வனவளம் மிகுந்த உயிர்ச்சூழல் மண்டலங்களில் நீலகிரி பல்லுயிர்ச்சூழல் மண்டலம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மிக முக்கிய பகுதியாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள 132 வகையான பூக்கும் தாவரங்கள், 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவை இனங்கள், 80 வகையான நீர் மற்றும் நில வாழ்வன, 300 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 39 வகை மீன் இனங்கள், 60 வகையான ஊர்வனவற்றில் பெரும்பாலானவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.
நீலகிரி வரையாடு, நீலகிரி பாடும் பறவை, நீலகிரி கருமந்தி போன்ற உலகில் வேறு எங்கும் காணப்படாத உயிரினங்களின் வாழிடமாக உள்ளது நீலகிரி. அழிந்துவரும் பாறு கழுகுகள், இருவாச்சி போன்ற பறவைகளையும் தற்போது காணமுடிகிறது. இது மட்டும் அல்லாது நவம்பா் முதல் மாா்ச் வரையிலான குளிா் காலங்களில் வடமாநிலங்களிலிருந்து பல்வேறு வகை பறவையினங்கள் நீலகிாிக்கு வருகின்றன. கிரீன் லீப் வாப்லர் போன்ற சில பறவையினங்கள் பனிக்காலத்தில் இமாலய பகுதிகளிலிருந்து வருகின்றன.
இந்த நிலையில் மத்திய ஆசியா, வட பாகிஸ்தான், தெற்கு ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இசபெல்லின் வீட்டியர் எனப்படும் பறவை முதன்முறையாகக் கோத்தகிரி பகுதிக்கு வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பறவையைக் கோத்தகிரியைச் சேர்ந்த காட்டுயிர் ஆர்வலருமான தாஸ் சந்திரசேகர் பார்த்து படமெடுத்துள்ளார்.
இதுகுறித்து தாஸ் சந்திரசேகர் கூறுகையில், "கோத்தகிரி, குன்னூர் பகுதிகள் எப்போதும் பல்வேறு வகையான பறவைகள் இருக்க கூடிய பகுதியாக உள்ளது. பனிக்காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஒவ்வோர் ஆண்டும் பல பறவைகள் வருகின்றன.

இந்த நிலையில் முதல்முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த இசபெல்லின் வீட்டியர் பறவை கோத்தகிரியில் தென்பட்டது புதிய அனுபவமாக உள்ளது. இந்தப் பறவை குறித்து ஆய்வு செய்யப்படும்" என்றார்.