சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஒரு புலிக்கு காடு கொடுக்கப்படுகிறது!

புலி
பிரீமியம் ஸ்டோரி
News
புலி

இந்தப் புலியைக் கண்காணிக்க அங்கு இரண்டு நபர்கள்தான் உள்ளனர். அவர்களும், புலி பார்க்காத நேரத்தில் உணவு வைத்துவிட்டு வந்துவிட வேண்டும்.

மெலிந்த தேகம், உடலில் ஆங்காங்கே காயங்களுடன் கோவை வால்பாறை அருகே உள்ள எஸ்டேட்டில் ஓர் ஆண் புலிக்குட்டி உலாவிக்கொண்டிருந்தது. முள்ளம்பன்றியின் முள்கள் அதன் உடலில் ஆங்காங்கே ஏறி ரணத்தை ஏற்படுத்தியிருந்தது. வலியுடன் வனத்துக்குச் செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்த புலி குறித்து, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அந்தக் குட்டியை மீட்டு வனத்துறையினர் கூண்டில் வைத்து சிகிச்சை தந்து பராமரித்து வருகின்றனர். ஆனால், இது நிரந்தரமல்ல. விரைவில் அந்தக் குட்டிக்கு, வனப்பகுதியிலேயே பாதுகாப்பு அரண் அமைக்கப்பட உள்ளது. உடல்நலம் தேற்றி, வேட்டைத் திறனை மேம்படுத்தி மீண்டும் வனப்பகுதிக்குள் விட உள்ளனர். இப்படி ஒரு புலிக்கு பாதுகாப்பு அரண் அமைத்துப் பயிற்சி அளிப்பது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல்முறை.

மனித - விலங்கு எதிர்கொள்ளல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் நீலகிரி டி-23 புலிப் பிரச்னை அதற்கு ஓர் முக்கிய உதாரணம். இந்த நிலையில், இப்படியான விஞ்ஞானபூர்வமான முயற்சி காலத்தின் கட்டாயம்.

ஒரு புலிக்கு காடு கொடுக்கப்படுகிறது!

ஆனைமலைப் புலிகள் காப்பகக் கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், “அந்தப் புலி பிறந்து பத்து மாதங்கள்தான் இருக்கும். பொதுவாக புலிக்குட்டிகள் தாய்ப்புலியுடன் இரண்டு ஆண்டுகள் வரை இருக்கும். வனத்தில் மற்ற பெரிய விலங்குகளும் இருக்கும். அவற்றைச் சாப்பிட வேண்டும் என்றால், குட்டியால் தனியாக வேட்டையாட முடியாது. அதனால் தாயுடன் இணைந்து வேட்டை பழகும். பிறகுதான் அது தனியாகச் செல்லும். இந்தப் புலி, தாயுடன் சேர்ந்து முள்ளம்பன்றியைச் சாப்பிட்டுள்ளது. அப்போது, அதன் முள் பகுதிகளால் புலியின் வயிறு உட்பட பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதனால், நாங்கள் பிடித்து கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு அது எதையும் சாப்பிடவில்லை. தொடர் சிகிச்சையின் பலனாக முள் பகுதிகள் எல்லாம் வெளியே வந்துவிட்டன. படிப்படியாக அது இப்போது நன்றாக சாப்பிடத் தொடங்கிவிட்டது.

சராசரியாக ஒரு நாளுக்கு 5-7 கிலோ வரை சாப்பிடுகிறது. ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தது. அதற்காக ரத்தம், எலும்பு போன்றவை கொடுத்தோம். அதுவும் இப்போது சரியாகிவிட்டது. உடல்நிலை சீரானாலும், புலிக்குட்டியை அப்படியே வனத்தில் விட்டால் அது அங்கு பிழைப்பது கடினம். அதன் வேட்டைத்திறன் குறித்து ஆராய்வதற்காக, உயிருடன் ஒரு கோழியை விட்டோம். உடனடியாகவும், சரியான முறையிலும் கோழியை வேட்டையாடித் தின்றது. இப்போதைக்கு வேட்டையாடும் திறன் இருந்தாலும், இதைவிடப் பெரிய விலங்குகளைச் சமாளிக்க முடியாது. இப்போது 70-80 கிலோ எடை இருக்கிறது. சராசரியாக புலி 175 கிலோ எடை வர வேண்டும். அப்போதுதான் அதன் உண்மையான பலம் வெளிப்படும். அதற்காகத்தான் அடர் வனப்பகுதியிலேயே 10,000 சதுர அடிக்கு ஒரு பாதுகாப்பு அரண் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். 15 அடிக்கு வேலி போல அமைத்து, அந்த அரணுக்குள் புலியை வைத்துக் கண்காணிக்க உள்ளோம்.

