Published:Updated:

`அன்புதான் ஆகப்பெரும் மருந்து!' ஆனைமலையில் படம் சொன்ன `வெள்ளைக்கண்ணி'

ஆனைமலை
News
ஆனைமலை ( க.சுபகுணம் )

முகாமுக்குச் சென்ற பிறகுதான் மற்றவற்றைக் கவனிக்கமுடியும். அதுவரை ஷூவுக்குள் புகுந்த அட்டைகள் என் கால்களில் ஒட்டிக்கொண்டு ரத்த விருந்து கொண்டிருந்தன. வந்து பார்த்தால், வலதுபக்கக் கெண்டைக்காலில் மட்டுமே நான்கு அட்டைகள்.

Published:Updated:

`அன்புதான் ஆகப்பெரும் மருந்து!' ஆனைமலையில் படம் சொன்ன `வெள்ளைக்கண்ணி'

முகாமுக்குச் சென்ற பிறகுதான் மற்றவற்றைக் கவனிக்கமுடியும். அதுவரை ஷூவுக்குள் புகுந்த அட்டைகள் என் கால்களில் ஒட்டிக்கொண்டு ரத்த விருந்து கொண்டிருந்தன. வந்து பார்த்தால், வலதுபக்கக் கெண்டைக்காலில் மட்டுமே நான்கு அட்டைகள்.

ஆனைமலை
News
ஆனைமலை ( க.சுபகுணம் )

மதியம் மூன்று மணியிருக்கும். ஆனைமலை புலிகள் காப்பக எல்லைக்குள் இருந்த ஒரு காட்டுப்பகுதி. வனக் காவலர்கள், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் என்று ரோந்துப் பணிக்கு வரும் வனத்துறை அலுவலர்களும் அதிகாரிகளும் தங்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த முகாமின் ஓர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த வெள்ளைக்கண்ணி என்னைத் தேடி வந்தாள்...

ஆனைமலை புலிகள் கணக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தோம். அதிகாலையிலேயே கணக்கெடுப்புப் பணிகளைத் துவங்கி தினமும் இந்நேரத்திற்கு வந்து சேர்ந்து மதிய உணவையும் சமைத்துவிடுவோம். அன்று கொஞ்சம் தாமதம்தான். வந்துபார்த்தபோது சமைக்கப் போதுமான விறகுகள் இல்லை. அதைச் சுமந்து வரச் செல்லவேண்டும். காலையில் கிளம்பும்போதே மழை நன்றாகப் பெய்துகொண்டிருந்ததால், மழையில் நனைந்துகொண்டேதான் அன்றைய கணக்கெடுப்புப் பணியை முடித்தோம். மழை நேரத்தில், அதிலும் சதுப்பு நிலத்தில் ஈரத்திலேயே சென்றதால் அட்டைகள் சடசடவெனக் கால் முழுக்க ஏறிவிட்டன.

மலையேற்றம்
மலையேற்றம்
க.சுபகுணம்

கால்களில் ஆங்காங்கே கடிகளை நன்றாக உணரமுடிந்தது. மேலோட்டமாக ஒட்டிய அட்டைகளைப் பிடுங்கிக் கொண்டே நடந்தோம். இருந்தாலும் ஷூவுக்குள் புகுந்துவிட்ட அட்டைகளை அந்த மழையில் அமர்வதற்குக்கூட இடமில்லாத ஈரமான நிலத்தில் நின்றுகொண்டு அனைத்தையும் கழற்றிச் சுத்தம் செய்யமுடியாது. முகாமுக்குச் சென்ற பிறகுதான் மற்றவற்றைக் கவனிக்கமுடியும். அதுவரை ஷூவுக்குள் புகுந்த அட்டைகள் என் கால்களில் ஒட்டிக்கொண்டு ரத்த விருந்து கொண்டிருந்தன. வந்து பார்த்தால், வலதுபக்கக் கெண்டைக்காலில் மட்டுமே நான்கு அட்டைகள். ஒவ்வொன்றாக உப்பு தடவிப் பிடுங்கிவிட்டுப் பஞ்சு வைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான், விறகுகள் சேகரித்துவர குழுவினர் அனைவரும் கிளம்பினார்கள்.

