Published:Updated:

நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்? #DoubtOfCommonMan

Chennai flood
News
Chennai flood

நெருக்கடியான நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எவ்வாறு அதிகரிப்பது? மழைநீர் சேமிப்புத்தொட்டி அமைப்பதன் மூலம் சாத்தியமென்றால், இட வசதி இல்லாத ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில் இது எப்படி சாத்தியமாகும்? - த. விக்னேஷ் நம் #DoubtOfCommon man பகுதியில் எழுப்பிய கேள்வி.

Published:Updated:

நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்? #DoubtOfCommonMan

நெருக்கடியான நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எவ்வாறு அதிகரிப்பது? மழைநீர் சேமிப்புத்தொட்டி அமைப்பதன் மூலம் சாத்தியமென்றால், இட வசதி இல்லாத ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில் இது எப்படி சாத்தியமாகும்? - த. விக்னேஷ் நம் #DoubtOfCommon man பகுதியில் எழுப்பிய கேள்வி.

Chennai flood
News
Chennai flood

தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையான தேவை. ஆனால் உலகில் கிடைக்கும் நன்னீரில் வெறும் 4 சதவிகிதத்தை மட்டுமே நம்மால் உபயோகிக்க முடியும். பூமியிலிருந்தும் கடலிலிருந்தும் நீரானது ஆவியாகி, கரு மேகங்களாக மாறி மழையாகப் பொழியும். இந்த இயற்கை நிகழ்வு ஒவ்வொருவருக்கும் போதுமான மழை நீரைக் கொடுக்கிறது. அவற்றைச் சேகரிக்க ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் எனப் பல அமைப்புகள் இருக்கின்றன. ஆனாலும் நீர்த் தட்டுப்பாடு எப்படி உருவாகிறது? நிலத்தடி நீர்மட்டம் எப்படிக் குறைந்துபோனது?

மழைநீர் சேமிப்பு
மழைநீர் சேமிப்பு

மழைக் காலங்களில் இந்தியாவில் அதிக அளவு மழை பெய்யும், ஆனால் சேமிப்பு வரம்புகள் காரணமாக இந்த நீரில் 36%க்கும் குறைவான நீரே சேமித்து பயன்படுத்தப்படுகிறது. சேமிப்பு வசதிகள் இல்லாததால் 65 சதவிகிதம் மழை நீர் கடலில் கலக்கிறது. இந்திய நீர்ப் பாசன நீர் வள மேம்பாட்டு ஆணையத்தின் கூற்றுப்படி, நாம் எதிர்கொள்ளும் நீர்ப் பற்றாக்குறை பிரச்னையானது, நீரின் பற்றாக்குறையால் ஏற்படுவது அல்ல,அதற்கு மழை நீரை வீணாக்குவது மற்றும் சேமிக்காததே காரணம் என்று அறிவித்துள்ளனர். தண்ணீரை அதிகளவு வீணாக்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

மரபுவழியாக மழைநீர் சேமிக்க பல வழிகள் கையாளப்பட்டன. பெய்யும் மழை நீரை வீட்டிலேயே சேமிக்க வீட்டின் நடுப்பகுதியில் முற்றம் அமைத்துள்ளனர். கூரைக்கு நாட்டு ஓடுகள்தாம் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயில்களில் குளங்களைக் கொண்டு மழைநீரைச் சேமித்தனர். அணைகளைக் கட்டினர். காலப்போக்கில் நகரமயமாக்கல், மக்கள் தொகைப் பெருக்கம், காடுகள் ஆக்கிரமிப்பு, அதிகரிக்கும் மாசுபாடு எனப் பல காரணங்களால் மழைநீர் சேமிப்பு குறைந்து போனது.

