Published:Updated:

`ரிவால்டோ சட்டவிரோதமாக கும்கியாக்கப்படுகிறதா?' - என்ன நடக்கிறது மசினகுடியில்?

ரிவால்டோ
News
ரிவால்டோ

நீதிமன்ற உத்தரவை மீறி ரிவால்டோவை கும்கியாக்கும் நடவடிக்கையாக கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக யானைகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

Published:Updated:

`ரிவால்டோ சட்டவிரோதமாக கும்கியாக்கப்படுகிறதா?' - என்ன நடக்கிறது மசினகுடியில்?

நீதிமன்ற உத்தரவை மீறி ரிவால்டோவை கும்கியாக்கும் நடவடிக்கையாக கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக யானைகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

ரிவால்டோ
News
ரிவால்டோ

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் ரிவால்டோ என்ற பெயரில் அழைக்கப்படும் கம்பீரமான ஆண் காட்டு யானைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டது. காயத்திலிருந்து மீண்டுவந்தாலும் தும்பிக்கையில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மற்ற காட்டுயானைகளைப் போல காட்டில் இல்லாமல், குடியிருப்பை ஒட்டிய பகுதிகளையே உணவு தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருந்தாலும், மனிதர்களைத் தாக்கியதேயில்லை. உணவு தேடி வரும் இந்த யானைக்கு உள்ளூர் மக்கள் பலரும் சட்டவிரோதமாக உணவளித்து வந்தனர்.

ரிவால்டோ
ரிவால்டோ

இந்நிலையில், இதே பகுதியில் உலவி வந்த எஸ்.ஐ என்ற ஆண் காட்டுயானை மீது, மசினகுடியில் சட்டவிரோதமாகச் செய்யப்பட்டு வந்த தனியார் தங்கும் விடுதியினர், எரியும் தீப்பந்தத்தைத் தூக்கியெறிந்ததில், துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. ரிவால்டோ யானைக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், மேலும் இந்த யானைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்து ரிவால்டோவை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

மசினகுடி, வாழைத்தோட்டம் பகுதியில் `க்ரால்' எனப்படும் யானைகளை அடைக்க பயன்படுத்தப்படும் பிரத்யேக மரக்கூண்டை உருவாக்கினர். ரிவால்டோ யானையை ஈர்க்கும் வகையில் அந்தப் பகுதியில் பழங்கள், கரும்பு போன்ற விருப்ப உணவைக் கொடுத்து படிப்படியாக க்ராளுக்குள் கொண்டுவந்தனர். கடந்த மே மாதம் 5-ம் தேதி ரிவால்டோ யானையை க்ராலுக்குள் அடைத்தனர்.

ரிவால்டோ
ரிவால்டோ

கடந்த ஒரு மாதமாக க்ராலுக்குள் இருக்கும் யானைக்கு சிகிச்சை அளிப்பதாக வனத்துறை தெரிவித்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி ரிவால்டோவுக்கு கும்கியாக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக யானைகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதை அறிந்த விலங்குகள் நல செயற்பாட்டாளரும் பா.ஜ.க எம்.பி-யுமான மேனகா காந்தி ரிவால்டோவை விடுவிக்குமாறு குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ``ரிவால்டோ யானை இதுவரை மனிதர்களைத் தாக்கியதில்லை. எந்த வகையிலும் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்ததில்லை. அதன் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக உணவுக்காக மனிதர்களுக்கு பழக்கமாகிவிட்டது. பின்னர் அந்த காயமும் குணமாகிவிட்டது. தொடர்ந்து அந்த யானைக்கு உணவளிப்பது மனிதர்களின் தவறு. கர்நாடகாவில் பிடிபட்ட `குஷா’ என்ற யானையை வெற்றிகரமாக விடுத்துள்ளனர்.

மேனகா காந்தி
மேனகா காந்தி

இதே போன்று தமிழக அரசும் ரிவால்டோவையும் விடுவிக்க வேண்டும். வன விலங்கு செயற்பாட்டாளர் முருகவேல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு, `ஒரு மாதம் சிகிச்சை அளித்துவிட்டு மீண்டும் காட்டுக்குள் விட வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காட்டுக்குள் கிடைக்கும் தீவனத்தைப் பழக்கப்படுத்தி காட்டுக்குள் சுதந்திரமாக விடுவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இது குறித்து நம்மிடம் பேசிய காட்டுயிர் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முருகவேல், ``இந்த யானையை ஒரு மாதம் வைத்து சிகிச்சை அளித்துவிட்டு காட்டுக்குள் விட வேண்டும் என்பதுதான் நீதிமன்ற உத்தரவு. ஆனால், இதற்கு கும்கி பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த யானையை வெளியில் சுதந்திரமாக விட முடியாதபடி வேறு ஏதேனும் அழுத்தம் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது. மேலும், தொடர்ந்து யானையைக் கூண்டுக்குள் வைத்திருப்பது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும்" என்றார்.

 ரிவால்டோ காட்டு யானை
ரிவால்டோ காட்டு யானை

இந்த சர்ச்சை குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருஷணகுமார் கவுஷல், ``கடந்த ஒரு மாதமாக யானைக்கு வாய்வழியாக மருந்து கொடுத்து சிகிச்சை அளித்து வந்தோம். ஒருவேளை இந்த யானைக்கு அறுவைசிகிச்சை தேவைப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே யானையிடம் இன்னும் நெருங்கிப் பழக வேண்டி உள்ளது. சிகிச்சைக்காக லாரியில் ஏற்ற வேண்டியும் வரலாம் என்பதால், சில கட்டளைகளையும் கொடுத்து வருகிறோம். மருத்துவக் குழுவின் ஆலோசனைக்குப் பின்னரே ரிவால்டோவை வெளியில் விட முடிவு செய்யப்படும்" என்றார்.