கடந்த நான்கு நாட்களில் இருந்ததைவிட அன்றைய தினம் மழை கொஞ்சம் அதிகம்தான். அவ்வளவு மழையில் அதுவும் ஈரநிலத்தில் அட்டைக்கடியோடு நடந்துவந்தது உடலை மிகவும் சோர்வடையச் செய்துவிட்டதால், நான் போகவில்லை. கால்களில் வடியும் ரத்தத்தை எவ்வளவு நேரம் துடைத்துக் கொண்டேயிருப்பது. அதனால் ஓரளவுக்குப் பஞ்சு வைத்து அழுத்தி அப்படியே கட்டிவிட்டேன். இனி எவ்வளவு ரத்தம் வருமோ வரட்டும், அதை ஒட்டியுள்ள பஞ்சு எவ்வளவு உறிஞ்சுகிறதோ உறிஞ்சட்டும். அதன்பிறகு மீண்டும் மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தவாறு தலையைச் சாய்த்துப் படுத்தேன். "நான்கு நாட்களாக மழை, இன்றோ முந்தைய நாட்களைவிட அதிகமாகவே பெய்துள்ளது. இப்படியிருக்க இவர்கள் எங்கிருந்து விறகு சேகரிக்கப் போகிறார்கள். அத்தனையும் ஈரத்தில் ஊறிப்போயிருக்குமே...!" என்று யோசித்துக் கொண்டிருந்தவன் அசதியில் எப்போது கண்மூடினேன், எப்போது உறங்கினேன் என்பதே தெரியவில்லை.

காடு
காடு
க.சுபகுணம்

திடீரென்று யாரோ பக்கத்தில் அழைப்பதுபோல் இருந்தது. மெல்லக் கண்விழித்துச் சுயநினைவுக்கு வரத் தொடங்கினேன். அழைப்பது போலிருந்த குரல் கத்துவது போல் கேட்கத் தொடங்கியது. விடுக்கென்று கண்விழித்தவன் வேகவேகமாக எழுந்து உட்கார்ந்தேன். மணியைப் பார்த்தால் அதிக நேரம் தூங்கியிருக்கவில்லை. சொல்லப்போனால் அப்போதுதான் கண் அயர்ந்திருந்தேன். உடன் கணக்கெடுப்புக்கு வந்திருந்த தேனியைச் சேர்ந்த நண்பர் பாண்டி, "என் கையில ஒரு பறவை இருக்கு... கையில ஒரு பறவை இருக்கு..." என்றவாறு அறைக்குள் ஓடிவந்தார்.

தன் இரு உள்ளங்கைகளையும் சேர்த்து வைத்துக் கொண்டே வந்தார். கைகளைப் பார்த்தால் அதில் எதுவும் இருப்பதுபோல் தெரியவில்லை. அவர் அருகே வந்ததும் பார்த்தால் இளம் பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் ஒரு பறவை இருப்பது தெரிந்தது. இதை எங்கிருந்து பிடித்தார் என்று நினைத்துக்கொண்டே அவரை நெருங்கினேன். "இது எங்கிருந்து கிடைத்தது?" என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே அவருடைய விரல்களை விலக்கி என்ன பறவையென்று பார்த்தேன். அதைப் பார்த்து அதிர்ச்சியடைவதா, ஆனந்தப்படுவதா என்றே புரியாத மனநிலை. நண்பர் ஒருவர் இந்தப் பறவையைக் கல்லாரில் பார்த்ததாகச் சொன்னபோது இதைப் பார்த்துவிட மாட்டோமா என்ற ஆசையிலேயே நான்கு முறை கல்லார் சென்றுவந்தேன். ஒருமுறை பார்க்க முடியாதா என்று ஏங்கிய நாள்கள், முதல்முறை பார்த்தபோது, முதல்முறை படம்பிடித்தபோது எத்தனைப் பரவசமடைந்தேன். அத்தனைக்கும் தகுதியுடைய வெள்ளைக்கண்ணியை அவர் கைகளில் பார்த்தபோது கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன்.

