
சேவை
யானையும், லாரியும்தான் ஆறுச்சாமியின் இரண்டு கண்கள். தமிழகத்தின் எந்த வனப்பகுதியில் ‘யானை ஆபரேஷன்’ நடந்தாலும், அங்கு ஆறுச்சாமி ஆஜராகிவிடுவார். `யானைப் பாகன்’, `யானை டாக்டர்’ வரிசையில் ஆறுச்சாமி `யானை டிரைவர்!’
தமிழக வனத்துறையில் யானைகளைவைத்து லாரி ஓட்டுவதற்கு ஒரு நிரந்தரப் பணியாளர், ஒரு தற்காலிகப் பணியாளர் என மொத்தம் இரண்டு டிரைவர்கள் இருக்கிறார்கள். நிரந்தரப் பணியாளர், `முதுமலை புலிகள் காப்பக’த்தில் இருக்கிறார். கோவையிலிருக்கும் ஆறுச்சாமி தற்காலிகப் பணியாளர். மலைப்பகுதிகளில் கனரக வாகனங்களை இயக்குவதே கடினம். ஆனால், கும்கிகளையும் காட்டு யானைகளையும் லாரியில் ஏற்றிக்கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அட்டகாசமாக லாரி ஓட்டிக்கொண்டிருக்கிறார் ஆறுச்சாமி.

மழைச்சாரல் தூவும் ஒரு காலை நேரம்... மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள `கோவை சாடி வயல் யானைகள் முகாமி'ல்வைத்து ஆறுச்சாமியைச் சந்தித்தோம். சுயம்பு, வெங்கடேஷ் என்ற இரண்டு கும்கி யானைகளுக்கு நடுவே லாரியை நிறுத்திவிட்டு மழைத்தூறலுக்கு மத்தியில் பேச ஆரம்பித்தார் ஆறுச்சாமி. “கோவை ஆலாந்துறைதான் என் சொந்த கிராமம். சின்ன வயசிலிருந்தே எனக்கு மோட்டார் வாகனங்கள்மீது ஆர்வம் அதிகம். எங்கள் ஊரில் பெரும்பாலான வீடுகளில் லாரி இருந்தது. என்னுடைய பத்து வயதிலிருந்து லாரி ஓட்டுகிறேன். பள்ளிக்குப் போகாமல், இருந்தற்காக அம்மா என்னைக் கிணற்றிலெல்லாம் கட்டிவைத்த காலம் உண்டு. ஆரம்பத்தில் விளையாட்டாக ஓட்டிப் பழகிய லாரியே பின்னாளில் என் உலகமாகிவிட்டது. 12 மாநிலங்களில் லாரி ஓட்டியிருக்கிறேன். வனத்துறைக்கு வேலைக்கு வருவதற்கு முன்னர், ‘ஈஷா யோக’ மையத்தில் டிரைவராகப் பணியாற்றினேன்.
அஸ்ஸாமிலுள்ள யானைச் சந்தையிலிருந்து, கேரளாவுக்கு ஒரு யானையை லாரியில் கொண்டுவரும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. அதுதான், யானையைவைத்து வாகனத்தை இயக்கிய என் முதல் பயணம். அஸ்ஸாமிலிருந்து கேரளாவுக்கு ஐந்து நாள்களுக்கு அந்தப் பயணம் நீடித்தது. 2012-ம் ஆண்டு வனத்துறையில் பணிக்குச் சேர்ந்தேன். முதல் ஆபரேஷன், கோவை கரடிமடையில் நடந்தது. உடல்நலம் சரியில்லாத யானைக்குச் சிகிச்சையளிக்கும் ஆபரேஷன் அது. கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எல்லாப் பக்கமும் கவனத்தைவைத்தபடி வாகனத்தை இயக்கினேன். பிறகு அதுவே பழகிவிட்டது. இப்போதுவரை 25-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளையும், ஏராளமான கும்கி யானைகளையும்வைத்து லாரி ஓட்டிவிட்டேன். மதுக்கரை மகாராஜா, சின்னத்தம்பி, விநாயகன் எனப் பல யானை ஆபரேஷன்களுக்கு நான்தான் டிரைவர்’’ என்றவரிடம் மறக்க முடியாத அனுபவம் குறித்துக் கேட்டோம்...
எவ்வளவு பெரிய உருவமாக இருக்கிறதோ அதைவிடப் பெரிய அன்புகொண்டது யானை. நாம் தொந்தரவு செய்யாமலிருந்தால், அதுவும் நம்மை எந்தத் தொந்தரவும் செய்யாது.
“தடாகம் பகுதியிலிருந்து விநாயகன் என்ற யானையை முதுமலைக்குக் கொண்டு சென்றது மறக்க முடியாதது. அந்த யானை இரண்டு, மூன்று முறை லாரியை ஆட்டிவிட்டது. முதுமலை செல்வோம் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. எப்படியோ ஒருவழியாக விநாயகனைப் பத்திரமாக முதுமலையில் இறக்கிவிட்டோம். மதுக்கரை மகாராஜாவும் லாரியை ஆட்டிக்கொண்டிருந்தது. இரண்டுமுறை லாரியை நிறுத்திவிட்டேன். கேரள எல்லையான சேரம்பாடியில் சுல்லிக்கொம்பன் என்ற ஒரு காட்டு யானையைப் பிடித்து லாரியில் ஏற்றினோம். கிளம்பிய சிறிது நேரத்திலேயே, தும்பிக்கையால் என்னைப் பிடித்துவிட்டது. உடனே, ஹேண்ட் பிரேக் போட்டுவிட்டு லாரியிலிருந்து குதித்துவிட்டேன். சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் லாரியை ஓட்டி, அந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தோம்.
சாதாரணமாக லாரி ஓட்டுவதற்கும், யானையை வைத்து லாரி ஓட்டுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. லாரியில் யானை இருக்கும்போது, அதன்மீதுதான் அதிக கவனம் இருக்க வேண்டும். அதே நேரத்தில் சாலையையும் பார்க்க வேண்டும். லாரியை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறுத்திவிட முடியாது. நான் ஓட்டும் லாரியில் 7 கியர்கள் இருக்கின்றன.

