Published:Updated:

"தனுஷ்கோடி அழியவில்லை, பொய் சொல்கிறார்கள்; இறந்தவர்களிடம் தினமும் பேசுகிறோம்!"- புயலின் நினைவுகள்

தனுஷ்கோடியில் புயலில் சேதம் அடைந்த தேவாலயம்

"தனுஷ்கோடியைக் கோரப்புயல் தாக்கியது உண்மைதான், ஆனால் அதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகச் சொல்வது பொய்! இறந்ததாகச் சொல்பவர்களிடம் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்."

"தனுஷ்கோடி அழியவில்லை, பொய் சொல்கிறார்கள்; இறந்தவர்களிடம் தினமும் பேசுகிறோம்!"- புயலின் நினைவுகள்

"தனுஷ்கோடியைக் கோரப்புயல் தாக்கியது உண்மைதான், ஆனால் அதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகச் சொல்வது பொய்! இறந்ததாகச் சொல்பவர்களிடம் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்."

Published:Updated:
தனுஷ்கோடியில் புயலில் சேதம் அடைந்த தேவாலயம்
தமிழக மக்களால் மறக்க முடியாத தினங்கள் பல. அதில் ஒன்று தனுஷ்கோடியைக் கடல் தின்ற தினம். தமிழக கடலோரப் பகுதிகளை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை புரட்டிப் போட்டு விட்டுப் போனதற்கு முன்பே, தனுஷ்கோடியை அந்த சுனாமி முத்தமிட்டு, விகாரமாக்கியது.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் துறைமுகம், அதனருகே ரயில் நிலையம், நிரம்பி வழியும் பயணிகள், இருபுறமும் நீலவண்ணத்தில் கடலும் இதமான காற்றும், தேனியைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் இது எல்லாம் பழைய கதை. 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு, (அதாவது 24-ம் தேதி அதிகாலை) கோரப்புயல் தனுஷ்கோடியைத் தாக்கியது. இதெல்லாம் நடந்து 58 ஆண்டுகள் ஆகின்றன.

அந்தக் கோரப்புயலின் தாக்கத்திலிருந்து இன்றுவரை தனுஷ்கோடி மீளவே இல்லை. அன்று வீசிய புயலில் இந்தியாவின் தேசப்படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகமே காணாமல் போயிற்று.

புயல் வீசிய சமயம் தனுஷ்கோடி ரயில்வே நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிலத்திலிருந்து கடலுக்கு இடம் மாறினர். புயலுக்கு முன்னர் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ஒரு ரயில் புறப்பட்டுச் சென்றது.

புயல் சின்னாபின்னமாகி நினைவு சின்னமாக காட்சியளிக்கும் கட்டடம்
புயல் சின்னாபின்னமாகி நினைவு சின்னமாக காட்சியளிக்கும் கட்டடம்

சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்யவே ரயில் வழியிலே நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட அந்த ரயிலில் புயல் மிச்சம் வைத்தது வெறும் இரும்பு சக்கரங்கள் மட்டுமே. மற்றவை அனைத்தையும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. அதில் 1000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். 40க்கும் மேற்பட்டோர் குஜராத்திலிருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வந்த மருத்துவத்துறை மாணவர்கள். அவர்கள் அனைவரும் புயலுக்கு இரையாயினர்.

தனுஷ்கோடியிலிருந்த பெரிய பெரிய கட்டடங்கள், ஒரு பிள்ளையார் கோயில், சர்ச், இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் இடிந்து தரைமட்டமாயின. அப்போது தந்தி மற்றும் டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டதால் வெளி உலகத்துக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால் சேதாரத்தின் விவரங்களும் உடனடியாகத் தெரியவில்லை.

பின்னர் அவர்களைக் காப்பாற்றக் கப்பல்கள், மோட்டார் படகுகள், ஹெலிகாப்டர், விமானங்கள் ராமேஸ்வரம் நோக்கி விரைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானத்திலிருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன.

புயலில் தப்பியவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க, தமிழகத்தில் பல இடங்களிலிருந்தும் மருத்துவர்கள் ராமேஸ்வரத்துக்கு அனுப்பப்பட்டனர்.

இறுதியில் தனுஷ்கோடி பகுதியில் வெள்ளம் வடிவதற்கு ஒரு வாரம் ஆனது. கடற்கரையில் எங்குப் பார்த்தாலும் பிணங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. பிணங்களைக் கழுகுகள் தின்றன. பின்னர், அவை எல்லாம் சேகரிக்கப்பட்டுப் புதைக்கப்பட்டன.
புயலில் தப்பிய புருஷோத்தமன்
புயலில் தப்பிய புருஷோத்தமன்

இந்நிலையில் தனுஷ்கோடி புயல் தாக்கி டிசம்பர் 24 உடன் 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. புயலால் தனுஷ்கோடி அழிந்து அரை நூற்றாண்டைக் கடந்தாலும் இன்றும் புயலின் நினைவுகள் மறக்க முடியவில்லை என தனுஷ்கோடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தனுஷ்கோடியின் புயலில் சிக்கி உயிர் தப்பிய புருஷோத்தமனைச் சந்தித்துப் பேசினோம், 72 வயதை அடைந்திருந்தாலும் தான் 14 வயதில் கண்ட அந்தக் கோரப் புயல் தாண்டவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்றுவரை தன்னால் மீள முடியவில்லை என மிரட்சியுடன் கூறினார்.

