Published:Updated:

காற்று மாசுபாட்டை எவ்வாறு அளவிடுகிறார்கள்? | Doubt of Common Man

காற்று மாசுபாடு
News
காற்று மாசுபாடு

உலகின் முதலிடத்திலிருக்கும் 50 மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 35 நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Published:Updated:

காற்று மாசுபாட்டை எவ்வாறு அளவிடுகிறார்கள்? | Doubt of Common Man

உலகின் முதலிடத்திலிருக்கும் 50 மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 35 நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

காற்று மாசுபாடு
News
காற்று மாசுபாடு
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் கௌசல்யா என்ற வாசகர், "காற்று மாசுபாட்டை எவ்வாறு அளவிடுகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

நாம் சுவாசிக்கும் காற்று, தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் வெளியிடும் புகையினால் அசுத்தப்படுத்தப்படுகின்றது, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்ஸைடுகள், பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும் வாகனங்களிலிருந்தும் வெளிவரும் வீரியமிக்க ஹைட்ரோ கார்பன்கள், வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு, தொழிற்சாலைகளிலிருந்தும், உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்தும் வெளிவரும் உலோகத்துகள்கள், ரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரிமச் சேர்மங்கள் முதலியவை காற்றை மாசுபடுத்துகின்றன. இந்தியா உட்பட பல நாடுகளில் காற்று மாசுக்கேடு ஒரு நிலையான பிரச்னையாக உள்ளது. மனித உடல் நலம், உணவு, உற்பத்தி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களையும் பாதிக்கின்றன.

Air Pollution
Air Pollution

கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், புற்றுநோய் போன்ற பல நோய்களைக் காற்று மாசுபாடு ஏற்படுத்துகிறது. தொழிற்சாலைகளும் வாகனங்களும் ஏற்படுத்தும் புகையினால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள் மற்றும் கட்டடங்கள் முதலியவை பாதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கந்தகம் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் ஏற்படுகிற அமில மழை, மண்ணின் அமிலத் தன்மையை அதிகப்படுத்துவது மட்டுமன்றி, தாவரங்கள் இலைகளை உதிர்த்தல், குளம் மற்றும் ஆறுகளில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுதல் போன்ற பாதிப்புகளுக்கும் காரணமாகிறது.

ஐக்யூஏர் (IQAir) அமைப்பு

ஒவ்வோர் ஆண்டும், 7 மில்லியன் மக்கள் காற்று மாசுபாட்டால் இறந்துகொண்டிருக்கின்றனர், பில்லியன் கணக்கான மக்கள் மோசமான காற்றின் விளைவுகளால் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதற்குச் சரியான நேரத்தில் காற்றின் தரத் தகவல் கிடைப்பதில்லை என்பது மட்டுமன்றி, சில நேரங்களில் காற்று மாசுபாடு கவனிக்கப்படாமல் போய்விடுகிறது என்கிற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை மாற்ற, சுவிஸ் குழுமமான ஐக்யூஏர் (IQAir) எனும் அமைப்பு, உலகின் மிகப்பெரிய இலவச நிகழ்நேர காற்றின் தரத் தகவல் தளத்தை இயக்கி உதவிக் கொண்டிருக்கிறது.

இந்த அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environmental Program), ஐக்கிய நாடுகளின் வாழ்விடம் (UN Habitat), பசுமை அமைதி (Greenpeace) உள்ளிட்ட காற்று மாசுபாட்டுக்கு எதிரான ஒத்த கருத்துகளுடைய பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, உலகம் முழுவதும் காற்று மாசுபாட்டைத் தடுத்து, சிறந்த காற்றைப் பராமரிப்பதற்கான தொழில்நுட்பப் பங்களிப்புகளை வழங்கிக்கொண்டிருப்பதுடன், காற்று மாசுபடாமல் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வுப் பணிகளையும் தொடர்ந்து செய்துவருகிறது.

காற்று மாசு
காற்று மாசு

உலகக் காற்று தர அறிக்கை – 2020

ஐக்யூஏர் (IQAir) அமைப்பு, காற்றில் கலந்துள்ள PM2.5 எனப்படும் நுரையீரலை சேதப்படுத்தும் நுண்துகள்களின் செறிவின் அடிப்படையில், 106 நாடுகளுக்கான தரவுகளைச் சேகரித்து, ஆய்வு செய்து ‘உலகக் காற்று தர அறிக்கை – 2020’ எனும் ஒரு அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில், காற்று மாசுபாடடைந்த உலக நகரங்களின் பட்டியலில் சீனாவின் ஹோட்டன் (Hotan) நகரம் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவிலிருக்கும் காசியாபாத் நகரம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்திலிருந்து பதினான்காம் இடங்கள் வரை இந்திய நகரங்களே தொடர்ந்து இருக்கின்றன. உலகின் முதலிடத்திலிருக்கும் 50 மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 35 நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. உலக அளவில் மாசுபாடு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று காற்று மாசுபாடு குறித்த உலகக் காற்று தர அறிக்கை – 2020 கூறுகிறது.

