துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கமே இன்னும் மனதைவிட்டு அகலாத நிலையில், தஜிகிஸ்தான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கிழக்கு தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. சுமார் 20.5 கி.மீ (12.7 மைல்) ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு 5.0 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் உயர்ந்த பாமிர் மலைகளால் சூழப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையிலுள்ள கோர்னோ-படக்ஷானில் கண்டறியப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.