கடந்த 50 ஆண்டுகளில் 70% காட்டு விலங்குகள் அழிப்பு... கானமயில்கள், ஆசிய சிங்கம், பனிக்கரடி... இனி?!

தற்போது இந்தியாவில் கானமயிலின் எண்ணிக்கை 500-ஆக மட்டுமே உள்ளது. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் இந்த இனமே அழிந்துவிடும்.
இயற்கைக்கான உலகளாவிய நிதியம் நடத்திய ஆய்வில், உலகம் முழுவதும் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள், விலங்குகள் மற்றும் மீன்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கிலிருந்து 32,000-மாகக் குறைந்துள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. 1970-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, அன்றிலிருந்து 2022-ம் ஆண்டு வரை உலகில் 69% விலங்குகள் குறைந்துள்ளன.
விவசாயம் மற்றும் வளர்ச்சிக்காக வனவிலங்குகளின் வாழ்விடங்கள் அழிப்பு, ஆக்கிரமிப்பு இடங்களின் பெருக்கம், மாசுபாடுகள், காலமாற்றங்கள், நோய்கள் ஆகியவை இந்த வீழ்ச்சிக்குக் காரணிகளாக உள்ளன என்று ஆய்வு கூறுகின்றது. இந்த வீழ்ச்சி இயற்கையின் பிரச்னை அல்ல, இது மனித குலத்தின் பிரச்னை.

இதுகுறித்து பேராசிரியர் முனைவர் முருகவேலிடம் பேசினோம். “ஒரு காலத்தில் எங்கெல்லாம் மனிதர்களின் தாக்கம் இல்லாமல் இருந்ததோ, இப்பொழுது அங்கே மனிதர்களின் தாக்கம் மட்டுமல்லாமல் இயற்கைப் பேரழிவுகளும் நடக்கின்றன. அமேசான் காடுகளுமே அழிந்து வருகின்றன. சூரியசக்தி மின்தகடு, காற்றாலைகள் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருவிதத்தில் நல்லதாகப் பார்த்தாலும், அவற்றை அமைக்குமிடம் மற்றும் விலங்குகளின் மீதான அவற்றின் தாக்கம் ஆகியவற்றை நாம் கருத்தில் கொள்வதில்லை.
உதாரணமாக, தற்போது இந்தியாவில் கானமயிலின் எண்ணிக்கை 500-ஆக மட்டுமே உள்ளது. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் இந்த இனமே அழிந்துவிடும். ஒரு காலத்தில், கானமயில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தது. ஆனால் தற்போது குஜராத், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் மட்டும்தான் காணப்படுகிறது. இந்தப் பறவைகள் அதிகமாக மின்வேலி, காற்றாலைகள் ஆகியவற்றில் மோதி இறக்கின்றன. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஆந்திர ரோலப்பாடு சரணாலயத்தில் கானமயில்கள் இருந்தன. இந்தப் பறவைகளுக்கான வாழ்விடங்கள் அழிந்தபோது, இதுவும் அந்தப் பகுதிகளில் காணப்படுவதில்லை. கானமயில்களுக்குப் பூச்சி முக்கிய உணவு. பூச்சிகள், பூச்சி மருந்துகள் மூலம் அழிக்கப்படுகின்றன. மற்றும் இதன் வாழ்விடங்கள் விவசாயத்திற்காகவும் அழிக்கப்படுகின்றன. இப்படிப் பல காரணங்களினால் கானமயில்கள் அழிந்துவருகின்றன.வாழ்விடங்கள் அழிக்கப்படும்போது, உயிரினங்களும் அழியும்.

