Published:Updated:

மாண்டஸ் புயல்: `சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் இயங்குமா?' - நிலவரம் என்ன?

மாண்டஸ் புயல்

சென்னையில் அரசுப் பேருந்துகள், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் இயக்கம் குறித்து முக்கியத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:

மாண்டஸ் புயல்: `சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் இயங்குமா?' - நிலவரம் என்ன?

சென்னையில் அரசுப் பேருந்துகள், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் இயக்கம் குறித்து முக்கியத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மாண்டஸ் புயல்

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியிருக்கும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி, சென்னைக்குத் தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்க வாய்ப்பிருக்கிறது.

மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல்

தீவிரப் புயலாக நகரும் மாண்டஸ் புயல் வலு குறைந்த புயலாகக் கரையைக் கடக்கக்கூடும். புயல் கரையைக் கடக்கும்போது, 85 -100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. புயல் காரணமாக, சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள் மீட்புப்பணியில் தயாராக இருக்கின்றனர்.

போக்குவரத்துத்துறை அறிவிப்பு:

புயல் காரணமாக, கனமழை பெய்யும் என்று கூறப்படும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரவு நேரங்களில் அரசுப் பேருந்துகள் இயங்காது என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரிடமிருந்து பேருந்து சேவையை நிறுத்தக் கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல்

அந்த அறிவிப்பில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கம்போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, மாண்டஸ் புயல் கரையைக் கடப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவும், புயல் கரையைக் கடந்த பின்பும், கிழக்கு கடற்கரைச் சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. மேலும், அந்தந்த மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

புறநகர், மெட்ரோ ரயில் நிலவரம் என்ன?

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிற வகையில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கண்காணிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மாண்டஸ் புயல், கரையைக் கடக்கும் தருணத்தில் பொதுமக்கள் பேருந்துப் பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல, `புயல் கரையைக் கடக்கும்போது, புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும்’ என்று புதுச்சேரி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல்

சென்னை புறநகர் ரயிலைப் பொறுத்தவரை, `சென்னை புறநகர் ரயில்களைப் பாதுகாப்பான முறையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். புயல் மற்றும் கனமழை நேரத்தில் ரயிலை மணிக்கு 10 முதல் 15 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சிக்னல் கோளாறு ஏற்பட்டால் சூழலைப் பொறுத்து முடிவுசெய்யப்படும். அவசியம் ஏற்பட்டால் ரயில்கள் ரத்துசெய்யப்படும் அல்லது நேரம் மாற்றியமைக்கப்படும்’ என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதே சமயத்தில், மெட்ரோ ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லாமல், வழக்கம்போல் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.