Published:Updated:

ஈரோடு: தொடரும் கனமழை... அந்தியூர் நகருக்குள் புகுந்த வரட்டுப்பள்ளம் அணை நீர்!

மழைநீரால் நிரம்பி வழியும் அந்தியூர் பெரிய ஏரி.

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால் அந்தியூர் கெட்டி சமுத்திரம் ஏரி, பெரிய ஏரி , ஆப்பக்கூடல் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Updated:

ஈரோடு: தொடரும் கனமழை... அந்தியூர் நகருக்குள் புகுந்த வரட்டுப்பள்ளம் அணை நீர்!

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால் அந்தியூர் கெட்டி சமுத்திரம் ஏரி, பெரிய ஏரி , ஆப்பக்கூடல் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மழைநீரால் நிரம்பி வழியும் அந்தியூர் பெரிய ஏரி.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்தியூர் தாலுகாவுக்கு உட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அங்கிருந்து கிளை நதிகளின் வழியாக வரும் மழைநீரால் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பும் நிலையில் இருந்தது. இந்நிலையில் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. ஏற்கெனவே வரட்டுபள்ளம் அணை 33.46 அடி நிரம்பியிருந்த நிலையில், இன்று அதிகாலையில் அணையின் முழு கொள்ளளவான 34 அடிக்கு தண்ணீர் நிரம்பியது.

இதன் காரணமாக இன்று அதிகாலை முதல் அணைக்கு வந்த உபரிநீரான 3,200 கன அடி நீரும் முழுமையாக வெளியேறியது. இந்த உபரிநீரால் கெட்டி சமுத்திரம் ஏரி நிறைந்து, அந்தியூர்- பர்கூர் சாலையைக் கடந்து செல்கிரது. இதனால் அந்தியூருக்கும் பர்கூர் மலைப்பகுதிக்கும் இடையிலான போக்குவரத்து நேற்று நள்ளிரவு முதல் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

விளை நிலங்களில் புகுந்த வரட்டுப்பள்ளம் அணையின் உபரிநீர்.
விளை நிலங்களில் புகுந்த வரட்டுப்பள்ளம் அணையின் உபரிநீர்.

இந்த தண்ணீர் தற்போது அந்தியூர் பெரிய ஏரிக்கு வந்து கொண்டுள்ளது. ஏற்கனவே பெரிய ஏரி நிரம்பியதால் அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூருக்கு செல்லும் சாலையிலும், அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை, பவானிக்குச் செல்லும் சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது அதிக அளவு மழை நீர் வெளியேறி வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால் கெட்டி சமுத்திரம் ஏரி, பெரிய ஏரி , ஆப்பக்கூடல் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தியூர் பெரிய ஏரியில் இருந்தும் தவிட்டுப்பாளையம் பள்ளத்திலும் அதிகளவு தண்ணீர் வெளியேறி அந்தியூர் நகருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பெரியார் நகர், பொன் நகர், அண்ணா மடுவு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இன்று பகல் 2 மணி நிலவரப்படி வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 1,652 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

அந்தியூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொக்லைன் இயந்திரத்தின் மீது அமர்ந்து சவாரி செய்யும் பள்ளி மாணவர்கள்.
வெள்ளநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொக்லைன் இயந்திரத்தின் மீது அமர்ந்து சவாரி செய்யும் பள்ளி மாணவர்கள்.

இதேபோல ஈரோடு மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பவானியில் 95 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், நீர்நிலைகள், ஏரி, குட்டை, குளங்கள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், அம்மாபேட்டை, கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாளவாடியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தரை வழி பாலங்களை மூழ்கடித்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


குண்டேரிபள்ளம், கொடிவேரி, தாளவாடி, பெருந்துறை, சத்தியமங்கலம், நம்பியூர், பவானிசாகர், கோபி, ஈரோடு, கவுந்தப்பாடி, சென்னிமலை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆங்காங்கே திடீர் அருவிகள் முளைத்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன.