அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட்டின் (AEL) நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கு எதிராக ஜார்க்கண்டில் உள்ள கோண்டல்புரா கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோண்டல்புரா ஜார்க்கண்டிலுள்ள ஹசாரிபாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி தாமோதர் மற்றும் பிரம்மதிஹா ஆறுகளின் ஓரத்தில் அமைந்துள்ளது. இங்கு பாயும் தாமோதர் ஆற்றின் கிளை நதியான பத்மஹி, புவியியல் பரப்பை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறது. ஆங்கிலேயேர் ஆட்சிக்காலகத்திலேயே, பிரிட்டிஷ் புவியியலாளர்கள் கனிம வளங்கள் அதிகம் உள்ள இடம் என்று இந்தப் பகுதியைக் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் 2020-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற வணிக நிலக்கரி ஏலத்தின்போது கோண்டல்புரா பகுதியை அதானி குழுமம் கைப்பற்றியது. இந்தப் புவியியல் பரப்பில் உள்ள மொத்த நிலக்கரி 176 மில்லியன் டன்; இங்கிருந்து 513.18 ஹெக்டேர் நிலத்தில் மட்டும் நிலக்கரி எடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 219.65 ஹெக்டேர் நிலப்பரப்பு காடு.
அதானி குழுமத்தின் இந்த நிலக்கரி சுரங்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கிட்டத்தட்ட 4,000-க்கும் அதிகமான கிராம வாசிகள் இடம் பெயர நேரிடும். கிராம மக்கள் தங்களின் விவசாய நிலத்தை இழப்பர். தங்களின் தேவைக்காகவும், விவசாயத் தேவைக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுவதற்கும் உபயோகித்து வரும் நதிகளையும் கிராம மக்கள் இழக்க நேரிடும்.
மேலும், கிராம மக்கள் வாழ்ந்து வரும் விவசாயப் பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைபெற்று வரும் பல்வேறு சுரங்கத் திட்டங்களால் இந்தக் காடுகள் துண்டு துண்டாக உள்ளன. இருந்தபோதிலும் இன்னும் அந்தக் காடு யானைகளுக்கும் பன்றிகளுக்கும் இருப்பிடமாக உள்ளது. ``இந்த சுரங்கத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இனி எந்த ஜீவனும் எப்போதும் அந்தப் பகுதிகளில் இருக்காது" என கிராம மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Covid-19 இரண்டாவது அலையிலும் நிலக்கரித் திட்டம் குறித்த நடவடிக்கைகள் துரிதமாகச் செயல்பட்டு வருகின்றன. 2021 ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் அதானியின் வாகனம் அந்த நிலத்தின் வழியாகச் சென்றபோது, அதிலுள்ள பயணிகள் வயல்வெளிகளைப் புகைபடம் எடுத்துக்கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் வனத்துறையினரும் மரங்களைக் குறியிட்டு எண்ணியுள்ளனர். முன்பை விட அதிகமாக அதானி ஊழியர்கள் அப்பகுதியில் காணப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக செப்டம்பர் 9, 2021-ல் கோண்டல்புரா மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தினர். தங்களின் எதிர்ப்பை கடிதத்தின் மூலமாக ஹசாரிபாக்கில் மாவட்ட ஆட்சியாளராகப் பணிபுரியும் ஆதித்யா குமார் ஆனந்த்திடம் சமர்ப்பித்தனர். கிராம வாசிகளின் கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்காத நிலையில், மீண்டும் நவம்பர் 7, 2021-ல் கூட்டத்தைக் கூட்டிய மக்கள் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அதானி நிறுவன அதிகாரிகளை கிராமத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என ஒருமித்த முடிவை எடுத்தனர்.
அன்றிலிருந்து இன்று வரை கிராம மக்கள் தங்களுக்காகவும், தங்களுடைய நிலத்துக்காகவும், சுற்றியுள்ள வனப்பகுதிக்காகவும், அதானி நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.