வெள்ளைக்கண்ணி
வெள்ளைக்கண்ணி
K.Gokul

இள மஞ்சள் நிற முதுகுடன் மார்பில் தொடங்கி அடிவயிறு வரை பழுப்பு கலந்த வெள்ளை நிறத்தோடு இருந்தது. கழுத்தைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் வளையம் போல் இருக்கும். கண்களைச் சுற்றி வெள்ளை வளையம் இருக்கும். அந்த வெள்ளை வளையம்தான் அதற்கு அந்தப் பெயரையும் பெற்றுத்தந்தது. இறக்கைகளின் விளிம்புகளில் மெல்லிய கறுப்பு நிறக் கோடு இழையோடியிருக்கும். அவர் கையிலிருந்து அவளை வாங்கினேன். வெள்ளைக்கண்ணிதான் (Oriental White Eye) என்பது நன்றாகத் தெரிந்துவிட்டது. அதிகபட்சம் 5 சென்டிமீட்டர் உயரம்தான் இருக்கும். அவ்வளவு சிறிய பறவையைக் கையில் ஏந்தி நிற்பது வாழ்நாளிலேயே அதுதான் முதல்முறை. மனிதர்களுக்கு நெருக்கமாகாத, மனிதர்களைக் கண்டாலே பறந்துவிடும் பறவை ஒன்று உள்ளங்கைக்குள் என் உடல் சூட்டில் இதமாகக் குறுகிப் படுத்திருந்தது.

உள்ளங்கைகளை நன்றாக விரித்து வைத்துக்கொண்டு அது பறந்து செல்வதற்காகக் காத்திருந்தேன். பறப்பதற்கான சிறு முயற்சியைக்கூட செய்யாமல் அமைதியாக என் உடல் சூட்டை உள்வாங்கியபடி நன்றாக ஒடுங்கிப் படுத்தது.

கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில், அவ்வளவு கடும் குளிரிலும் பல்வகையான பறவைகள் வாழ்ந்துகொண்டிருந்தன. நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri pipid) போன்ற பறவைகளை அங்கு எளிதில் பார்க்கமுடிந்தது. இதுவும் அங்கு வாழ்கிறது என்பதற்கு அடையாளமாய் அன்று என் உள்ளங்கையில் படுத்திருந்தது. அன்று மழை அதிகம்தான். நள்ளிரவிலிருந்து பகல் வரைக்கும் பல மணிநேரங்கள் பெய்துகொண்டேயிருந்தது. அதன் காரணமாகக் குளிரும் அதிகமாகவே இருந்தது. ஒருவேளை குளிரில் உறைந்துபோயிருக்கலாம் என்று தோன்றியது. அனுபவசாலிகளோ பறவை ஆய்வாளர்களோ யாருமே அருகில் இல்லை. யாரிடமாவது விசாரிக்கலாம் என்றால், கைபேசித் தொடர்பு கிடைக்கும் இடத்திலும் நாங்கள் இல்லை.

"கூட்டிலிருந்து விழுந்திருக்கலாம்... அதை உள்ளே கொண்டு வாங்க"

"ரொம்பச் சின்னதா இருக்கு... குஞ்சுப் பறவையைத் தேடி எப்படியும் தாய்ப் பறவை வரும், இருந்த இடத்திலயே வெச்சுருவோம்"

"அதெல்லாம் இல்ல, இங்கதான் எங்கயாவது கூடு இருக்கும். வாங்க தேடிப் பாப்போம்..."

கல்லார்
கல்லார்
க.சுபகுணம்

இப்படியாக கருத்துகள் பரிமாறப்பட்டுக் கொண்டேயிருந்தது. வெள்ளைக்கண்ணியின் உடலை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்துவிட்டேன். அதன் உடலில் எங்கும் காயங்கள் இல்லை. அடிபட்டுப் பறக்க முடியாமல் விழவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அதுவே எங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. அடிபடவில்லை என்றால் ஏன் பறக்காமல் இருக்கிறது! அது இன்னும் பறக்கும் வயதை எட்டவில்லை என்ற கருத்தே மேலோங்கத் தொடங்கியது.

