ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்த இந்தியா, ஒரு கட்டத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று தனித் தனி நாடுகளாக மாறியது. தென் இந்தியாவிலேயே தமிழ்நாடு, கன்னடா, தெலுங்கு தேசம் என்று பல பிரிவுகள் பிரிந்தன. ஏன் தெலுங்கு தேசமே தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக உடைந்தது. இதே போல வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஜெர்மனி, யுகோஸ்லாவியா, செக்கோஸ்லோவாக்கியா, சூடான், ஸைப்ரஸ், கொரியா என அரசியல் காரணங்களுக்காக மனிதனால் பிரிக்கப்பட்ட நிலப்பரப்புகள் பல!
ஆனால் இயற்கையே ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பை இரண்டாகப் பிரிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், உலகின் இரண்டாவது மிகப்பெரிய கண்டமான ஆப்பிரிக்கா இரண்டாகப் பிரிகிறது.

புவியியலில் நிகழும் எல்லா மாற்றங்களையும் போலவே, இதுவும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் எடுக்கும் ஒரு மிக நீண்ட செயல்முறைதான், ஆனால் பிளவு பூரணமடையும் ஒரு நாள், கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியைக் கண்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து முற்றாகத் துண்டித்து புதிய எட்டாவது கண்டத்தை உருவாக்கப்போவது மட்டுமல்ல, இதன் விளைவாக இரண்டு நிலப்பகுதிகளுக்கு இடையில் ஆறாவதாக ஒரு புதிய மகா சமுத்திரமும் உருவாகப் போகிறது என்பதுதான் இங்குக் கவனிக்கவேண்டிய விஷயம்.
சரி, வேறு என்னவெல்லாம் நடக்கப்போகிறது? இதனால் வறண்டு போன ஆப்பிரிக்கப் பூமிக்கு விடிவு கிடைக்குமா? சுரண்டப்பட்ட ஆப்பிரிக்க ஏழைகளுக்குச் சாப விமோசனம் கிட்டுமா? ஏன், கிழக்கு ஆபிரிக்காவின் ஒரு பகுதி முற்றாகக் காணாமல் போவதற்கும் கூட சாத்தியம் உள்ளதா? இப்படிப் பல கேள்விகள்.
ஆப்பிரிக்காவில் என்னதான் நடக்கிறது என்று கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா...
பிளவின் ஆரம்பம்
2005ம் ஆண்டு எத்தியோபிய பாலைவனத்தில் திடீரென்று பூமி சிறிது சிறிதாகப் பிளக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில், வறட்சியால் ஏற்படும் வெடிப்பு போல என்று அலட்சியமாக இருந்த எத்தியோப்பிய மக்கள், நாளுக்கு நாள் அந்தப் பிளவு அதிகரிக்க அதிகரிக்க, அதிர்ந்துபோனார்கள். 10 நாள்களுக்குத் தொடர்ந்த இந்த நிகழ்வில் சுமார் 56 கிலோமீட்டர் தூரத்துக்குப் பிளவு ஏற்பட்டது.
அதன் பின் 2018ம் ஆண்டு அதே போன்ற இன்னொரு நிகழ்வு தென்மேற்கு கென்யாவில் பதிவானது. பிஸியான (Nairobi - Narok) நைரோபி - நரோக் நெடுஞ்சாலையின் ஒரு பெரிய விரிசல், பல கிலோமீட்டர் நீளத்திற்குத் திடீரென தோன்றியது. திடீரென வீதி இரண்டாகப் பிரியத் தொடங்கி நைரோபி - நரோக் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வாகனங்கள் எல்லாம் அப்படியே தேங்கி நிற்க, கென்யா அரசு என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து நின்றது.

