Published:Updated:

தீயணைப்பு வாகனங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா? | Doubt of Common Man

தீயணைப்புப் பணி

தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகளின் போது பயன்படுத்தப்பட்டாலும், குறிப்பிட்ட சில தேவைகளுக்காகச் சேவை அடிப்படையில் வாடகைப் பணியாகவும் வழங்கப்படுகிறது.

Published:Updated:

தீயணைப்பு வாகனங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா? | Doubt of Common Man

தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகளின் போது பயன்படுத்தப்பட்டாலும், குறிப்பிட்ட சில தேவைகளுக்காகச் சேவை அடிப்படையில் வாடகைப் பணியாகவும் வழங்கப்படுகிறது.

தீயணைப்புப் பணி
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் தருண் என்ற வாசகர், "தீயணைப்பு வாகனங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறார்களே, உண்மையா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

இந்தியக் காவல் பணி (Indian Police Service) அதிகாரியை இயக்குநராகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை (Tamilnadu Fire and Rescue Services), அமைப்பு ‘காப்பதே எமது கடமை’ எனும் குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுத்துறைகளில் ஒன்றாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு தீயை அணைத்தல் மற்றும் தீத்தடுப்பு போன்ற பணிகளில் மிகச் சிறப்பான பணியினைச் செய்து வருகிறது. இத்துறை தீ விபத்து தவிர, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டல், கட்டட இடிபாடுகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்டல், சாலை மற்றும் தொடருந்து விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டல், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்டல் உள்ளிட்ட மீட்புப் பணிகளையும் செய்து வருகிறது.

தீயணைப்பு வாகனம்
தீயணைப்பு வாகனம்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தவிர்த்து, தீ விபத்து ஏற்பட்டு விடாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?, தீ விபத்து ஏற்பட்டு விடும் நிலையில், அதிலிருந்து தங்களையும், தங்களது முக்கியப் பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வது எப்படி? தீயை அணைப்பது எப்படி? தீயின் தன்மைக்கேற்றபடி தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது எப்படி? மீட்புப் பணிகளை மேற்கொள்வது எப்படி? என்பது உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு மற்றும் மீட்புச் சேவைச் செயல்பாடுகள் குறித்து, பள்ளி / கல்லூரி மாணவர்கள், தொழில் நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பயிற்சி அளித்தல் பணிகளையும், தீ விபத்துத் தடுப்புப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திரையரங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் தேவையான தீயணைப்புக் கருவிகள் நிறுவப்பட்டிருக்கிறதா? தவிர்க்க முடியாத விபத்து ஏற்படும் போது, அங்கிருப்பவர்கள் உயிரிழப்பு ஆபத்தின்றி தப்பிச் செல்லத் தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றதா? என்பது போன்ற செயல்பாடுகளை ஆய்வு செய்வதுடன், அதற்கான உரிமங்களை வழங்கும் பணியையும் செய்து கொண்டிருக்கிறது.

தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தீயணைப்பு வீரர்கள்
தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தீயணைப்பு வீரர்கள்

தீயணைப்பு நிலையங்கள்

தமிழ்நாட்டில் இத்துறையின் செயல்பாடானது வடக்கு மண்டலம் (Northern Region), தெற்கு மண்டலம் (Southern Region), மத்திய மண்டலம் (Central Region), மேற்கு மண்டலம் (Western Region), வட மேற்கு மண்டலம் (North Western Region) என்று ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு மண்டலத்தில் 4 கோட்டங்களில் 43 தீயணைப்பு நிலையங்கள், தெற்கு மண்டலத்தில் 7 கோட்டங்களில் 74 தீயணைப்பு நிலையங்கள், மத்திய மண்டலத்தில் 9 கோட்டங்களில் 93 தீயணைப்பு நிலையங்கள், மேற்கு மண்டலத்தில் 8 கோட்டங்களில் 74 தீயணைப்பு நிலையங்கள், வடமேற்கு மண்டலத்தில் 4 கோட்டங்களில் 52 தீயணைப்பு நிலையங்கள் என்று மொத்தம் 32 கோட்டங்களில் 336 தீயணைப்பு நிலையங்கள் அமைந்திருக்கின்றன.

வாடகைப்பணி

இத்துறையிலிருக்கும் தீயணைப்பு வாகனங்கள் (Fire Units) மற்றும் முதலுதவி வாகனங்கள் (Ambulance) போன்றவை தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகளின் போது பயன்படுத்தப்பட்டாலும், குறிப்பிட்ட சில தேவைகளுக்காகச் சேவை அடிப்படையில் வாடகைப் பணியாகவும் வழங்கப்படுகிறது.

தீயணைப்பு வாகனம்

லாபத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படாத கண்காட்சிகள், சந்தைகள், திருவிழாக்கள், மாநாடுகள் முதலிய பொது நிகழ்வுகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10/-வீதம் பெறப்படுவதுடன், 24 மணி நேரத்திற்கு வாகனக் காத்திருப்புக் கட்டணமாக ரூ.75/- வீதம் பெறப்படுகிறது. கிரேன் அல்லது பம்பிங் பணிகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் நிலையில் முப்பது நிமிடங்களுக்கு ரூ.100/- வீதம் வாடகைக் கட்டணமாகப் பெறப்படுகிறது.