நிலத்தடி நீரின் தேவையை உணர்ந்த தமிழக அரசு 2001-ம் ஆண்டு முதல் கட்டாய மழைநீர் சேமிப்புத் திட்டம் என்ற சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி அனைத்து வீடுகளும் கட்டடங்களும் கட்டாய மழைநீர் சேமிப்பு அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். எனவே மழைநீரை இரண்டு முறைகளில் சேமித்தனர். முதலாவது நிலத்திற்கு அடியில் சேமித்தல், இரண்டாவது கொள்கலனில் சேமித்தல்.
Doubt of Common Man
Doubt of Common Man

குழாயிலிருந்து 3 அடி தூரத்தில் சுமார் 3 அடி விட்டம் உள்ள நான்கு அடி ஆழமுள்ள ஒரு குழி தோண்ட வேண்டும். அதில் கூழாங்கற்களையும், ஆற்று மணலையும் அடுக்குகளாக இட்டு அந்தக் குழிக்குள் வீட்டு மாடியிலிருந்தோ அல்லது கூரையிலிருந்தோ வரும் மழைநீரைக் குழாய்கள் மூலம் இந்தக் குறிப்பிட தொட்டிக்குள் விட வேண்டும். இதன் மூலம் அவ்வப்போது பெய்யும் மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க இயலும். நிலத்தடி நீர் வற்றாமல் இருக்க இம்முறை உதவுகிறது.

Chennai heavy rain
Chennai heavy rain

இரண்டாவது முறையானது, கொள்கலனில் சேமித்தல். இந்த முறை அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு உகந்தது. நிலத்திற்கு அடியில் பெரிய தொட்டி அமைத்து அனைத்து வீடுகளிலும் குழாய்கள் மூலம் மழை நீரை ஒருமுகப்படுத்தி வடிகட்டிச் சேகரிக்கலாம். நில மட்டத்திற்கு மேல் தொட்டியில் சேமிக்கலாம். ஏற்கெனவே உள்ள கிணறுகளைத் தூர்வாரி, அதில் வடிகட்டும் அடுக்கு அமைத்து மழை நீரை வடித்து கிணறுகளிலும் சேமிக்கலாம்.

போர்வெல்லிலும் சேமிக்கலாம். போர்வெல் இல்லையென்றால் அந்த இடத்தினுடைய மண்ணின் தன்மையைப் பொறுத்து 10- 20 அடி ஆழம் வரை குழி தோண்டுவதன் மூலம் நீரை நிலத்திற்கு அனுப்பலாம்.

நகர்ப்புறங்களில் அதிக அளவில் கட்டடங்கள் கட்டப்படுவதாலும், பெய்யும் மழைநீர் நிலத்திற்குக் கீழ் இறங்க போதிய நிலப்பரப்பு இல்லாததாலும் மழைநீரைச் சேமிக்க இயலாமல் வீணாகிறது. அப்படியென்றால் ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில், இடவசதி இல்லாத பல கட்டடங்களில் மழைநீரை எப்படிச் சேமிப்பது?

கட்டப்பட்ட வீடுகளிலோ அல்லது கட்டடங்களிலோ மழைநீரைச் சேமிக்க ஒவ்வொரு வீட்டின் மேற்பரப்பில் குழாய்களை ஒருங்கிணைத்து சேமிப்புத் தொட்டி அல்லது கிணறுகள் மூலம் நிலத்தடி நீரைச் சேமிக்கலாம். இதை வடிவமைக்க ஆறு முக்கியமான அமைப்பு அடிப்படை தேவையாகிறது.

1. கொட்டு பரப்பு அல்லது பெய்யும் பரப்பு : பெய்யும் மழைநீரைச் சேமிக்கும், வீடு அல்லது கட்டடத்தின் மேற்பரப்பு.

2. கொண்டு போகும் அமைப்பு: மேற்பரப்பில் பெய்யும் மழையை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும் குழாய்கள்.

3. கூரைகளைச் சுத்தம் செய்தல்: அசுத்தங்களை நீக்கி வேறு இடத்துக்கு அந்த நீரை எடுத்துச் செல்லும் சேமிப்புக் குழாய்கள்.

4. சேமிப்பு:கிருமிகள் அண்டாத வகையில் பாதுகாப்பாக தொட்டியில் சேமிக்கவேண்டும்.

5. சுத்திகரித்தல்: அறுவடை செய்த நீரை வடிகட்டி சுத்தம் செய்யும் அமைப்பு.

6. பகிர்தல் : சேகரித்த மழை நீரை உபயோகிக்கச் செய்ய ஒரு சிறிய மோட்டார் அல்லது தொட்டி தேவைப்படும்.