சமீபத்தில் அதாவது சென்ற மாதம் 28ம் தேதி மீண்டும் அதே கென்யாவின் நைரோபி நகரில் சரியாக இரவு 10.27 மணியளவில் ஒரு பெரிய நில அதிர்வு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்கெனவே இருந்த பிளவு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.
என்ன நடக்கிறது என்று ஆராய்ந்த போது ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் பூமி இரண்டு துண்டுகளாகப் பிளக்கத் தொடங்கியுள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவில் உள்ள டெக்டோனிக் தகடுகளில் ஏற்பட்ட விலகல் காரணமாக இந்த விரிசல் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பிளவின் காரணம்
இது எப்படிச் சாத்தியம் என்று தெரிந்து கொள்ள, நாம் வாழும் பூமியின் அமைப்பைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். இந்தப் பூமியானது டெக்டோனிக் எனப்படும் தகடுகளால் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த டெக்டோனிக் தகடுகள் அதன் கீழ் உள்ள 'Magna' எனும் எரிமலை குழம்புகள் மேல் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்துகொண்டே இருக்கும். இந்த டெக்டோனிக் தகடுகள் ஒன்றோடு ஒன்று மோதும் போது மலைகளும், அவை ஒன்றின் மேல் ஒன்று ஏறும் போது பள்ளத்தாக்குகளும், அவை பிரியும் போது பெருங்கடல்களும் உருவாகின்றன.
ஆப்பிரிக்க டெக்டோனிக் தகடு, அரேபிய டெக்டோனிக் தகடு மற்றும் சோமாலி டெக்டோனிக் தகடு என ஆப்பிரிக்கக் கண்டம் முதன்மையாக மூன்று டெக்டோனிக் தட்டுகளின் இயக்கத்தால் பாதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது உருவாகி இருக்கும் ஆப்பிரிக்க நில விரிசல் பிரதானமாக ஆப்பிரிக்க டெக்டோனிக் தகடு மற்றும் சோமாலி டெக்டோனிக் தகடுகளின் இயக்கம் காரணமாகவே நிகழ்ந்துள்ளது.

ஆப்பிரிக்க டெக்டோனிக் தகடு என்பது முழு ஆப்பிரிக்கக் கண்டத்தையும், அட்லாண்டிக் பெருங்கடலின் சில பகுதிகளையும் சுற்றியுள்ள கண்ட அடுக்குகளையும் உள்ளடக்கிய பெரிய டெக்டோனிக் தகடாகும். இது மேற்கில் மத்திய அட்லாண்டிக் ரிட்ஜ் முதல் கிழக்கில் கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவு மண்டலம் (East African Rift Zone) வரை நீண்டுள்ளது. ஆப்பிரிக்க டெக்டோனிக் தகடு வடகிழக்கு திசையில் நகர்கிறது, சோமாலியன் டெக்டோனிக் தகடு என்பது ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய டெக்டோனிக் தட்டு ஆகும். சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா மற்றும் தான்சானியா போன்ற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் பகுதிகள் இதில் அடங்கும். சோமாலியன் டெக்டோனிக் தகடு தென்மேற்கு திசையில் நகர்கிறது. இதுவே கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவுக்கு இன்று காரணமாகியுள்ளது.
இவ்வாறு ஆப்பிரிக்காவைத் தாங்கி நிற்கும் ஆப்பிரிக்கன் டெக்டோனிக் பிளேட்டும், சோமலியன் டெக்டோனிக் பிளேட்டும் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லத் தொடங்கியதன் விளைவு தற்போது ஆப்பிரிக்காவில் பிளவாக விரியத்தொடங்கியுள்ளது.
பூமியின் தோற்றமும் பெருங்கடல் மற்றும் கண்டங்களின் உருவாக்கமும்
ஜெர்மன் காலநிலை நிபுணரும், புவியியலாளரும், வானிலை மற்றும் துருவ ஆராய்ச்சியாளருமான வெக்னரின் கோட்பாட்டின் படி (Wegener's Theory), ஆரம்பத்தில் பூமியில் உள்ள கண்டங்கள் எல்லாம் பாஞ்சியா (Pangaea) எனும் ஒரு மாபெரும் பெரிய நிலப்பரப்பாக இருந்தன.
சுமார் 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் Jelly Fish உருவானபோது - வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவை கோண்ட்வானா எனப்படும் ஒரு பெரிய கண்டமாக ஒன்றாக ஒட்டியிருந்தன. சுமார் 525 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிலப்பரப்பு உடைந்தது, ஒருபுறம் வட அமெரிக்காவும், மறுபுறம் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சில சிறிய தீவுத் திடல்களாகவும் பிரிந்தன. இந்த இரண்டு தட்டுகளும் இரண்டாகப் பிரிந்து சென்று 'Iapetus' பெருங்கடலை உருவாக்கியது.