"தனுஷ்கோடி ஒரு அபூர்வமான ஊர் தம்பி. பிரிட்டிஷ்காரங்கதான் தனுஷ்கோடில போஸ்ட் ஆபீஸ், ரயில்வே டேசன், கட்டடங்கள், இலங்கைக்குக் கப்பல்னு அவ்வளவு அழகா வச்சுருந்தாங்க. அப்ப எந்த அளவுக்குக் காத்து அடிக்கும், மழை எவ்வளவு வேகமா பெய்யும்னு துல்லியமாகக் கணிச்சு சொல்றதுக்கு ஆள் எல்லாம் இல்லை.

1964 டிசம்பர் 23-ம் தேதி காத்து பலமா அடிச்சுச்சு. ஊர் மக்கள் இது வழக்கமா அடிக்கிற காத்துதான்னு அமைதியா இரவு தூங்கிட்டு இருந்தாங்க. திடீர்னு கடல் தண்ணி வீட்டுக்குள்ள பூந்துச்சு. அலறி அடிச்சுகிட்டு எந்திரிச்சு கதவைத் திறந்து பார்த்தா, நாங்களே கடலுக்குள்ள இருக்கோம். காத்து, மழை, கடல் கொந்தளிப்பு... நாங்க எல்லாம் இறந்து போயிடுவோம்ன்னு நினைச்சேன். ஆனா எப்படி உயிர் பிழைத்து வந்தோம்ன்னு இப்ப வரைக்கும் என்னால நம்ப முடியவில்லை. 'நல்ல வேளை நாம மேட்டுப்பகுதியில இருந்ததுனால கழுத்தளவு தண்ணில நீந்தி தப்பிச்சிட்டோம்'ன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு... விடிஞ்சு பார்த்தா கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் எங்க மக்கள் பிணமாகக் கிடந்தாங்க. உள்வாங்கிய கடல்ல இருந்து, கடல் அலை ஒவ்வொருத்தரையும் உயிரற்ற உடலாகக் கொண்டு வந்து வெளியே போட்டுச்சு. தனுஷ்கோடி அழிஞ்சு போச்சுன்னு இங்க இருந்து தப்பிச்சு போனவங்க சொல்லித்தான் வெளியே இருக்கறவுங்களுக்கே தெரிஞ்சுச்சு. அப்புறம்தான் எல்லாம் வந்து பார்த்து ஊர் உலகத்துக்குத் தெரிஞ்சது.

புயலில் சேதம் அடைந்த கோயில்
புயலில் சேதம் அடைந்த கோயில்

இப்ப நீங்க பார்க்கிற இந்த சேதமடைந்த பில்டிங், கோயிலு, சர்ச், ரயில்வே டேசன்லாம் நாங்க ஓடியாடி சந்தோஷமா இருந்த இடம். மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடம்னு அரசு சொல்லுது. ஆனா, தனுஷ்கோடியில பூர்வக்கூடியா வாழ்ந்துகிட்டு வர்ற நாங்க இங்க இருந்து போக முடியாதுன்னு சொல்லி ஓலை குடிசையில வாழ்ந்துட்டுதான் இருக்கோம். தனுஷ்கோடி அழிஞ்சு போச்சு... இங்க ஆயிரக்கணக்கானோர் செத்து போயிட்டாங்கனு மத்தவங்க சொல்றதெல்லாம் பொய்... எங்களைப் பொறுத்தவரைக்கும் தனுஷ்கோடி அழியல, யாரும் சாவல! தினமும் அவங்க செத்துப்போனதா சொல்றவங்க கிட்ட நாங்க பேசிக்கிட்டுதான் இருக்கோம். தனுஷ்கோடில அவுங்க இன்னும் வாழ்ந்துட்டுத்தான் இருக்காங்க. மத்தவங்களுக்கு வேணா இது சுற்றுலாத்தலமா இருக்கலாம். ஆனா எங்களுக்கு இதுதான் தம்பி வாழ்விடம்" எனக் கூறி நம்மிடமிருந்து விடைபெற்றார்.

அங்கு நின்றிருந்த நம்மைக் கடல் காற்று உரச, எதுவுமே அறியாததுபோல தன் எல்லைக்குள்ளேயே ஆர்ப்பரித்தது கடல்.