அலசல்
Published:Updated:

உத்தரகாண்ட் பேரிடர்... உண்மைக் காரணம் என்ன?

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

கடந்த 30 ஆண்டுகளில் பல இயற்கைப் பேரிடர்களை உத்தரகாண்ட் சந்தித்திருக்கிறது

தொடர் பேரிடர்களைச் சந்தித்துவருகிறது உத்தரகாண்ட் மாநிலம். இமயமலைப் பகுதியில் அமைந்திருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து விழுந்ததால், சமோலி மாவட்டம், ரெய்னி கிராமம் அருகேயுள்ள தவுலிகங்கா ஆற்றில் பிப்ரவரி 7-ம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில், இரண்டு புனல்மின் திட்டங்களுக்கான கட்டுமானங்கள் கடுமையாகச் சேதடைந்தன. புனல்மின் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த 150 பேரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2013-ம் ஆண்டு, கேததார்நாத்தில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டதைப்போல, தற்போதும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் பல இயற்கைப் பேரிடர்களை உத்தரகாண்ட் சந்தித்திருக்கிறது. ஒன்றுபட்ட உத்தரப்பிரதேசத்திலிருந்த உத்தர்காசியில் 1991, அக்டோபரில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதில், ஆயிரக்கணக்கான வீடுகள் நாசமாகின. 768 பேர் உயிரிழந்தனர். 1998-ம் ஆண்டு பிதோரகார் மாவட்டம், மல்பாவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள் 55 பேர் உட்பட 255 பேர் உயிரிழந்தனர். 1999-ம் ஆண்டு சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடைசியாக, 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் கேதார்நாத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் 5,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் பேரிடர்... உண்மைக் காரணம் என்ன?
உத்தரகாண்ட் பேரிடர்... உண்மைக் காரணம் என்ன?

உத்தரகாண்ட்டில் இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் தொடர்ந்து நிகழ்வதற்கான காரணங்கள் குறித்து சுற்றுச்சூழல் நிபுணர்களிடம் பேசினோம். உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் அமைந்துள்ள இந்திய வனஉயிரி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ரமேஷிடம் பேசியபோது, ‘‘இது போன்ற இயற்கைப் பேரிடர் நடப்பதற்கு முக்கியக் காரணம் காலநிலை மாற்றம். ஆனால், காலநிலை மாற்றம் என்ற பிரச்னையை நாம் சாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறோம். காலநிலை மாற்றம் காரணமாக, இமயமலையிலுள்ள பனிப்பாறைகளில் உடைப்பு ஏற்படுகிறது. அதனால், இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன.

ஆற்றங்கரைகளில் அணைகள் கட்டுதல், சாலைகள் போடுதல், கட்டடங்களைக் கட்டுதல் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் ஏற்படுகிற அழிவுகள் சரிசெய்யப்பட வேண்டும். மரங்களை வளர்த்து ஆற்றங்கரைகளை பலப்படுத்த வேண்டும். இதனால், இயற்கைப் பேரிடர்களையும், அதனால் ஏற்படுகிற பாதிப்புகளையும் குறைக்க முடியும். பொதுவாக பனிப்பாறை வெடிப்பு சம்பவம், பிப்ரவரி மாதத்தில் நடக்காது. ஆனால், இப்போது முதன்முறையாக பிப்ரவரி மாதத்தில் அது நிகழ்ந்திருக்கிறது. எனவே, காலநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் நாம், அதில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

ரமேஷ்
ரமேஷ்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜனிடம் பேசினோம். ‘‘இமயமலையில் பனிமலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ரிப்போர்ட் வெளியானது. அதாவது, பெரிய பெரிய பனிமலைகள் ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு மலைகளாக உடைகின்றன. அதனால், பனிமலைகள் அதிகரிக்கின்றன என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டது. அது நமக்கு மிகப்பெரிய எச்சரிக்கை. பனிப்பொழிவு குறைவதால் பனிமலைகளில் உடைப்பு ஏற்படுகிறது. ஜனவரி, பிப்ரவரியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், பனிப்பொழிவு குறைவாகவே இருந்தது. அதனால், பனிமலை வெடித்து கீழே விழுந்திருக்கிறது. அதனால்தான், இந்தப் பேரிடர் நிகழ்ந்திருக்கிறது.

இமயமலை என்பது உலகில் மிகவும் இளமையான மலை. அதாவது, வயது குறைவான மலை. மேற்குத் தொடர்ச்சி மலை வயதில் மூத்த மலை. எனவே, அது கடினமான பாறைகளைக் கொண்டதாக இருக்கிறது. இமயமலை வயதில் இளமையானது என்பதால், அதில் அடுக்குப் பாறைகளாக இருக்கின்றன. அதனால், ஏற்கெனவே இமயமலையில் நிறைய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அடுக்குப் பாறைகள்கொண்ட இமயமலைப் பகுதியில் அணைகள் கட்டக் கூடாது, குகைகள் அமைக்கக் கூடாது; மின் திட்டங்கள் கூடாது.

சுந்தரராஜன்
சுந்தரராஜன்

ஆனால், வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் தொடர்ந்து கான்கிரீட் கட்டடங்களை அமைக்கிறார்கள். பாறைகளைத் தகர்க்கிறார்கள். கான்கிரீட் கட்டடங்கள் அதிகரிப்பதால் இமயமலைப் பகுதிகள் வெப்பமயமடைகின்றன. அதனால், பனிப்பொழிவு குறைந்து, பனிப்பாறைகள் வெடிக்கின்றன. 2013-ல் இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பிறகு, ‘அங்கு அணைகள் கட்டினால் நிறைய அழிவுகள் ஏற்படும்’ என்று எங்களைப் போன்ற சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எச்சரித்துவந்தோம். அதையெல்லாம் மீறி, கடந்த சில ஆண்டுகளில் நிறைய மின்திட்டங்களைக் கொண்டுவந்தார்கள். அதுதான் இன்றைய பேரிடருக்குக் காரணமாக அமைந்துவிட்டது. 150 பேர் காணாமல் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்’’ என்றார் சுந்தரராஜன்.

இயற்கை பாடமெடுத்துக்கொண்டே இருக்கிறது... எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?