மாண்டஸ் புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், அத்தியூர் திருக்கையைச் சேர்ந்த ரகு, காத்தவராயன், மேல்வாளையைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் டி.இடையார் பகுதியில் கட்டட வேலை செய்துவந்துள்ளனர். நேற்று முன்தினம் (12.12.2022) மாலை, வேலை முடிந்து இரண்டு இரு சக்கர வாகனத்தின் மூலம் மூவரும் வீட்டுக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது, கொங்கராயனூர் - அருளவாடி இடையே தென்பெண்ணை ஆற்றிலுள்ள தரைப்பாலத்தைக் கடந்துள்ளனர்.

தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருந்ததால், வாகனங்களை தண்ணீரில் தள்ளிக்கொண்டு சென்றிருக்கின்றனராம். அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் தவறி விழுந்து ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களின் கூக்குரலைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கார்த்திகேயன் என்பவரை மட்டும் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள இரண்டு பேர் காணாமல் போயிருக்கின்றனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்புத்துறையினர், ரகு, காத்தவராயன் ஆகியோரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தொடர்மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுவதால், அவர்களைக் கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் அந்தப் பகுதிக்குச் சென்று மீட்பு பணியைப் பார்வையிட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் புகழேந்தி, கரையோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இந்நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் மோகன், இரண்டு இளைஞர்களை மீட்பதற்கான பணியை பார்வையிட்டிருக்கிறார். வேலைக்குச் சென்றுவிட்டு ஆற்றைக் கடந்து வீடு திரும்பியபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணி இரண்டு நேரமாக நீடித்துவருவது அந்தப் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.