பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

நீலகிரி நிவாரணம்!

நீலகிரி நிவாரணம்!
News
நீலகிரி நிவாரணம்!

கடந்த நூறு ஆண்டுகளில் தென்னிந்தியாவில் பதிவான மழை அளவுகளில் இதுவே அதிகம்.

ஜூன் மாதம் வந்துவிட்டால் சொல்லி வைத்ததுபோல நீலகிரிக்குத் தென்மேற்குப் பருவமழையும் கூடவே வந்துவிடும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நிலைமை மாறிவிட்டது. போதிய மழை இல்லை. இந்த ஆண்டு கடுமையான வறட்சியும் நிலவியது. ஒருபக்கம் மக்கள் காலிக் குடங்களோடு தண்ணீருக்குத் திண்டாட, இன்னொரு பக்கம் காட்டு விலங்குகள் எல்லாம் நீரின்றி இடம்பெயர்ந்தன. காடுகள் காய்ந்து போனதால் ஏராளமான வனங்கள் தீக்கிரையாயின. இந்த நிலையில்தான் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை ஆகஸ்டில் பெய்யத்தொடங்கியது. வானம் உடைந்தது போலக் கொட்டித்தீர்த்தது. அவலாஞ்சியில் ஒரேநாளில் 1000 மில்லி மீட்டர் மழை பதிவானது. கடந்த நூறு ஆண்டுகளில் தென்னிந்தியாவில் பதிவான மழை அளவுகளில் இதுவே அதிகம்.

அணைகள் அனைத்தும் ஒரே நாளில் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட, நீலகிரியே வெள்ளக்காடாக மாறியது. இந்த வெள்ளத்தால் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 5,000 பேர் வீடுகளை இழந்தனர். பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களும் வெள்ளக்காடாக மாறின. பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அரசின் சார்பிலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் உதவிகள் வர, நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. மழை நின்ற பிறகு வீடு திரும்பிய மக்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்கள் வீடுகளைக் காணாமல் தவித்துப்போயினர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் கிடைக்கவில்லை. குறிப்பாகக் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்கள் தங்கள் குடிசைகளுக்குச் சென்று பார்த்தபோது, அது மனிதர்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கான தடயங்களே இல்லாமல் இருந்தது.

நீலகிரி நிவாரணம்!

இந்தச் சூழலில், பெருமழைப் பேரிடரில் உடைமைகளை இழந்து தவிக்கும் பழங்குடி மக்களுக்கு நமது விகடன் குழுமத்தின் வாசன் அறக்கட்டளை சார்பில் உதவிகள் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

முதலில் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பழங்குடியின கிராமங்களுக்குச் சென்று அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றன என்று வீடு வாரியாகக் கணக்கெடுத்தோம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேவ்வேறு விதமான பாதிப்புகள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இதில் அடர்வனப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி கிராமங்களுக்கும் சென்று தேவைகளைக் கேட்டறிந்தோம்.

இதுபற்றித் தெரிந்துகொள்ள முதலில் நாம் சென்றது பனியர் பழங்குடி மக்கள் வசிக்கும் தேன் வயல் கிராமத்திற்குத்தான். வீடிழந்து பொருள்களை இழந்து நின்ற அந்த மக்களிடம் அவர்களுக்கான தேவைகள் குறித்து விசாரித்தோம். ஆனால் அவர்களோ, ``எங்களுக்கு முகாமில் ஒரு சில பொருள்கள் வழங்கினார்கள். அதை வைத்துச் சமாளித்துக்கொள்கிறோம். எங்களைவிட அதிகபாதிப்புகளுக்கு உள்ளாகி எந்த உதவியும் கிடைக்காமல் பல பழங்குடி கிராமங்கள் உள்ளன. அவர்களுக்கு உதவுங்கள்’’ என்று விவரங்கள் சொன்னது நம்மை நெகிழவைத்தது.

அந்த மக்கள் தந்த தகவல் அடிப்படையில் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 7 பழங்குடியின கிராமங்களுக்குச் சென்று ஆய்வு செய்தோம். அத்துடன் தேன்வயலையும் சேர்த்துக்கொண்டோம். இதுமட்டுமல்லாமல், பந்தலூர் எருமாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் வனப்பகுதிகளில் வாழும் எந்த உதவியும் சென்று சேர்ந்திராத கிராமங்களுக்குச் சென்று தேவைகளைக் கேட்டறிந்தோம்.

நீலகிரி நிவாரணம்!

தங்கள் இனக்குழு அல்லாத மக்களுடன் பேசத் தயக்கம் காட்டும் இந்தப் பழங்குடிகள் நாம் வழங்கிய பொருள்களுக்கு பதிலாக ஒரு சில வார்த்தைகளையும் புன்னகைகளையும் பரிசாகத் தந்தனர். கூடுதல் சிறப்பாக எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை எனப் பெருந்தன்மையாகக் கூறிய தேன்வயல் கிராமத்திலுள்ள 20 சிறுவர் சிறுமியருக்கு விகடன் குழுமத்தின் சார்பில் புத்தாடைகள் வழங்கினோம்.

பெரும்பாலும் பண்டிகைகளுக்குக்கூடப் புத்தாடைகளை அணிந்திராத இக்குழந்தைகளுக்கு, நாம் வழங்கிய உடனே அணிவித்து அழகு பார்த்தனர் பெற்றோர்கள். இந்தப் பொருள்களின் மூலம் இவர்களின் வாழ்க்கைத்தரம் மாறிவிடப்போவதில்லைதான் என்றாலும், நிச்சயம் உடனடி ஆறுதல் ஒன்றைத் தரும்.