...

கிட்டத்தட்ட, சின்னத்தம்பி வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகுதான் வெளி உலகுக்கும் வந்தான். ஆனால் சின்னத்தம்பி, எந்த அடையாளமும் இல்லாமல், தனது காட்டுக்குள் ராஜாவாக வலம் வந்த காலகட்டம் இருக்கிறது. இப்போது மரக்கூண்டுக்குள் இருக்கும் சின்னத்தம்பி யானையின் பிறப்பிடம் கோவைதான்.

யானைகள்
யானைகள்

திரும்பிய பக்கமெல்லாம் இயற்கையின் பேரழகு நிறைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகள்தான் சின்னத்தம்பியின் வாழ்விடம். அங்கு ஏராளமான சின்னத்தம்பிகளும், பெரிய தம்பிகளும் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கூட்டத்தில் ஓர் ஆண் யானை பிறந்தது. சராசரியாக ஒரு காட்டு யானைக்கு இருக்கும் அத்தனை குணாதிசயங்களும் அந்த யானைக்கு இருந்தன. ஆனால், அதன் வாழ்விடம் சராசரியாக யானைகள் வாழும் இடமாக இல்லை. செங்கல் சூளைகளுக்காக வெட்டப்பட்ட ராட்சத கிணறுகள், ஆசிரமங்கள், அரசு அலுவலகங்கள், ரிசார்ட்கள், வீடுகள், விவசாய நிலங்கள் என்று யானைகளின் வழித்தடங்களில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அப்படி இருந்தும், சின்னத்தம்பிகள் யாருக்கும் பெரிய தொந்தரவைக் கொடுக்கவில்லை. ஒருகட்டத்தில், பட்டா பூமி, புறம்போக்கு நிலம், நீர்நிலைகள் என்று செம்மண் கொள்ளை விரிவடைந்து கொண்டே சென்றது. 15 ஆண்டுகளுக்கு மேலாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு தண்ணீர் வராததற்கு, செம்மண் கொள்ளை முக்கிய காரணம்.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

வனத்திலும் போதிய உணவும், தண்ணீரும் கிடைக்கவில்லை. மறுபுறம் ஆக்கிரமிப்பும், கொள்ளையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதனால், யானைகள் உணவைத் தேடியும், தண்ணீரைத் தேடியும் ஊருக்குள் அவ்வபோது வருவது வழக்கம். அப்படி தனது கூட்டத்துடன்தான் ஒருநாள், (25 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த) அந்த யானை வந்திருக்க வேண்டும். ஆனால், மற்ற யானைகளைப் போல அல்லாமல் படுசுட்டியாக இருப்பது அந்த யானையின் தனித்துவமான குணம்.

அதனாலேயே, அந்த யானைக்கு தடாகம், ஆனைக்கட்டி பகுதிகளில் பெரிய ரசிகர் கூட்டம் கூடியது. பார்க்கும்போதெல்லாம், அந்த யானைக்கு மனிதர்கள் சாப்பிடும் உணவைக் கொடுக்கிறார்கள் மக்கள். ஊருக்கு வரும்போதெல்லாம் சாப்பிட்டுவிட்டும், சேட்டை செய்துவிட்டும் செல்கிறது. அந்த யானைக்கு சின்னத்தம்பி என்று செல்லமாக பெயரும் வைத்துவிட்டனர்.

சின்னத்தம்பிக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்
சின்னத்தம்பிக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்

பெயர்தான் சின்னத்தம்பி... உருவத்தில் பெரியத்தம்பி. அவ்வளவு பெரிய உருவம் இருந்தும், சின்னத்தம்பி இதுவரை மனிதர்களை தாக்கியதேயில்லை. வனத்துறையிலும் சின்னத்தம்பிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 'ஆடு, மாடு, கோழிங்கள கூட எங்க சின்னத்தம்பி தாக்கியதில்லை' என்று அந்த மக்கள் உருகினார்கள்.

சின்னத்தடாகத்தில் சின்னத்தம்பிக்கு ரசிகர் மன்றமே தொடங்கிவிட்டனர். இப்படியே பல ஆண்டுகள் ஓடுகின்றன. எந்த மனிதர்கள் கூட்டத்தால், சின்னத்தம்பி கொண்டாடப்பட்டானோ, அதே மனிதர்களில் சிலர், சின்னத்தம்பி விளை நிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்துவதாக புகார் எழுப்பினர்.

சின்னத்தம்பி யானையை கோவையில் மயக்க ஊசி போட்டு பிடித்தபோது
சின்னத்தம்பி யானையை கோவையில் மயக்க ஊசி போட்டு பிடித்தபோது

பட்டா, விவசாயம், பொருளாதாரம், வீடு போன்ற மனிதர்களின் மொழிகளை தெரியாத சின்னத்தம்பி, எப்போதும் போல சுற்றிக் கொண்டிருந்தான். ஆனால், வனத்துறையினர் நாள் குறித்தனர். கடந்த ஜனவரி மாதம், தான் சுற்றித்திரிந்த பெரிய தடாகம் பகுதியிலேயே, சின்னத்தம்பி மயக்க ஊசி போட்டுபிடிக்கப்பட்டான்.

தந்தம் உடைந்து, உடல் முழுவதும் காயங்களுடன் டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதியில் சின்னத்தம்பியை விட்டனர். அன்றிலிருந்து இரண்டு நாள்கள் மட்டும், சிலர் சின்னத்தம்பிக்காக ஆதரவுக்கு குரல் கொடுத்துவிட்டு, மீண்டும் தங்களது பணியைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

ஆனால், சின்னத்தம்பி விடவில்லை. கிட்டத்தட்ட 100 கி.மீ தொலைவில் விட்டாலும், தனது வாழ்விடத்தைத் தேடி மீண்டும் வனப்பகுதியிலிருந்து வெளியில் வந்தான் சின்னத்தம்பி. இந்த முறை சின்னத்தம்பி தனது வாழ்விடத்தைத் தேடி நடக்கத் தொடங்கினான்.