இருபத்தைந்து மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் முதல் மீன் மற்றும் நிலத் தாவரங்கள் தோன்றிய வேளை, சிறிய தீவுகளாக இருந்த நிலப்பகுதிகள் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவை விட்டு விலகி, வட அமெரிக்காவை நோக்கி Iapetus வழியாக நகரத் தொடங்கியது. இந்த இயக்கம் Iapetus பெருங்கடலை மூடி, அதே நேரத்தில் Rheic பெருங்கடலைத் திறந்து வைத்தது.
இவ்வாறு ஒரு மாபெரும் 'Jigsaw' புதிரில் உள்ள துண்டுகளைப் போல, கண்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிளவுபட்டும், நகர்ந்தும், மீண்டும் ஒன்றிணைந்தும் எனப் பல மாற்றங்களுக்கு உள்ளாகி இறுதியில் இன்று உள்ள சமுத்திரங்களையும் கண்டங்களையும் உருவாக்கின. பூமியின் வரலாறு முழுவதும், சுமார் 500 மில்லியன் ஆண்டுகள் இடைவெளியில் ஆறு பெரிய கண்ட முறிவுகள் இதுவரை நிகழ்ந்துள்ளன. எனில் தற்போது நிகழப்போவது ஏழாவது பெரிய கண்ட முறிவாக இருக்கப்போகிறது.
East African Rift
பூமியின் மிக நீண்ட பிளவுகளில் ஒன்றான கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவு அல்லது ஆப்ரோ - அரேபியப் பிளவு என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்காவில் உருவாகி இருக்கும் இந்தப் பெரும் பிளவு, தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஜோர்டானிலிருந்து தெற்கே கிழக்கு ஆப்பிரிக்கா வழியாக மொசாம்பிக் வரை நீள்கிறது.
இந்தப் பிளவு ஏதோ அடுத்த பத்து இருபது நாள்களுக்குள் நிகழ்ந்து ஆப்பிரிக்கா இரண்டு துண்டங்களாகப் பிரிந்து விடுமா என்றால் இல்லை. தற்போது விரிசல் விடத் தொடங்கியுள்ள இந்தப் பிளவு ஆப்பிரிக்கா கண்டத்தை முற்றாக இரண்டு துண்டுகளாகப் பிளந்து பிரிக்க இன்னும் குறைந்தது 5 மில்லியன் முதல் 10 மில்லியன் ஆண்டுகளாவது ஆகும் என்றே கருதப்படுகிறது. ஆண்டுக்கு அரை அங்குலம் முதல் 2 அங்குலம் வரை நகரும் இவை உலகின் இரண்டாவது மிகப்பெரிய கண்டமான ஆப்பிரிக்காவைத் துண்டு போடப் போகிறது.

சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களின் பிரிவு எப்படி அட்லாண்டிக் பெருங்கடல் உருவாவதற்கு வழிவகுத்ததோ அதே போல இந்த ஆப்பிரிக்க பிளவும் விரிவடையும் போது, அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலிலிருந்து கடல் நீர் பிளவின் பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்ந்து வந்து முடிவில் அது புதிய ஒரு பெருங்கடலையும் உருவாக்கப் போகிறது.
இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்?
ஆப்பிரிக்காவின் பிளவு உலக வரைபடத்தையே மாற்றி வரையப்போகிறது. சில மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் நடக்கப்போகும் நிகழ்வு இது என்பதால் அப்போது உலகம் எவ்வாறாக இயங்கிக் கொண்டிருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. இருந்தும் ஒரு புரிதலுக்காக ஒருவேளை தற்போதைய நிலவரத்தை வைத்தே அப்போது நடக்கவிருக்கும் பிளவை அணுகினால், பின்வரும் பின்விளைவுகள் ஏற்படலாம்.
ஆப்பிரிக்க மக்களையும் கால்நடைகளையும் இடப்பெயர்வுக்கு மட்டுமல்ல உயிர்ச் சேதங்களுக்கும் இட்டுச் செல்லலாம். மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு ஆளாகலாம். ஆனால் அதே நேரத்தில் புதிய கடற்கரையோரங்களின் உருவாக்கம் ஆப்பிரிக்கப் பொருளாதார விரிவாக்கத்திற்கான பல புதிய வாய்ப்புகளையும் திறக்கலாம்.
ருவாண்டா, உகாண்டா, புருண்டி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, மலாவி மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் அனைத்தும் புதிய கடற்கரைகளைப் பெறுவதால் கூடுதல் வர்த்தக துறைமுகங்கள், மீன்பிடித் தளங்கள் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள இணைய உள்கட்டமைப்பு போன்றவற்றின் வளர்ச்சி அதன் பொருளாதார திறனையும் அதிகரிக்கலாம்.

