Published:Updated:

கொட்டிய கோடை மழை; இடி, மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்த சோகம்!

இடி, மின்னல் தாக்கி உயிரிழப்பு

நான்கு மாவட்டங்களில் பெய்த கோடை மழையின்போது நேற்று ஒரே நாளில் இடி, மின்னல் தாக்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

கொட்டிய கோடை மழை; இடி, மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்த சோகம்!

நான்கு மாவட்டங்களில் பெய்த கோடை மழையின்போது நேற்று ஒரே நாளில் இடி, மின்னல் தாக்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இடி, மின்னல் தாக்கி உயிரிழப்பு

தமிழ்நாட்டில்... விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை பெய்தது. இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது என்றாலும், மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வரகப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அஞ்சலை (36), நேற்று வயல்வெளிப் பகுதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்திருக்கிறது. எதிர்பாராதவிதமாக அஞ்சலைமீது இடி தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பதினோராம் வகுப்பு மாணவி, அன்பு, அஞ்சலை
பதினோராம் வகுப்பு மாணவி, அன்பு, அஞ்சலை

அதேபோல், திண்டிவனம் அருகேயுள்ள பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மனைவி ரஞ்சிதம் (60) என்பவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தார். மேலும், செஞ்சி பகுதியில் சற்குணம், உமா ஆகிய இரு பெண்கள் நேற்று நெல் நடவுசெய்யும் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பலமாக மழை பெய்திருக்கிறது. திடீரென அவர்களுக்கு அருகிலுள்ள பகுதியில் பலத்த சத்தத்துடன் இடி விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டு, காயமடைந்த இருவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (38). இளநீர் வியாபாரியான இவர் நேற்று மாலை இளநீர் வியாபாரம் செய்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கனமழை பெய்திருக்கிறது. எனவே, சாலையோரமாக இருக்கும் புளியமரத்தின் அடியில் வாகனத்தை நிறுத்தி ஒதுங்கியிருக்கிறார். அப்போது, மின்னல் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இடி-மின்னல்
இடி-மின்னல்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள அண்டம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்துவந்திருக்கிறார். நேற்றைய தினம் அவரது நிலத்திலுள்ள வேர்க்கடலை பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்திருக்கிறார். அங்கு, திடீரென இடி, மின்னலுடன் மழைபெய்த நிலையில், மாணவி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும், மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ள அனுப்பப்பட்டியைச் சேர்ந்த பாண்டி (40) என்பவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். நான்கு மாவட்டங்களில் பெய்த கோடை மழையின்போது நேற்று ஒரே நாளில் இடி, மின்னல் தாக்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.