
வறண்ட காலம்! - சேமிக்கத் தவறினோம்... தாகத்தில் அலைகிறோம்!
சென்னையில் பாலைவனம் இல்லாத குறையைப் போக்கியிருக்கிறது இந்தக் கோடைக்காலம். ஆம். பாலைவனத் தின் முக்கிய அம்சமே அதிக வெயிலும் தண்ணீர் இல்லாத வறட்சியும்தானே! அப்படித்தான் இருக்கிறது இப்போதைய சென்னையும்.
கத்தரிக்காலம் கழிந்த பிறகும் சூரியன் தன் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளத் தயாராய் இல்லாத அதன் பிடிவாதம் மற்ற மாவட்டங்களைவிடச் சென்னை யில் இன்னும் மூர்க்கமாக வெளிப்படுகிறது. இந்த மூர்க்கத்துடன் குடிநீர்ப் பிரச்னையும் சேர்ந்துகொள்ள, நரகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் சென்னைவாசிகள்.

சென்னையின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றிவிட, மக்கள் லாரித் தண்ணீரைத்தான் நம்பியிருக்கிறார்கள். லாரி வருவதற்கு முன்னரே வரிசையில் குடங்களைப் போட்டுக் காத்திருக்கிறார்கள். தண்ணீர் கொண்டுவரும் லாரியின் சத்தம் கேட்டதும் போருக்குத் தயாராவது போன்ற ஆயத்தத்துடன் பரபரப்பாகிறார்கள். குடிநீரால் ஏற்படும் இந்தப் பரபரப்பும் பரிதவிப்பும் விளிம்புநிலை மக்களுக்கு மட்டுமே இருந்த நிலவரம் போய், தண்ணீர்ப் பிரச்னை அடுத்த கட்டத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது. பணம் கொடுத்து லாரித் தண்ணீர் வாங்கியவர்கள்கூட அது முடியாமல் கையறு நிலைக்கு வந்துவிட்டார்கள்.
உணவகங்கள் மூடப்படும் நிலையில் இருக்கின்றன, ஓ.எம்.ஆர் பகுதியில் இருக்கும் ஐ.டி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 12 நிறுவனங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாகத் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யப் பரிந்துரைத்திருக்கிறது எனத் தகவல் வந்திருக்கிறது. இன்னொருபுறம், தண்ணீர் போதுமான அளவு இல்லாததால் தீயணைப்புத் துறையே செயல்படாத நிலைமை.
தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஒரு பள்ளிக்கூடத்தை மூடியிருக்கிறார்கள். அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தையின் தந்தையிடம் பேசினேன். ‘‘மடிப் பாக்கத்துல என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல போதுமான அளவு தண்ணியில்லன்னு எம் பொண்ணை வீட்டுக்குத் திருப்பி அனுப்பிட்டாங்க. மறுநாள் ஸ்கூல்க்குப் போய் விசாரிச்சா, ‘கார்ப்பரேஷன்ல தண்ணி ஆர்டர் பண்ணாலும் ஐந்து டேங்கர்களை ஒரே நேரத்தில் வாங்கணும்னு கண்டிஷன் போடுறாங்க. அதாவது 5 டேங்கருக்கான பணத்தைக் கட்டினா 3 டேங்கர் தண்ணீர் உடனே கிடைக்கும். மீதி 2 டேங்கருக்கான பணத்தை வாங்கினாலும் அந்தத் தண்ணியை வெளியே வித்துடுறாங்கன்னு குறைப்பட்டுக்கிறாங்க. பிள்ளைங்கள ஸ்கூல் அனுப்பவே யோசனையா இருக்கு” என்கிறார்.

ஐ.டி ஊழியர் சங்கப் பிரமுகர் வினோத் களிகை, “ஐ.டி நிறுவ னங்களைப் பொறுத்தவரை தண்ணீர்ப் பிரச்னை இன்னும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தல. ஆனால், சில நிறுவனங்கள்ல ஒரு தளத்தில் நான்கு கழிப்பறைகள் இருந்தா அதுல ரெண்டை மூடிவெச்சுருக் காங்க. குழாயைத் திறந்தா வர்ற தண்ணீரோட அடர்த்தி பாதியா குறைக்கப் பட்டிருக்கு. தண்ணீரைக் குறைவாகப் பயன் படுத்துங்கள்னு ரெஸ்ட் ரூமில் அங்கங்க பிரின்ட் பண்ணி ஒட்டியிருக்காங்க. அதே போல ‘Work From Home’ கொடுக்கப்பட்டும் வருது. ஆனால், வீட்டுக்கு வந்தாலும் அதே தண்ணீர்ப் பிரச்னை தானே. சொல்லப்போனால் அலுவலகத்தைவிட வீட்டில உட்கார்ந்து வேலை செய்வது இணையத்தின் வேகம், இதர சூழல்கள்னு பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கு” என்கிறார் ஆதங்கத்துடன்.
சைதாப்பேட்டைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியம் தன் தொகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்னையைப் போக்க, திருப்போரூரில் உள்ள விவசாயக் கிணற்றிலிருந்து லாரி மூலம் குடிநீர் வரவழைத்து ஒருநாளுக்கு ஒருபகுதி என அவரே உடனிருந்து தண்ணீர் விநியோகமும் செய்கிறார் என்கிற தகவல் கிடைக்கவே அங்கு சென்று அவரைச் சந்தித்துப் பேசினேன்.
“ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணத்தை எடுத்துச் செலவு பண்ணினாலே தன் தொகுதி மக்களுக்கு அவங்களால தண்ணீர் கொண்டு வந்துட முடியும். பணம்கூட ஒரு பெரிய விஷயமே இல்லை. நம்மள நம்பி ஓட்டுபோட்ட மக்களுக்கு இந்தமாதிரி சூழல்லகூட நம்மோட அதிகாரத்தைப் பயன்படுத்த முடியலன்னா அப்புறம் எதுக்கு இந்தப் பதவி!
சென்னைப் புறநகர்ப்பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகளில் தண்ணீர் இருக்கு. அங்குள்ள மக்கள்கிட்ட அரசுத் தரப்பு சுமுகமாகப் பேசி, தண்ணீரை லாரி மூலம் சென்னைக்குக் கொண்டு வரலாம். ஆனா, செய்ய மாட்டாங்க. ஒரு பிரச்னைன்னா மக்கள் முதல்ல கவுன்சிலரைத்தான் அணுகுவாங்க. அவங்களுக்கு வேறெந்த ஆபீஸரும் தெரியாது. ஆனா, உள்ளாட்சித் தேர்தல் குளறுபடியால் மக்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. தண்ணிப்பிரச்னை தீர்ற வரைக்கும் என்னால முடிஞ்சத என் தொகுதி மக்களுக்குச் செய்வேன்” என்றவர் பேசிவிட்டு மீண்டும் உட்கார்ந்து தண்ணீர் விடத் தொடங்கிவிட்டார்.
சென்னையில் ஒருசில உணவகங்கள் தண்ணீர்ப் பிரச்னையால் மூடப்பட்டுவிட்டது எனச் செய்தி வர, நுங்கம்பாக்கத்தில் மூடப்பட்ட உணவக முதலாளியைச் சென்று சந்தித்தோம். துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் புலம்பும் தொனியில் பேசத்தொடங்கினார் அவர்.
“கஸ்டமர்ஸ் குடிக்கிறதுக்கு கேன் வாட்டர்கூட வாங்கிக்கலாம். ஆனா, சமையல் செய்யவும் மற்ற விஷயங்களுக்கும் கேன் வாட்டர் வாங்க வசதி இல்லை. போனமாசம் ஒரு லாரி தண்ணி 1,500க்கு வாங்கிட்டிருந்தோம். இப்போ 12,000 வரைக்கும் விக்குறாங்க. அந்தத் தண்ணியும் ஒரு நாளைக்குத்தான் சரியாவரும். பெரிய ஹோட்டல்களுக்கு இது கட்டுப்படி ஆகலாம். ஆனா, எங்களால சமாளிக்க முடியல. பசியோடு சாப்பிட வரவங்களை தண்ணி இல்லன்னு சொல்லித் திருப்பி அனுப்ப கஷ்டமா இருக்கு. அதான் ஹோட்டல மூடிட்டோம்” என்கிறார்.
சி.ஐ.டி நகரில் அபார்ட்மென்டில் வசிக்கும் ஒரு பெண், “போர் வாட்டரை ஆர்.ஓ தண்ணியா சுத்தப்படுத்திக் குடிச்சு சமாளிச்சோம். அதுக்கு அப்புறம், நிலத்தடி நீர் வற்றிப்போய் ‘போர் வாட்டரே’ வராமல் போன பிறகு, மெட்ரோவுக்குப் பணம்கட்டி லாரியை அப்பார்ட்மென்ட்டுக்கு உள்ளே வரவெச்சு சமாளிச்சோம். இப்போது லாரித்தண்ணீரின் தேவை அதிகமா இருக்கிறதால, அவங்களையும் அவ்வளவு ஈஸியா வரவைக்க முடியல. இப்போ தண்ணிக்காக நாங்களும் குடத்தை எடுத்துகிட்டு ரோட்டுக்கு வந்து நிக்குற நிலைமையிலதான் இருக்கோம்” என்றார்.
இது சென்னையில் மட்டுமன்றி, தமிழகம் முழுக்க நிலைமை மோசமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.
வர்க்க பேதமின்றித் தண்ணீர் பூதம் எல்லோரையும் முழுதாக விழுங்கக் காத்திருக் கிறது. எந்த ஒரு கோணத்தில் பார்த்தாலும் தண்ணீர் குறித்து நடப்பவை எல்லாம் மிகப் பெரிய அழிவின் தொடக்கமாகத்தான் இருக்கின்றன. இது தொடருமாயின் மிக அசாதாரணமான ஒரு சூழலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்பது மட்டும் உறுதி.
தண்ணீர் தண்ணீர் என்கிற குரலுக்குப் பின்னால் அரசின் அலட்சியம், மழைநீரைச் சேகரிக்கத் தவறிய மக்களின் பொறுப்பின்மை, பொய்த்துப்போன மழை என்று ஏராளமான விஷயங்கள் வரிசையில் நிற்கின்றன, தண்ணீர் லாரிக்காகக் காத்துக்கிடக்கும் குடங்களைப்போல.
-தமிழ்ப்பிரபா, படங்கள்: விகடன் டீம்