அங்கு அதற்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்குவோம். தற்போது அது சிக்கன், மாட்டிறைச்சி எல்லாம் சாப்பிடுகிறது. ஆனால், பாதுகாப்பு அரணில் இது மட்டுமல்லாமல் வனத்தில் இறந்து கிடக்கும் விலங்குகளையும் உணவாக வழங்குவோம். வனத்தில் வைத்தே இதைச் செய்வதால், புலிக்குட்டிக்கு எதிர்காலத்தில் வனப்பகுதியில் வாழ்வது பிரச்னையாகாது. இதற்காக மந்திரி மட்டம் என்ற இடத்தைத் தேர்வு செய்துள்ளோம். மனிதர்களின் தொந்தரவு இருக்காது என்பதால் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஓராண்டுக்குப் பிறகு, வேலிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, புலியை அப்படியே வனத்துக்குள் விட்டுவிடுவோம்.

இந்தப் புலியைக் கண்காணிக்க அங்கு இரண்டு நபர்கள்தான் உள்ளனர். அவர்களும், புலி பார்க்காத நேரத்தில் உணவு வைத்துவிட்டு வந்துவிட வேண்டும். மனிதர்களை புலி பார்த்துவிட்டால், எதிர்காலத்தில் பிரச்னையாகலாம். அதனால், அந்தப் புலியானது மனிதர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்கவே கூடாது என்று முடிவெடுத்திருக்கிறோம். அருகிலேயே வேட்டைத் தடுப்புக் காவலர் முகாம் உள்ளது. அங்கிருந்து புலியைக் காண முடியும். ஆனால், புலியின் இடத்திலிருந்து முகாமைப் பார்க்க முடியாது” என்றார்.

ஒரு புலிக்கு காடு கொடுக்கப்படுகிறது!

சூழலியல் ஆர்வலர் சாதிக், “புலி மிகவும் அறிவான விலங்கு. மனிதர்களைவிட மிக வேகமாகச் சிந்திக்கும். அப்படிப்பட்ட விலங்கைக் குறைவாக எடைபோடக் கூடாது. டி-23 புலி ஆபரேஷனில் இது தெரிந்திருக்கும். மனிதர்கள் சேர்ந்து அதைக் கண்காணிப்பது கடினம். ஆனால், ஒரு புலி இருந்த இடத்தில் இருந்தே மனிதர்களை எளிதாகக் கண்காணிக்கும். 5 சதுர மீட்டர் இடம் இருந்தால் போதும். ஸ்ப்ரிங் போல சுற்றிப் படுத்துக்கொள்ளும். அந்த நிலையில் யாராலும் புலியைக் கண்டறிய முடியாது. முதல்முறை என்பதால் வனத்துறை ஊழியர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும். தாவர உண்ணியாக இருந்தால் பெரிய பிரச்னை இல்லை. அது மனிதர்களிடம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. ஆனால், ஊன் உண்ணிகள் மாமிசத்தைத்தான் விரும்பும். வன விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடுவதுதான் புலியின் இயல்பு. இரண்டு ஆண்டுகளுக்கு மேல், அதை நாம் கண்காணிக்க முடியாது. அதன்பிறகு மீண்டும் வனத்துக்குச் சென்று வாழ முடியாது. நிறைய வெளிநாடுகளில் இந்த முயற்சியைச் செய்துள்ளனர். அங்கெல்லாம் இந்த முறையில் புலிக்கும், மனிதர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. புலி மனிதனையே பார்க்காது. நாம் இறைச்சியாகக் கொடுத்தால், காலப்போக்கில் அதையே பழகிவிடும். அதனால், 2 ஏக்கர் பரப்பளவில் வேலிபோல அமைத்து, கண்காணிப்பார்கள், வேலி, கண்காணிப்பு மையம் இருப்பது தெரியாத வகையில் மரம், செடிபோல அமைத்துவிடுவார்கள்.