காற்றுத் தரம் குறியீட்டுக் (Air Quality Index - AQI) கணக்கீடு

காற்றுத் தரக்குறியீடு (AQI) அளவானது, காற்றில் தங்கியுள்ள துகள்கள் (Particulate Matter PM2.5 and PM10), ஓசோன் (O3), நைட்ரோஜென் டை ஆக்ஸைடு (NO2) மற்றும் கார்பன் மோனோ ஆக்ஸைடு (CO) போன்றவற்றின் உமிழ்வினைக் கொண்டு அளக்கப்படுகிறது. உலகில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றுத் தரக் குறியீட்டுக் கணக்கீட்டு நிலையங்களில், பெரும்பான்மையாக PM2.5 மற்றும் PM10 தகவல்கள் கொண்டே கண்காணிக்கப்படுகின்றன. ஆனால், ஒரு சில நிலையங்களில் PM10 மட்டும் கொண்டு கண்காணிக்கப்படுகிறது.

Air Pollution
Air Pollution

காற்றுத் தரக்குறியீட்டு நிலைகள் (Air Quality Index Standards)

உலகில் காற்றுத் தரக்குறியீட்டு நிலைகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (United States Environmental Protection Agency) மற்றும் ஐரோப்பியச் சுற்றுச்சூழல் நிறுவனம் (European Environment Agency) எனும் இரண்டு வரையறுக்கப்பட்ட காற்றுத் தரக்குறியீட்டு அளவுகளைக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன. இருப்பினும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (United States Environmental Protection Agency) அமைப்பின் தரக்குறியீட்டு அளவுகளே அதிகம் பயன்பாட்டிலிருக்கின்றன.

இங்கு இரு அமைப்புகளின் காற்றுத் தரக்குறியீட்டு நிலை, அதற்கான குறியீடு, நிலை, விளக்கம் உள்ளிட்ட தகவல்கள் அதற்குரிய வண்ணங்களில் கீழே அட்டவணைகளாகத் தரப்பட்டிருக்கின்றன.

AQI (அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்) காற்றுத் தரக்குறியீட்டு நிலை

AQI காற்றுத் தரக்குறியீட்டு நிலை
AQI காற்றுத் தரக்குறியீட்டு நிலை

AQI எச்சரிக்கை அறிக்கை (PM2.5க்கு)

AQI எச்சரிக்கை அறிக்கை
AQI எச்சரிக்கை அறிக்கை

CAQI (ஐரோப்பியச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்) காற்றுத் தரக்குறியீட்டு நிலை

CAQI காற்றுத் தரக்குறியீட்டு நிலை
CAQI காற்றுத் தரக்குறியீட்டு நிலை

காற்று மாசுபாடு சுமார் 40 சதவிகிதம் இந்தியர்களின் ஆயுட்காலத்தை 9 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சிக் குழு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனம் (EPIC) காற்று மாசுபாடு பற்றி ஓர் உலகளாவிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இந்தியத் தலைநகர் டெல்லி உட்பட மத்திய, கிழக்கு மற்றும் வட இந்தியாவின் பரந்த பகுதிகளில் வாழும் 480 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதிக மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கும் சூழ்நிலையில் வாழ்வதாகவும், ஆபத்தான வகையில், இந்தியாவில் அதிக அளவு காற்று மாசுபாடு காலப்போக்கில் புவியியல் ரீதியாக விரிவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில் குறிப்பாக, மரங்களை அதிக அளவில் வளர்க்க முன் வர வேண்டும். மரங்கள், கார்பன் டை ஆக்ஸைடை உள் வாங்கி, ஆக்சிஜனாக வெளியிடும் பெரும் பணியைச் செய்து வருவதால், மரம் வளர்ப்பிற்கும், மரங்களின் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எரிபொருள் கொண்டு இயக்கப்படும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இதே போன்று, காற்று மாசுபாட்டிற்குக் காரணமான பல்வேறு காரணிகளை அறிந்து, அவற்றில் காற்று மாசுபாட்டைக் குறைக்க நம்மால் இயன்ற செயல்பாடுகளைச் செய்திட முன்வர வேண்டும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man