
தலையங்கம்
‘குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என்ற இளைய சமுதாயத்தினருக்கு வளமிக்க எதிர்காலம் உருவாக மதுப்பழக்கத்தை அறவே ஒழிக்க நாங்கள் ஆட்சி அமைத்ததும் நடவடிக்கைகளை எடுப்போம். மதுவின் மூலம் வரும் வருவாய் மட்டுமே முக்கியமல்ல, மக்களின் நலன், சமூக மாற்றம், மாணவர்கள், தாய்மார்களின் நலன் போன்றவை அதைவிட முக்கியம்.’ - அ.தி.மு.க ஆட்சிக்காலத்தின்போது, இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் கூறிய வார்த்தைகள் இவை. ஆனால், முதல்வரான பிறகு தான் கூறிய வார்த்தைகள் அவருக்கு மறந்துவிட்டதோ என்ற எண்ணம் இப்போது பொதுமக்கள் பலருக்கும் எழுகிறது.
காரணம், கள்ளச்சாராயம் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருப்பதுதான். ஒரே நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்து 15-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். இன்னும் பலர் உயிருக்குப் போராடிவருகிறார்கள். அத்தனை எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்ததும், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களை நேரில் சந்திக்க வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
‘கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்ச ரூபாய் வழங்கப்படும், சிகிச்சை பெறுவோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்' என்று சொன்ன முதல்வர், இந்தச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த விசாரணை தீவிரமாகவும் வெளிப்படையாகவும் நடைபெற இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியிருப்பதாகவும் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி உட்பட பல போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

முதல்வரின் அறிவிப்புக்கான விமர்சனங்களும் சரி, ‘இத்தனை நாள்களாக இல்லாமல் இருந்த கள்ளச்சாராயம் மரணங்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் திடீரென்று எப்படி நிகழ்ந்தன?' என்பது போன்ற கேள்வியும் சரி...தமிழ்நாடு முழுவதும் இப்போது உரக்கக் கேட்கின்றன.
கள்ளச்சாராய மரணம் என்பது வேண்டுமானால் இப்போது நடைபெற்ற ஒரு நிகழ்வாக இருக்கலாம். ஆனால், கள்ளச்சாராயப் புழக்கம் நீண்டநாள்களாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்துவருகிறது என்பது இன்று வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த மரணங்கள் நிகழ்ந்ததும் பல மாவட்டங்களிலும் ரெய்டுகள் நடத்தப்பட்டு கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். மதுவிலக்கு போலீஸார் இதுவரை என்ன செய்துகொண்டிருந்தார்கள், போலீஸாருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் அவர்கள் செயல்பட்டிருக்க முடியுமா என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் மற்றும் மெத்தனால், கள்ளச்சாராயம் தயாரிக்கிறவர்களின் கைகளுக்கு எப்படிக் கிடைக்கிறது என்பதை ஆராய்ந்து, இந்த விஷத்தின் மூலத்தை அகற்றுவோம்' என, துப்பறியும் நிபுணரைப் போல இப்போது சொல்லும் அரசு, இத்தனை நாள்களாக இதுகுறித்த எந்தத் துப்பும் இல்லாமல் எப்படி இருந்தது?
நடந்திருக்கும் கள்ளச்சாராய மரணங்களுக்குக் காரணம் மெத்தனால் மட்டுமல்ல, அரசு இயந்திரத்தின் மெத்தனமும்தான். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கும் தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும். கள்ளச்சாராயமோ, டாஸ்மாக் மதுவோ, தறிகெட்டு விற்கப்படும் போதைப்பொருள்களோ, எல்லா போதை அடிமைத்தனங்களின் பிடியிலிருந்தும் மக்களை விடுவிப்பதே ஒரு நல்லரசின் இலக்காக இருக்க வேண்டும்.