புலிக்குத் தெரியாமல் இருக்கும் மறைவான இடத்தில், பன்றிக்குட்டி போன்ற வனத்தில் கிடைக்கும் விலங்குகளைப் பிடித்து விடுவார்கள். அப்போது புலி வேட்டையாடிச் சாப்பிடும். இதைத் தொடர்வதன் மூலம் வேட்டையாடித்தான் சாப்பிட வேண்டும் என்பதைப் புலி நன்றாக உணர்ந்துவிடும். இதற்கு மாறாக மனிதன் நேரடியாக உணவு கொடுப்பதைப் பார்த்துவிட்டால், இவன் மூலமாகத்தான் உணவு கிடைக்கிறது என்று நம் வாழ்விடத்துக்கு வந்துவிடும். அப்படி வரும்போதுதான் கால்நடைகள், குழந்தைகளை அடித்துச் சாப்பிடும்.

ஒரு கட்டத்தில் வேலியை அகற்றிவிட்டால், புலி அப்படியே வனத்துக்குள் சென்றுவிடும். மற்ற இடத்தில் என்றால், புலிக்கு மயக்க ஊசி செலுத்தி, கூண்டில் ஏற்ற வேண்டும். இது அந்தப் புலிக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். அதேபோல புலியை வெளியிடும் அந்தப் பகுதியில், வேறு புலி ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். காரணம், இரண்டு புலிகளும் சண்டையிட்டு மரணம் வரைகூடச் செல்லும். இந்தப் புலி ஆரோக்கியமாக இருந்தாலும், ஏற்கெனவே இருக்கும் புலி காடுகளிலேயே அலைந்து திரிவதால் இன்னும் பலமாக இருக்கும்.

இப்படிச் செய்வதன் மூலம் வெளிநாடுகளில், மனித – விலங்கு எதிர்கொள்ளல் வெகுவாகக் குறைந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் புலிகள் காடுகளில் சுற்றி, மற்ற புலிகளுடன் பழகிவிடும். புலி மிகவும் பாதுகாப்பாக இருக்கும். முள்ளம்பன்றியின் முள்கள், உள்ளே செல்லும்போது உடல் உறுப்புகளைக் கடுமையாக பாதிக்கும். அந்த நிலையிலிருந்து புலியை மீட்டிருப்பது பெரிய விஷயம்” என்றார்.

vikatan
vikatan

இதுதொடர்பாக தலைமை வன உயிரினக் காப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ், “சுற்றுச்சூழலுக்குப் புலிகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். நாம் மீட்டிருந்த புலிக்குட்டி தாயைத் பிரிந்துவிட்டது. நாங்கள் மீட்டிருந்தபோது புலிக்குட்டி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. உயிர் பிழைப்பதே சந்தேகம் என்று நினைத்தோம். இப்போது புலிக்குட்டி நன்றாகிவிட்டது.

முதலில் வைத்திருந்த இடத்தில் புலிக்கு சற்று மன அழுத்தம் இருந்தது. அதை உணர்ந்து மானாம்பள்ளி அருகே கொண்டு சென்றுவிட்டோம். தொடர்ந்து புலிக்குப் பயிற்சியளித்து வனத்தில் விட முடிவு செய்தோம். முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமாக இந்தத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கவுள்ளோம். இதில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து, மற்ற இடங்களிலும் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஊன் உண்ணிகள், தாவர உண்ணிகளுக்கு வனவாழ்வைப் பழக்குவதற்கு தனித் தனித் தொழில்நுட்பங்கள் உள்ளன. இதன் மூலம் மனித–விலங்கு எதிர்கொள்ளல் தடுக்கப்படும் என்று நம்புகிறோம்” என்றார்.