அரசுப்பணிகள், அரசுக் கண்காட்சிகள் போன்றவற்றுக்கு, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.5/-வீதம் பெறப்படுவதுடன், 24 மணி நேரத்திற்கு வாகனக் காத்திருப்புக் கட்டணமாக ரூ.30/- வீதம் பெறப்படுகிறது. கிரேன் அல்லது பம்பிங் பணிகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் நிலையில் முப்பது நிமிடங்களுக்கு ரூ.60/- வீதம் வாடகைக் கட்டணமாகப் பெறப்படுகிறது.

தீயணைப்பு வாகனம்
தீயணைப்பு வாகனம்

லாபத்துடன் நடத்தப்படும் கண்காட்சிகள், சந்தைகள், திருவிழாக்கள், மாநாடுகள் முதலிய பொது நிகழ்வுகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10/-வீதம் பெறப்படுவதுடன், 24 மணி நேரத்திற்கு வாகனக் காத்திருப்புக் கட்டணமாக ரூ.200/- வீதம் பெறப்படுகிறது. கிரேன் அல்லது பம்பிங் பணிகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் நிலையில் முப்பது நிமிடங்களுக்கு ரூ.100/- வீதம் வாடகைக் கட்டணமாகப் பெறப்படுகிறது.

திருமணம் மற்றும் தனிப்பட்ட பிற நிகழ்வுகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10/-வீதம் பெறப்படுவதுடன், 24 மணி நேரத்திற்கு வாகனக் காத்திருப்புக் கட்டணமாக ரூ.300/- வீதம் பெறப்படுகிறது. கிரேன் அல்லது பம்பிங் பணிகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் நிலையில் முப்பது நிமிடங்களுக்கு ரூ.100/- வீதம் வாடகைக் கட்டணமாகப் பெறப்படுகிறது.

திரைப்படம் உள்ளிட்ட ஒளிப்பதிவு நோக்கங்களுக்கான பணிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.20/-வீதம் பெறப்படுவதுடன், 24 மணி நேரத்திற்கு வாகனக் காத்திருப்புக் கட்டணமாக ரூ.150/- வீதம் பெறப்படுகிறது. கிரேன் அல்லது பம்பிங் பணிகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் நிலையில் முப்பது நிமிடங்களுக்கு ரூ.250/- வீதம் வாடகைக் கட்டணமாகப் பெறப்படுகிறது.

அவசரக் காலங்களில் மேற்கொள்ளப்படும் பம்பிங் பணிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10/- வீதம் பெறப்படுவதுடன், 24 மணி நேரத்திற்கு வாகனக் காத்திருப்புக் கட்டணமாக ரூ.100/- வீதம் பெறப்படுகிறது. கிரேன் அல்லது பம்பிங் பணிகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் நிலையில் முப்பது நிமிடங்களுக்கு ரூ.100/- வீதம் வாடகைக் கட்டணமாகப் பெறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

லாபத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படாத கண்காட்சிகள், சந்தைகள், திருவிழாக்கள், மாநாடுகள் முதலிய பொது நிகழ்வுகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10/- வீதம் பெறப்படுவதுடன், 24 மணி நேரத்திற்கு வாகனக் காத்திருப்புக் கட்டணமாக ரூ.100/- வீதம் பெறப்படுகிறது.

லாபத்துடன் நடத்தப்படும் கண்காட்சிகள், சந்தைகள், திருவிழாக்கள், மாநாடுகள் முதலிய பொது நிகழ்வுகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10/- வீதம் பெறப்படுவதுடன், 24 மணி நேரத்திற்கு வாகனக் காத்திருப்புக் கட்டணமாக ரூ.100/- வீதம் பெறப்படுகிறது.

தீயணைப்பு வாகனம்!
தீயணைப்பு வாகனம்!

திருமணம் மற்றும் தனிப்பட்ட பிற நிகழ்வுகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10/-வீதம் பெறப்படுவதுடன், 24 மணி நேரத்திற்கு வாகனக் காத்திருப்புக் கட்டணமாக ரூ.150/- வீதம் பெறப்படுகிறது.

அரசுத் துறை நிறுவனங்கள், நகராட்சி மற்றும் உள்ளாட்சிப் பணிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.20/- வீதம் பெறப்படுவதுடன், 24 மணி நேரத்திற்கு வாகனக் காத்திருப்புக் கட்டணமாக ரூ.50/- வீதம் பெறப்படுகிறது.

திரைப்படம் உள்ளிட்ட ஒளிப்பதிவு நோக்கங்களுக்கான பணிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25/- வீதம் பெறப்படுவதுடன், 24 மணி நேரத்திற்கு வாகனக் காத்திருப்புக் கட்டணமாக ரூ.50/- வீதம் பெறப்படுகிறது.

மேற்காணும் பணிகளுக்காகத் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அல்லது கோட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து உரியக் கட்டணங்களைச் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man