தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் சின்னம் உருவாகி இருப்பதால், இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லக் கூடாது என அறிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளைக் கடலூர் துறைமுகம் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
வங்கக் கடலில் நீடிக்கும் தீவிர காற்றுழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் தீவிரமடைந்து மாண்டஸ் (Mandous) எனும் புயலாக மாறியுள்ளது.
சென்னையில் இருந்து 580 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது, இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 4 நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
8.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

9.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 - 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
பேரிடர் மீட்பு குழு:
இந்த மாண்டோஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடலூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினர் கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளனர். பேரிடர் மீட்புக் குழுவுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களுடன், வீரர்கள் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் சிதம்பரம் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.