அவனின் பாதையில் ஏராளமான கட்டடங்கள், மனிதர்கள் இருந்தனர். அவர்களை எந்தத் தொந்தரவும் செய்யாமல் நடந்து கொண்டேயிருந்தான். தனது யாத்திரையின் மூலம் சின்னத்தம்பிகளின் பிரச்னைகளையும், தேவைகளையும் பேச வைத்தான் இந்தச் சின்னத்தம்பி.

பிடிப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு உறக்கத்தில் சின்னத்தம்பி
பிடிப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு உறக்கத்தில் சின்னத்தம்பி

சின்னத்தம்பிக்கான ஆதரவு கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அதற்குள், 'சின்னத்தம்பியைப் பிடித்து கும்கியாக மாற்றுவோம்' என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்தார். இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சின்னத்தம்பியைப் பிடித்து, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. பிப்ரவரி மாதம் மீண்டும் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டான் சின்னத்தம்பி யானை. இந்த முறை சின்னத்தம்பி மரக்கூண்டில் அடைக்கப்பட்டான். அங்கு அவனை பயிற்சி யானையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

சின்னத்தம்பி கூண்டில் அடைக்கப்பட்டு 180 நாள்கள் ஆகிவிட்டன. கடந்த ஜூன் மாதம் சின்னத்தம்பி யானையைக் கூண்டிலிருந்து வெளியில் எடுத்தாலும், பயிற்சி முழுமையடையவில்லை. இதனால், சின்னத்தம்பிக்கு கூண்டிலும், வெளியிலும் மாறி மாறி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சிக்குத் தொந்தரவாக இருக்கும் என்பதால், ஊடகங்கள் மற்றும் வெளியாள்களுக்கு சின்னத்தம்பியைப் பார்க்க அனுமதியில்லை. அவ்வப்போது, வனத்துறை அதிகாரிகளிடம் சின்னத்தம்பியின் உடல்நிலை குறித்து கேட்டு, நமது இணையதளத்தில் செய்தி பதிவிட்டு வருகிறோம்.

கூண்டுக்குள் சின்னத்தம்பி
கூண்டுக்குள் சின்னத்தம்பி

சின்னத்தம்பியின் உடல்நிலை குறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் (பொறுப்பு) டெபசிஸ் ஜனா (Debasis Jana), "சின்னத்தம்பி எங்களது கட்டுப்பாட்டில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது.

இடையில் ஒருமுறை மட்டும் மஸ்த் கண்டிஷனுக்கு வந்தது. பிறகு நார்மலாகிவிட்டது. மருத்துவர்களும், அவ்வப்போது கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். எந்தப் பிரச்னையும் இல்லை" என்றார்.

கூண்டுக்குள் சின்னத்தம்பி
கூண்டுக்குள் சின்னத்தம்பி

சின்னத்தம்பியை கண்காணித்து வருபவர்களில் ஒருவரான உலாந்தி வனச்சரகர் நவீன்குமார், "சின்னத்தம்பி மிகவும் அறிவாளியான ஒரு யானை என்பதை அது முதலில் டாப்ஸ்லிப்பில் இருந்து கீழே சென்றபோதே தெரிந்துவிட்டது. காரணம், அது மிகவும் சிக்கலான பாதை. அந்த வழியில் சின்னத்தம்பி செல்லாது என்று நினைத்திருந்தோம்.

எங்களது கணிப்பு பொய்யாகிவிட்டது. மிகவும் ஒரு கடினமான சூழ்நிலையில்தான் சின்னத்தம்பியைப் பிடித்தோம். காட்டு யானைக்குப் பயிற்சி அளிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் சின்னத்தம்பி யானை உருவத்தில் மிகவும் பெரியது.

பயிற்சியில் சின்னத்தம்பி
பயிற்சியில் சின்னத்தம்பி

இதனால், அதற்கு நாங்கள் பெரிய அளவு தொந்தரவு கொடுக்கவில்லை. சின்னத்தம்பி உருவத்தில் பெரிதாக இருந்தாலும், மிகவும் அமைதியான யானை. எனவே, சின்னத்தம்பியும் எங்களுக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தது. முழுவதும் இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்கிறது.

பாகன்களின் கட்டளைகளுக்கு ஒத்துழைப்பு தருகிறது. தற்போது இங்கு நன்கு மழை பெய்து கொண்டிருப்பதால், கூண்டிலும், வெளியிலும் மாற்றி மாற்றி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

இனி சின்னத்தம்பி பயிற்சி யானையாக இருக்க வேண்டுமா, கும்கியாக மாற வேண்டுமா, என்ன சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதை வனத்துறைதான் முடிவு செய்யும். ஆக, சின்னத்தம்பி தனது பழைய வாழ்க்கையை வாழ முடியாது என்பது மட்டும் உறுதி.

இப்போதும், வெளியில் பல பிரச்னைகளை சந்தித்துக் கொண்டு ஏராளமான சின்னத்தம்பிகள் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் சின்னத்தம்பியின் நிலை வரக்கூடாது என்பதே சூழலியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

காரணம், யானைகள் இருந்தால்தான் காடுகள் செழிக்கும். காடுகள் இருந்தால்தான் மழை பெய்யும். மழை பெய்தால்தான், விவசாயம் செழிக்கும். விவசாயம் நடந்தால்தான் நமக்கு உணவு கிடைக்கும்.

Doubt of Common Man
Doubt of Common Man