அதனால் லாரியை மிகவும் வேகமாகவோ, மெதுவாகவோ இயக்க முடியாது. சீரான வேகத்தில்தான் இயக்க வேண்டும். சடர்ன் பிரேக் அடித்தால், நின்றுகொண்டிருக்கும் யானை நிலைகுலைந்து முன்பக்கம் வந்து மோதிவிடும். அதேபோல், சடர்னாக ஆக்ஸிலரேட்டர் கொடுத்தால், பின்பக்கம் மோதிவிடும். வளைவுகளில் மிகக் கவனமாகத் திருப்ப வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் லாரி கவிழ்ந்துவிடும். கோவையிலிருந்து முதுமலைக்குச் சாதாரணமாகச் செல்வதைவிட, யானையை ஏற்றிச் செல்லும்போது மூன்று மணி நேரம் கூடுதலாக ஆகும்” என்றபடி லாரியில் ஏறி அமர்ந்தவரிடம் அவருடைய குடும்பம் குறித்துப் பேச்சுக் கொடுத்தோம்.

“மனைவி, நான், இரண்டு மகள்கள். இதுதான் என் குடும்பம். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்த வேலையில் எப்போதும் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்பதால், குடும்பத்துடன் நேரம் செலவிடுவது குறைவு. ஒருமுறை கும்கி யானைகளைக் கொண்டு வருவதற்காக முதுமலைக்குச் சென்றிருந்தபோது, என் மாமனார் இறந்துவிட்டார். அவர் என் தாய் மாமாவும்கூட. ஆனால், வேலை இருந்ததால் அவருடைய இறுதி நிகழ்வில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. இப்படி எத்தனையோ விஷயங்களைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறை யானை ஆபரேஷனை, டி.வி-யில் பார்க்கும்போதும் என் குடும்பத்தினர் பயப்படுவார்கள். `அந்த வேலையை விட்டுட்டு வா’ என்று சொல்வார்கள். ஆனால் எனக்குத் துளியும் பயம் இல்லை.
எவ்வளவு பெரிய உருவமாக இருக்கிறதோ அதைவிடப் பெரிய அன்புகொண்டது யானை. நாம் தொந்தரவு செய்யாமலிருந்தால், அதுவும் நம்மை எந்தத் தொந்தரவும் செய்யாது. நான் அதிகம் நெருங்கிப் பழகியது சாடிவயல் முகாமிலிருந்த நஞ்சன் கும்கியுடன்தான். நான் ஒவ்வொரு முறை முகாமுக்கு வரும்போதும், சாப்பிட ஏதாவது கொண்டு வந்திருக்கிறேனா என்று லாரிக்குள் தும்பிக்கையைவிட்டுத் தேடிப் பார்க்கும். என் குரல் அந்த யானைக்கு நன்கு தெரியும். நானே, அதைச் சங்கிலியுடன் அழைத்து வருவேன். மழை பெய்யும்போதுகூட, அதன் அடியில்வைத்து நம்மை நனையாமல் பாதுகாக்கும். ஆனால், அந்த யானை இப்போது இல்லை” என்று சொல்லும்போது ஆறுச்சாமியின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
``ஸ்டீயரிங் பிடித்தால்தான் சாப்பாடு என்றாகிவிட்டது. நன்கு சம்பாதிக்க வேண்டிய வயதில், என் உழைப்பை வனத்துறையில்தான் அதிகம் கொட்டியிருக்கிறேன். இதற்கு மேல் என்னால் வேறு வேலைக்குச் செல்ல முடியாது. என்னை நிரந்தரப் பணியாளராக மாற்றினால், என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் வாழும் நாள்களில் இன்னும் அதிக நம்பிக்கையுடன் உழைப்பேன். இத்தனை ஆபரேஷன்களில், ஒரு முறைகூட இந்த லாரி என்னைக் கைவிட்டதில்லை. இந்த லாரியும் யானையும்தான் என் தெய்வங்கள். எந்தக் காரணத்துக்காகவும் அதை நான் கைவிட மாட்டேன்” என்று ஆறுச்சாமி முடிக்கும்போது மழை தீவிரமடைந்திருந்தது.