பிப்ரவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரைக்கும் மிக நீண்ட காலத்திற்கு அவை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். மரக் கிளைகளின் நுணியில் குவளை வடிவத்தில் கூடுகட்டி இரண்டு முட்டைகளையிட்டு அடைகாக்கும். வெள்ளைக்கண்ணிகளின் முட்டைகள் பொறிந்து உயிர் பிறப்பதற்கு எடுத்துக்கொள்வது பத்தே நாள்கள்தான். அடுத்த பத்தே நாள்களில் அவை பறக்கவும் தொடங்கிவிடும். அதிலும் அவற்றின் அதிகபட்ச உயரமே 9 சென்டிமீட்டர்தான். 5 சென்டிமீட்டர் உயரத்துக்கு இருந்த இந்த வெள்ளைக்கண்ணி நிச்சயம் பறக்கமுடியாத குழந்தை இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. இவற்றைச் சிந்தித்துக்கொண்டே அதன் உடலை அன்போடு மென்மையாக ஊதிவிட்டுக் கொண்டிருந்தேன். பூனை, நாய் போன்றவற்றிடம் அன்பை வெளிப்படுத்தக் கழுத்தில் தடவிக்கொடுப்போம். இவ்வளவு சிறிய பறவைக்கு அதை எப்படிச் செய்யமுடியும்! அதனால்தான் அன்பின் வெளிப்பாடாக ஊதிவிட்டுக் கொண்டிருந்தேன்.

சோர்வடைந்த நிலையில் வெள்ளைக்கண்ணி
சோர்வடைந்த நிலையில் வெள்ளைக்கண்ணி
K.Gokul

என் உள்ளங்கையில் அதுவரை சோம்பேறியைப் போல் கண்சொருகிப் படுத்துக் கிடந்தவள் திடீரென்று சுறுசுறுப்பெய்திப் பறக்க ஆயத்தமானாள். சட்டென்று எழுந்து நின்று உடலை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டு இறக்கையை விரித்தாள். என் உள்ளங்கையில் எச்சமிட்டுவிட்டு ஒரே உந்துதலில் பறந்து அருகிலிருந்த முகாம் கட்டடத்தின் பரண்மீது சென்று அமர்ந்தாள்.

ஒருமுறை தலையைத் திருப்பி அங்கு நின்றிருந்த எங்களைப் பார்வையிட்டுவிட்டுப் பனிமூட்டங்களுக்குள் பறந்து மறைந்துவிட்டாள். சுறுசுறுப்பெய்திப் பறக்கத் தொடங்கிய அவளின் அந்தக் கடைக்கண் பார்வை எங்களுக்குள் எவ்வளவு நிம்மதியைக் கொண்டுவந்தது. அவ்வளவு நேரமிருந்த வருத்தமும் குழப்பமும் நீங்கி மகிழ்ச்சி மட்டுமே அந்தச் சூழலை நிரப்பி நின்றது.

திரும்பி வந்த பின்னர், பறவை ஆய்வாளர் ப.ஜெகநாதனிடம் பேசிக் கொண்டிருக்கையில் இந்த அனுபவத்தைப் பகிர்ந்தேன். "குளிரால் பாதிக்கப்பட்டிருக்கும். உள்ளங்கைக்குள் வைத்துக் கொஞ்சம் ஊதினாலே சூடான காற்று கிடைத்து சுறுசுறுப்பாகிவிடும்" என்று கூறினார். அந்தச் சூழ்நிலையில் எங்களுக்கே தெரியாமல் நாங்கள் அதைத்தான் செய்தோம். அன்பை வெளிப்படுத்தச் செய்த செயல் ஒருவித மருத்துவமாகி அதன் சுறுசுறுப்பை மீட்டுக் கொடுத்துள்ளது. அன்புதான் ஆகப்பெரும் மருந்து என்பதை இயற்கை மீண்டுமொருமுறை உணர்த்தியது.