
புகை, மாசு, இருமலோடுதான் சென்னையில் இந்த நவம்பர் மாதம் தொடங்கியிருக்கிறது. டெல்லியைப்போல் சென்னையிலும் முகமூடிகளுடன் அலையும் காலம் வருமா?
‘இப்போதைய சென்னையின் மாசுக்குக் காரணமே டெல்லிதான், அங்கிருக்கிற நச்சுக்காற்று இங்குவரை வந்துவிட்டது’ என சிலர் நம்பினார்கள். ஆனால், தமிழக அரசு மற்றும் இந்திய வானிலை மையம் இதுகுறித்து அவசரமாக அறிக்கைகளை வெளியிட்டன. டெல்லியின் தாக்கம் சென்னையில் இல்லை என்றார்கள். இதில் கவனிக்க வேண்டியது, `காற்று மாசுபட்டிருக்கிறது’ என்பதை அரசுத்தரப்பு மறுக்கவில்லை என்பதைத்தான். சென்னையில் காற்று மாசுபாடு அவ்வளவு தீவிரமாக இல்லையென்று மட்டும் சொன்னார்கள். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 5-ம் தேதி பேசிய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “சென்னையின் காற்றுத்தரம் பாதுகாப்பான அளவில்தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், காற்றுத்தரம் ஆபத்தாக இல்லையென்றும் இந்திய வானிலை மையத்தோடு இணைந்து தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் வாட்ஸ்-அப் தகவல்களை, வதந்திகளை நம்ப வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டது.

பார்க்கப்போனால், சென்னையின் காற்று மாசடைவதற்கு டெல்லியின் நச்சுக்காற்று இங்கு வரவேண்டும் என்ற அவசியமில்லை. டெல்லி மாசடைய டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களும் காரணம்தான். ஆனால், சென்னை மாசடைய சென்னையே போதுமானது. அவ்வளவு மாசு சென்னைக்குள்ளேயே அடர்ந்திருக்கிறது. அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், நகரத்திற்குள்ளும் அதற்கு அருகிலும் இருக்கின்ற மூன்று துறைமுகங்களை நோக்கிப் படையெடுக்கும் கனரக வாகனங்கள் என்று காற்று மாசுபாட்டை உச்சத்திற்குத் தூக்கிச் செல்ல சென்னைக்கு ஏராளமான காரணிகள் இருக்கின்றன. சரி, உண்மையிலேயே அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் சொல்வதுபோல், காற்று அவ்வளவு மோசமாக மாசடையவில்லையா?

நவம்பர் 6-ம் தேதி மாலை, பழைய மகாபலிபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கட்டடங்களைப் புகை சூழ்ந்திருந்ததைப் பார்க்கமுடிந்தது. பார்க்கப் பனிமூட்டம்போல் தெரிந்தாலும், குளிர் தெரியவில்லை. ஏனென்றால் அது பனியல்ல, புகை. நவம்பர் 7-ம் தேதி காலை, வேளச்சேரி தரக் கண்காணிப்பு மையத்தில் காற்றின் தரத்தில் மாசு நுண்துகள் பி.எம். 2.5, 221 ஆகப் பதிவானது.
நவம்பர் 4-ம் தேதி, 150 ஆக இருந்த மாசுபாட்டின் அளவு இரண்டே நாள்களில் 221 ஆக உயர்ந்துள்ளது. காற்றிலுள்ள ஈரப்பதமும் மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் வீசுகின்ற காற்றும்கூட இப்போது சென்னைக்குச் சாதகமாக இல்லை. மாசுக் காரணிகளான, நைட்ரஜன், கார்பன் மோனாக்ஸைடு, கந்தக ஆக்ஸைடு, ஹைட்ரோ கார்பன் அனைத்தும் சென்னையின் காற்றில் சுழன்றுகொண்டிருக்கின்றன.
இந்த அதீத மாசு மக்களுக்குப் பல உடற்கோளாறுகளைக் கொண்டுவரும் என்று கணிக்கப்படுகிறது. சுவாசப் பிரச்னை, தொண்டை, மூக்கு மற்றும் கண் எரிச்சலுக்கு மக்கள் ஆளாவார்களென்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