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அதற்கான வாழ்விடம் இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஓர் ஆண் புலிக்குத் தனிப் பிரதேசம் வேண்டும். அங்கே வேறு புலி வரும்போது ஏதாவது ஒரு புலி கொல்லப்படும், அல்லது, தோற்கடிக்கப்படும். தோற்கடிக்கப்பட்ட புலி காடுகளின் விளிம்புகளுக்குச் செல்லும். அங்கே தொடர்ந்து காடுகள் இல்லாததால் புலிகள் கிராமத்திற்குள் நுழைந்துவிடுகின்றன. அதனால்தான் மனித - மிருக எதிர்கொள்ளல் நடைபெறுகிறது.
உலகிலேயே ஆசிய சிங்கங்கள் குஜராத்தில் மட்டும்தான் இருக்கின்றன. ஒருவேளை குஜராத்தில் விலங்குகளுக்கு வரக்கூடிய நோய்களோ, பூகம்பமோ வந்தால் ஆசிய சிங்க இனம் உலகிலிருந்து முற்றிலுமாக அழிந்துவிடும். இதற்கு மாற்றாக, இந்தியாவில் அதற்கு ஏற்ற வாழ்விடம் வேறெங்கு இருக்கிறதோ, அங்கே கொண்டு அந்த இனத்தைப் பெருக்கினால், குஜராத்தில் என்ன நேர்ந்தாலும் இந்த இன சிங்கம் வேறு இடத்தில் பத்திரமாக இருக்கும். இப்படி, விலங்குகளை நாம் பாதுகாக்க முடியும்.
நகரங்களை விரிவாக்கும்போது அங்கே வாழும் பறவை, விலங்கு, பாம்பு போன்ற உயிரினங்கள் முதலில் உள்ளூரில் அழியும். அதன் பிறகு, அந்த அழிவு பல இடங்களுக்குப் பரவும். இப்படித்தான் ஒவ்வோர் உயிரினமாக அழிகின்றன.
இயற்கையாக ஓர் இனம் அழிய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். மனிதனால் ஏற்படக்கூடிய அழிவு சீக்கிரம் ஏற்பட்டுவிடும். மனிதன் தன்னை உயர்வாகக் கருதுவதால்தான், விலங்குகள் அழிவு ஏற்படுகிறது. மனிதன் தானும் உணவுச்சங்கிலியில் ஒரு பகுதி என்பதை உணர்ந்துவிட்டால், அந்தச் சங்கிலியை அழிக்கமாட்டான். மனிதன் அந்தக்காலத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததால், இயற்கை பற்றிய புரிதல் அவனுக்கு இருந்தது. தற்போது இயற்கை பற்றிய புரிதல் குறைந்துவிட்டது, வருங்காலத்தில் இன்னமும் குறைந்துவிடும்.

முதலில் மனிதன் தன்னைச் சுற்றியுள்ள இயற்கை மற்றும் பல்லுயிர்த் தன்மை குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். சென்னையில் இருக்கும் பல பேருக்கு பங்குனி ஆமை கடற்கரையில் முட்டையிடும் என்பது தெரிவதில்லை. இயற்கையிலே இந்த ஆமைகள் ஒளியை நோக்கிச் செல்லும் தன்மை உடையவை. நகரத்தில் இருக்கும் விளக்கை எல்லாம் அணைத்துவிட்டால், கடற்கரையில்தான் அதிக ஒளி இருக்கும். முட்டையில் இருந்து வெளிவந்த ஆமைக்குஞ்சுகள் தானாகக் கடலை நோக்கிச் செல்லும். ஆனால் தற்போது நகரப்பகுதிகளில் ஒளியை அதிகமாக்கிவிட்டதால் அந்த ஒளிகளை நோக்கி இந்த ஆமைகள் நகர்ந்து இறந்துவிடுகின்றன.
இருக்கும் உயிரினங்களையும் நாம் காப்பாற்றாவிட்டால், எதிர்காலத்தில் இந்த இயற்கைச் சமநிலை பாதிக்கப்பட்டு மனிதகுலத்துக்கும் ஆபத்து வரும்” என்று எச்சரித்தார்.
உலகம் அனைத்து உயிர்களுக்குமானது!