சோமாலியா, எரித்திரியா, ஜிபூட்டி, எத்தியோப்பியாவின் கிழக்குப் பகுதிகள், கென்யா, தான்சானியா மற்றும் மொசாம்பிக் ஆகியவை ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து விலகிச் செல்ல, கென்யா, தான்சானியா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கு தலா இரண்டு நாடாட்சி எல்லைகளும் கிடைக்கப் போகின்றன.
ஆப்பிரிக்காவுக்கு வரமா சாபமா?
உலகின் கண்டங்களுக்கு எல்லாம் தாய் கண்டம் என்று செல்லமாக அழைக்கப்படும் ஆப்பிரிக்காவில்தான் மனிதர்களும் மனித மூதாதையர்களும் 5 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். மனித வரலாற்றிலேயே ஆப்பிரிக்கக் கண்டம் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றது. 'மனிதக்குலத்தின் தொட்டில்' என்று போற்றப்படும் ஆப்பிரிக்கா மட்டுமே மனிதர்கள் (ஹோமோ சேபியன்ஸ்) மற்றும் அவர்களின் முன்னோர்களின் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு முக்கிய கட்டத்தையும் கண்கூடாகக் கண்ட ஒரே கண்டமாகும். மனித நாகரீக வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் புதை படிவ ஆதாரங்களைக் கொண்ட உலகின் ஒரே கண்டமும் ஆப்பிரிக்கா மட்டுமே.
ஆப்பிரிக்காவில் மட்டும்தான் இன்றைக்கும் பெரும் விலங்கு மந்தைகள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன. கடற்கரைகள், மலைகள், பாலைவனங்கள், ஈரநிலங்கள் முதல் முடிவில்லாத திறந்த சவன்னாக்கள் (புல்வெளிகள்) வரை இயற்கையின் அத்தனை வரங்களையும் மொத்தமாகப் பெற்ற மகத்தான பரந்த நிலப்பரப்பு ஆப்பிரிக்கா. தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம், வெள்ளி, வெண்கலம் என அத்தனை விலை மதிப்பில்லாத செல்வங்களும் ஒருங்கே கொட்டிக்கிடக்கும் நிலம் ஆப்பிரிக்க நிலம்.
இத்தனை அதிசயங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆப்பிரிக்காவில்தான் இன்று வறுமையும், பஞ்சமும், கொடிய நோய்களும் தலைவிரித்து ஆடுகின்றன. இயற்கையால் அள்ளி அள்ளி வழங்கப்பட்ட மொத்த செல்வத்தையும், பேராசைப் பிடித்த ஐரோப்பியரும், பிரிட்டிஷ்காரரும், அமெரிக்கரும் மொத்தமாக வாரிச் சுருட்டிக்கொண்டு, அப்பாவி ஆப்பிரிக்காவை இன்றைய ஏழ்மை நிலைக்குத் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

ஆனால் இயற்கை அன்னை மட்டும் ஆப்பிரிக்காவைக் கைவிடுவதாக இல்லை. உலகில் எங்கும் இல்லாத ஒரு அதிசயத்தை ஆப்பிரிக்கப் பூமியில் நிகழ்ந்த ஆரம்பித்துள்ளது இயற்கை. இது ஆப்பிரிக்காவுக்கு வரமா இல்லை சாபமா என்பதைத் தெரிந்து கொள்ள நானும் நீங்களும் இன்னும் பத்து மில்லியன் ஆண்டுகள் உயிரோடு இருந்தால் மட்டும்தான் சாத்தியம்.
நம் சதையும் எலும்புகளும் மக்கிப் போய் மண்ணோடு மண் கலந்துவிட்டிருக்கும் அந்தக் காலத்தில், இரண்டு துண்டுகளாகப் பிளந்து பிரியப்போகும் ஆப்பிரிக்கா கண்டம், அதன் இழந்த வசந்தத்தை அம்மக்களுக்கு மீண்டும் மீட்டுக் கொடுக்கட்டும்!