நவம்பர் 6-ம் தேதி மாலை, வேளச்சேரியில் காற்று மாசுபாடு எகிறிக்கொண்டிருந்த அதேநேரத்தில், அடையாற்றில் கன மீட்டருக்கு 128.71 மைக்ரோ கிராமும், மணலியில் கன மீட்டருக்கு 122.05 மைக்ரோ கிராமும் பதிவாகின. உலக சுகாதார நிறுவனத்தின்படி, காற்றில்
பி.எம். 2.5 நுண்துகள்களின் அளவு சராசரியாக ஒரு கன மீட்டருக்கு 25 மைக்ரோ கிராம் வரை இருக்கலாம்; மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்குப்படி 60 மைக்ரோ கிராம் இருக்கலாம். மாசு நுண்துகள்கள் 2.5 அளவில் இருப்பதாலும், இந்த அளவிலிருக்கும் மாசுக்காரணிகளால் மனித உடலுக்குள் ஊடுருவி சுவாசப் பிரச்னைகளை உருவாக்க முடியும் என்பதாலும், காற்றுத் தரத்தைக் கண்டறிவதில் இது முக்கிய அளவுகோலாகக் கருதப்படுகிறது.
இந்தச் சராசரி அளவுகளைப் பொருத்திப் பார்த்தால், சென்னையில் பதிவாகியுள்ள காற்றுத் தரம் அனைத்துமே, உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள சராசரி அளவைவிட மிகவும் மோசமடைந்துள்ளன.

இந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, காற்றின் தரம் கன மீட்டருக்கு 504 மைக்ரோ கிராம். அதுவே மார்ச் 1-ம் தேதி, 672. இதன்மூலம், சென்னை நீண்டகாலமாகக் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இன்று சென்னையில் காற்றுத் தரம் எப்படியுள்ளது?
மூக்குவழியாக இழுக்கும் காற்றைக் கழுத்து வழியாக நுரையீரலுக்குள் கொண்டு செல்லும் சுவாசக் குழாய் அடைபட்டதுபோல் உணர்ந்துள்ளீர்களா? கழுத்தில், சுவாசக் குழாயைக் குறிபார்த்து யாரோ அழுத்திப் பிடித்திருப்பதுபோல் இருக்கும். சுத்தமான காற்று இல்லாத சூழலில், மூக்கில் எரிச்சலுணர்வு தரும், இந்த மாசடைந்த காற்றைக்கூட சுவாசிக்க முடியாமல் திணறும் வேதனையை, தினம்தினம் காலையிலும் மாலையிலும் சென்னையின் போக்குவரத்து சிக்னல்களில் நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். அதுதான் நம் காற்றின் தரம்.

சென்னை மக்கள், இனி சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டுமென்றால், நமக்குத் தனிப்பட்ட காற்றுப் பாதுகாப்புக் கொள்கை வேண்டும். மாசுக்கட்டுப் பாட்டுக்கான புதிய கொள்கைகளை, குறிப்பாக, சென்னையின் பிரச்னைக்குத் தகுந்த கொள்கைகளை வகுக்கவேண்டும். தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின்கீழ் (National Clean Air Pragramme) 102 நகரங்கள் உலக சுகாதார நிறுவன அளவீடுகள்படி காற்றுத்தரத்தில் மோசமாக இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில், தமிழகத்திலிருந்து தூத்துக்குடி மட்டுமே பதிவாகியுள்ளது. காற்றுத் தரத்தின் மாசுபாடு 600 வரை எட்டிவிட்ட மோசமான நிலையிலிருந்தும்கூட, ஏன் சென்னை அந்தப் பட்டியலில் இல்லை என்ற கேள்விக்கு விடையில்லை. சென்னையையும் அந்தப் பட்டியலில் சேர்க்கவேண்டும். தமிழகத் தலைநகருடைய காற்றுத் தரம் மேம்படத் தமிழக அரசும் தனிக்கொள்கையைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
இப்போதிருந்தே இந்தப் பிரச்னையில் நாம் கவனம் செலுத்தத் தவறினால், சென்னை டெல்லி ஆகும் நாள் தொலைவில் இல்லை.