Published:Updated:

அச்சுறுத்தும் மாண்டஸ் புயல்: `சென்னையில் தயார்நிலையில் மீட்புக்குழுவினர்!' - காவல்துறை தகவல்

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை காவல்துறை சார்பில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

Published:Updated:

அச்சுறுத்தும் மாண்டஸ் புயல்: `சென்னையில் தயார்நிலையில் மீட்புக்குழுவினர்!' - காவல்துறை தகவல்

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை காவல்துறை சார்பில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மாண்டஸ் புயல்

தென்மேற்கு, அதை ஒட்டியிருக்கும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக (மாண்டஸ்) வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி, சென்னைக்குத் தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 13 கி.மீ-லிருந்து 10 கி.மீ-ஆகக் குறைந்திருக்கிறது.

மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல்

புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்க வாய்ப்பிருக்கிறது. தீவிரப் புயலாக நகரும் மாண்டஸ் புயல் வலு குறைந்த புயலாகக் கரையைக் கடக்கக்கூடும். புயல் கரையைக் கடக்கும்போது, 85 -100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. புயல் காரணமாக, சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியிருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது

தமிழ்நாடு அரசின் உத்தரவின் பெயரில், சென்னை பெருநகர காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, மின்வாரியம் என அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகத் தயார்நிலையில் இருக்கின்றனர். காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வுசெய்தார். மேலும், காவல்துறை தரப்பில் சிறப்புப் பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில், மாண்டஸ் புயல் பாதிப்புகளின்போது, பொதுமக்களைப் பாதுகாக்கவும், அவசர அழைப்புக்கு இடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்வதற்காகவும், சென்னை பெருநகர காவல் சார்பில் 12 மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் (District Disaster Response Force) அமைக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை பெருநகர காவல்துறை - மாண்டஸ் புயல்
சென்னை பெருநகர காவல்துறை - மாண்டஸ் புயல்

ஒவ்வொரு குழுவிலும், நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவமிக்க ஓர் உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்களைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இந்தக் குழுவினரிடம் தயார்நிலையில் உள்ளன. மேலும், படகுகளில் சென்று மீட்புப்பணிகள் மேற்கொள்ள ஐந்து காவலர்கள்கொண்ட ஒரு குழு என நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு, படகு, கயிறு உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 40 நபர்கள் அடங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுவினர் (Tamilnadu State Disaster Response Force) தகுந்த பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை பெருநகர காவல் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் சிறப்புப் பிரிவு காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரப் பாதுகாப்பு மற்றும் மீட்புப்பணியில் 16,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல் அதிகாரிகளின் குழுக்களில் ஒருங்கிணைந்து பணியாற்ற 1,500 ஊர்காவல் படையினர் (Home Guard) வரவழைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்குப் புயல், மழை வெள்ளம் குறித்து எச்சரிக்கைகள், அறிவுறுத்தப்பட்டுவருகின்றன.

சென்னை பெருநகர காவல்துறை - மாண்டஸ் புயல்
சென்னை பெருநகர காவல்துறை - மாண்டஸ் புயல்

குறிப்பாக பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகள், விளம்பரப் பலகைகள் மற்றும் சூறைக்காற்றால் பறக்கக்கூடிய பிளாஸ்டிக், இரும்புத்தகடு, கட்டுமானப் பணியிலுள்ள கண்ணாடி மற்றும் தடுப்புகள் உள்ளிட்ட இலகு பொருள்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு ரோந்து வாகனக் குழுவினர் மூலம் அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டுவருகிறது. கடற்கரைப் பகுதிகளில் மாண்டஸ் புயலின் காரணமாக அலைகளின் வேகம் அதிகப்படியாகவும், ஆபத்தான முறையிலும் இருப்பதால் பொதுமக்கள் யாரும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுவருகின்றன. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீரை அப்புறப்படுத்தப் பெருநகர சென்னை மாநகராட்சியினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றக் காவல்குழுவினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் பெரிய பள்ளங்கள், கால்வாய்கள், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுவரும் இடங்களில் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்குழுவினர் மூலம் இரும்புத் தடுப்புகள் (Barricade) அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

மாண்டஸ் புயல் - கடற்கரையில் பொதுமக்கள்
மாண்டஸ் புயல் - கடற்கரையில் பொதுமக்கள்

புயல் காரணமாக இரும்புத் தடுப்புகள் கீழே விழுந்துவிடாத வண்ணமும், பறக்காத வண்ணமும், கயிற்றால் கட்டி பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து ரோந்து காவல் வாகனங்களைச் சேர்ந்த காவலர்கள், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்து, இரும்புத் தடுப்புகள் (Barricades) கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறதா என உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து ரோந்து காவல் வாகனங்களிலும், இரும்புக்கம்பி, கட்டிங் பிளேயர், டார்ச் லைட் போன்ற அவசர உதவிப் பொருள்கள் வைத்து மீட்புப்பணிகள் மேற்கொள்ள தயார்படுத்தப்பட்டிருக்கின்றன.

காவல் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் உடனுக்குடன் தகவல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, காவல்குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து சுற்றுக் காவல் ரோந்து வாகனம் மூலம் சுரங்கப்பாதை, மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு அவ்வப்போது ரோந்து சென்று கண்காணித்து, மழைநீரை அகற்ற மாநகராட்சி குழுவினருடன் சேர்ந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மழைநீர் தேங்கி போக்குவரத்து இடையூறுள்ள பகுதிகளில் இரும்புத்தடுப்புகள் அமைத்தும், மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாண்டஸ் புயல் - கடற்கரையில் பொதுமக்கள்
மாண்டஸ் புயல் - கடற்கரையில் பொதுமக்கள்

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை பெருநகர காவல்துறையில், சிறப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 044-23452372 என்ற சிறப்பு உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கட்டுப்பாட்டு அறை மூலம் புயல் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்பட்டு, மீட்பு மற்றும் இடர் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. புயல் காரணமாக அவசர உதவி மற்றும் இடர் ஏற்பட்டால், காவல்துறை அவசர உதவி எண் 100 (அல்லது) 112, சென்னை பெருநகர மாநகராட்சி உதவி எண் 1913, தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு அவசர உதவி எண் 101 (அல்லது) 112 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். புயல் கரையைக் கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.