தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் (Nilgiri tahr) ஒரு காலத்தில் நீலகிரியின் பாறைச் சரிவுகளில் பரவலாக காணப்பட்டாலும், வேட்டை மற்றும் காடழிப்பு போன்ற காரணங்களால் அதன் இனம் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டது. நீலகிரியைப் பொறுத்தவரை அரிதான விலங்காக அறிவிக்கப்பட்டு வரையாடு இனத்தை பாதுகாக்க வனத்துறையினர் கூடுதல் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

முக்கூர்த்தி தேசிய பூங்காவிலும் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே தென்பட்டு வந்த இந்த வரையாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து, பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில், இவற்றின் எண்ணிக்கை தற்போது சற்று அதிகரித்து, முக்கூர்த்தி தேசியப் பூங்காவிற்கு வெளியிலும் நடமாடத் துவங்கியிருக்கின்றன. இது சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் வரையாடுகள் குறித்த ஆய்வாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
கிண்ணக்கொரை பகுதியில் முதல் முறையாக வரையாடுகளை பதிவு செய்த ஓசை அமைப்பைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் தேன்முருகக்கனி நம்மிடம் பேசுகையில், ``நான் கடந்த 1998-ம் ஆண்டிலிருந்து முக்கூர்த்தி தேசிய பூங்காவிற்கு வந்து கொண்டிருக்கிறேன். வரையாடுகளைப் பொறுத்தவரை இதுவரை முக்கூர்த்தி தேசிய பூங்காவிற்கு வெளியில் பார்த்ததில்லை. சமீபத்தில் கிண்ணக்கொரை பகுதியில் இருக்கும் பாறைச் சரிவு ஒன்றில் பார்த்தது எனக்கு அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியைக் கொடுத்தது.

வால்பாறை போன்ற பகுதிகளில் வரையாடுகளை சாதாரணமாக காண முடியும் என்றாலும் நீலகிரியைப் பொறுத்தவரை அரிதான ஒன்றாகவே உள்ளது. இவற்றின் எண்ணிக்கை தற்போது மெள்ள அதிகிரித்திருப்பதாக தெரிகிறது. இது ஒரு நல்ல அறிகுறியாக கருதுகிறோம். ஒரு சில ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக நீலகிரி வரையாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கும் இது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.
நீலகிரி வரையாடுகள் குறித்து வனத்துறையினர், ``வேட்டையாடுவதிலிருந்து வரையாடுகளைப் பாதுகாத்ததால் தற்போது இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2017-ல் 420 முதல் 430 ஆக இருந்த வரையாடுகளின் எண்ணிக்கை 2019-ல் 600 க்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது.

பாறைச் சரிவுகள் நிறைந்த எப்பநாடு, சோலூர் கோக்கால், கிளென்மார்கன் மற்றும் கொடநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு காலத்தில் வரையாடுகள் காணப்பட்டன. இதேபோல் அவற்றுக்கு சாதகமான சூழல் நிலவினால் இழந்த வாழ்விடங்களை மீண்டும் வரையாடுகள் கைப்பற்றும் என நம்புகிறோம்" என்றனர்.