
பரிந்துரை: இந்த வாரம்... தண்ணீர் சிக்கனம்
ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் தண்ணீர் சிக்கனத்தைப் பற்றி விளக்குகிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜனகராஜன்.
"இப்போது ஏற்பட்டிருக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் நினைக்கிறேன். தண்ணீர் இல்லாவிட்டால் அன்றாட வாழ்க்கை எவ்வளவு பாதிக்கும் என்ற அவசியத்தை அனைவரும் உணரவேண்டிய நேரமிது. எளிமையான சில வழிகள் மூலம் நம் தண்ணீர்த் தேவையைப் பாதியாகக் குறைக்கலாம்.

குவளை முழுவதுமாக நீரை எடுத்துக் குளிக்கக் கூடாது. அதில் பாதி நீர் வெளியே வீணாகத்தான் போகும். அதனால் தண்ணீரை பாதிக் குவளை எடுத்துக் குளிப்பதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டிலிருக்கும் நீர்ச் சுத்திகரிப்புக் கருவியிலிருந்து வெளியேறும் அசுத்த நீரைத் தாராளமாக மற்ற பயன்பாடுகளுக்கு உபயோகிக் கலாம். இதேபோல சமையலறையில் பாத்திரம் கழுவும்போது குழாயைத் திறந்து கழுவுவது வாடிக்கையான ஒன்று. அப்போது குழாயை முழுமையாகத் திறக்காமல் பாதி அளவு நீர் வெளியேறுமாறு வைத்துக்கொண்டோ அல்லது வாளியில் தண்ணீரைப் பிடித்தோ பாத்திரங்கள் கழுவலாம்.
பல் துலக்கும்போதும் முகம் கழுவும்போதும் குழாய்களில் தண்ணீரைத் திறந்து நேரடியாகப் பயன்படுத்தாமல், குவளையில் பிடித்துப் பயன்படுத்தலாம். நேரடியாகப் பயன்படுத்தினால், தண்ணீர் அதிகமாக வீணாகும். குடிப்பதற்காகத் தண்ணீரைப் பயன்படுத்தும்போது, தேவையான அளவு தண்ணீரை மட்டுமே பிடித்துக் குடிக்க வேண்டும். பாதி குடித்துவிட்டு வைத்தால் மீதித் தண்ணீரை அடுத்தவர் எடுத்துக் கீழே ஊற்ற வாய்ப்புகள் அதிகம். மேல்நாட்டுக் கழிவறை உபயோகப்படுத்தும்போது ஃப்ளஷ் செய்யக் கூடாது. அதனால் கிட்டத்தட்ட 4 முதல் 5 லிட்டர் தண்ணீரானது வெளியேறும். குவளையில் 2 லிட்டர் தண்ணீரைப் பிடித்து ஊற்றி சுத்தம் செய்யலாம். கழிவறையிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கிருமிகளைப் போக்க கிருமி நாசினி அல்லது வாசனைப் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல, ஒரு முறை பயன்படுத்தப்பட்ட தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். அந்தத் தண்ணீரை வைத்து வீட்டுத் தளத்தினை சுத்தம் செய்தல், கழிவறையைச் சுத்தம் செய்வது, குளியல் அறையைச் சுத்தம் செய்வது எனப் பல பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். வாஷிங் மெஷினைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் ஒருமுறை வாஷிங் மெஷினில் துணி துவைக்க சுமார் 250 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.

வீட்டில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கும் பழைய குழாய்களில் உள்ள தேய்ந்த வாஷர்களைப் புதுப்பிக்கலாம். அல்லது புதியதாகக் குழாய்களை அமைக்கலாம். இதனால் ஒரு நாளைக்கு 50 முதல் 80 லிட்டர் வரை தண்ணீர் செலவாவது மிச்சமாகும். ஷவரில் நீண்ட நேரம் குளிப்பதைத் தவிர்க்கலாம். குழந்தைகள் தண்ணீரைப் பயன்படுத்தும்போது கண்காணிப்பதுடன் அவர்களுக்குத் தண்ணீரின் அவசியத்தை எடுத்துச்சொல்வது மிக முக்கியம்.
கல்யாண மண்டபங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் அவசியம். குறிப்பாகக் கல்யாண மண்டபங்களில் புதிதாகத் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. விழாக்களில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலைப் பயன்படுத்தும்போது மீதம் உள்ள பாட்டில் நீரை அப்படியே குப்பையில் போட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அதனை 1 லிட்டராக இல்லாமல் 150 மி.லி தண்ணீர் பாட்டிலாகப் பயன்படுத்தினால் தண்ணீர் செலவாவது குறையும். வீட்டிலிருந்து அன்றாடம் உபயோகித்த கழிவுநீரை வீட்டின் ஓர் இடத்தில் தேக்கி வைத்து, இ-எம் கரைசலைப் பயன்படுத்தி, கழிவுநீரை நன்னீராக மாற்றிப் பயன்படுத்தலாம். இந்த இ-எம் கரைசலை உபயோகித்துச் சுத்தப்படுத்தும் தண்ணீரை வீட்டின் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்டகால நன்மைக்கு மழைநீர்ச் சேகரிப்பு அவசியம்.

இவ்வாறு முறையாகத் தண்ணீரைப் பயன்படுத்தினால் குறைவான தண்ணீர் கிடைக்கும்போது சமாளிக்க வசதியாக இருக்கும். 2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை கொடுத்தாலும் தண்ணீர் லாரிகள் வருவது இப்போது அரிதான விஷயம் ஆகிவிட்டது. இப்போது தண்ணீரின் அவசியம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மீண்டும் சொல்கிறேன், இதை ஒரு பிரச்னையாகப் பார்க்காமல் தண்ணீரின் அவசியத்தை உணரக் கிடைத்த ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பது ஏதோ வறட்சி காலத்துப் பிரச்னை மட்டுமல்ல, எப்போதைய தேவையும்கூட.”
- துரை நாகராஜன்