இந்தத் தண்ணீர் நிலத்தடிக்கோ அல்லது நிலத்தின் மேலுள்ள டேங்குகளுக்கோ அனுப்பப்படுகின்றன. டேங்குகளில் மழைநீர் சேமிக்கப்பட்டால் காற்று, சூரிய ஒளி, கழிவுப் பொருள்கள் உட்புகாத படி டேங்குகள் அடைத்து வைக்கப்பட வேண்டும். படிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நீரைத் தெளிவடையச் செய்யலாம். ப்ளீச்சிங் பவுடர் பாக்டீரியாக்களைக் கொல்லுகிறது. இந்தத் தண்ணீரை தோட்டத்திற்கும் கழிவறைக்கும் துணி துவைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சேமித்த பிறகும் தண்ணீர் அதிகமாக இருந்தால் கிணறுகளிலும் சேமிக்கலாம்.

குழாய்கள், மழைநீர் வடிகட்டியை அமைக்க சிறிது பணம் செலவிட வேண்டும். சேமிப்புத் தொட்டி அமைக்க இயலாத நிலையில் கிணறுகள் சிறந்த தீர்வாக இருக்கும். குழாய்களை ஒருங்கிணைத்து, நீரை வடிகட்டி கிணற்றில் விடலாம்.

மழைநீர் சேமிப்பு
மழைநீர் சேமிப்பு

மழை நீர் சேமிப்பு என்பது அனைத்து நிலப்பரப்புக்கும் தேவையான ஒன்று. மழைநீர் சேமிப்பு எந்தப் பகுதிகளுக்கு மிகவும் ஏற்றது என்ற கேள்வி எழலாம். நிலத்தடி நீர்வளம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கும், அசுத்தமான நிலத்தடி நீர் இருக்கும் பகுதிகளுக்கும், மழை நீர் நில்லாமல் ஓடக்கூடிய பகுதிகளுக்கும், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் பகுதிகளுக்கும், மின்சாரம் மற்றும் நல்ல தண்ணீரின் விலை அதிகமாகக் காணப்படும் பகுதிகளுக்கும் மழை நீர் தேவைப்படுகிறது. இந்த இடங்களில் எல்லாம் மழை நீர் சேகரிப்பு மிக முக்கியமான ஒன்று.

1. மழைநீர் சேகரிக்கும் இடம் சுத்தமாக இருப்பது நல்லது.

2. மழைநீர் சேகரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பொருள்கள் அனைத்தும் சுத்தப்படுத்திய பிறகே உபயோகப்படுத்த வேண்டும்.

3. முதலில் கிடைக்கும் மழை நீரைச் சேகரிக்காமல் சற்று நேரம் வெளியேற்றிவிட்டு சுத்தமான நீர் கிடைக்கும் போது மட்டுமே பாத்திரங்களில் சேமிக்க வேண்டும்.

4. மழை நீரைச் சேகரிக்க பயன்படும் பொருள்கள் அவ்வப்போது சுத்தமாக்கப்படுவதுடன் மூடி வைக்கவும் வேண்டும்.

5. சேமிக்கப்படும் மழைநீரில் பாசிப்படிதல் மற்றும் பூச்சிகள் சேர்தலைத் தவிர்க்க வேண்டும்.

Doubt of Common Man
Doubt of Common Man

6. சமையல் அறை மற்றும் குளியல் அறையிலிருந்து வரும் கழிவு நீர் அல்லாத தண்ணீரைச் செடிகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்கலாம்.

7. வற்றிவிட்ட கிணறுகளைத் தூர்வாரி விட்ட பிறகு மழைநீரைச் சேமிக்கப் பயன்படுத்தலாம்.

8. மரங்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். புதிதாக மரங்களை நட வேண்டும்.

அன்றாட தேவையை மட்டும் கருத்தில் கொள்ளும் மக்கள் அடுத்த தலைமுறைக்கான தேவையை மறந்து விடுகிறார்கள். இன்று வீணாக்கப்படும் நீர் அடுத்த தலைமுறையின் உயிர் காக்கும் நீராகக் கூட இருக்கலாம்.