Published:Updated:

``ஒரு கோடி பனை விதைகளை இலவசமாக கொடுக்கப்போறேன்!" - கரூர் மனிதரின் `பட்ஜெட்' தாண்டிய திட்டம்

பனை மரங்கள்
News
பனை மரங்கள்

``வறட்சி அதிகமாக நிலவும் க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றியங்களில் உள்ள தரிசு நிலங்களில் தலா 33 லட்சம் பனைமரங்களை வளர்க்க முடியும். அதன்மூலம், 66 லட்சம் பனைமரங்களிலும் சேர்த்து, ஆண்டுக்கு ரூ. 2,112 கோடி வருமானம் கிடைக்கும்." என்கிறார் சாதுராஜன்.

Published:Updated:

``ஒரு கோடி பனை விதைகளை இலவசமாக கொடுக்கப்போறேன்!" - கரூர் மனிதரின் `பட்ஜெட்' தாண்டிய திட்டம்

``வறட்சி அதிகமாக நிலவும் க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றியங்களில் உள்ள தரிசு நிலங்களில் தலா 33 லட்சம் பனைமரங்களை வளர்க்க முடியும். அதன்மூலம், 66 லட்சம் பனைமரங்களிலும் சேர்த்து, ஆண்டுக்கு ரூ. 2,112 கோடி வருமானம் கிடைக்கும்." என்கிறார் சாதுராஜன்.

பனை மரங்கள்
News
பனை மரங்கள்

மாநில மரம், வறட்சியைத் தாங்கி நிற்கும் தன்மை, புயலைத் தடுக்கும் ஆற்றல் என்றெல்லாம் பனைமரத்துக்கு இருக்கும் ஆற்றலை, சிறப்பை வியந்து பேசுகிறோம். ஆனால் உண்மையில், பனை மரத்தை தேவையில்லாத மரம் என்று வெட்டி வீழ்த்தவே செய்கிறோம். ஒருகாலத்தில் எங்கும் பெருகி இருந்த பனை மரங்கள், தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக அருகிவிட்டன.

பனை மரங்கள்
பனை மரங்கள்

இந்த நிலையில்தான், தமிழக வேளாண் பட்ஜெட்டில், ``பனைமரங்களை வெட்டுவது தடை செய்யப்படும். ரூ. 3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்" என்று அறிவிக்கப்பட்டிருப்பது, சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

இந்த நிலையில், பனையின் அவசியம், அதில் உள்ள பயன்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, இயற்கை ஆர்வலரான `ராஜயோகம்' சாதுராஜனிடம் பேசினோம். இவர், தனது சொந்தப்பணத்தில் ரூ. 2 லட்சம் வரை செலவு செய்து, இரண்டரை லட்சம் பனைவிதைகளை வாங்கி, கரூர் மாவட்டம் முழுக்க இலவசமாக வழங்கியிருக்கிறார். அதோடு, பனை குறித்து பல செயல்திட்டங்களையும் தயாரித்து, கைவசம் வைத்துள்ளார். பனைக்கு தமிழக பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது குறித்து, அவரிடம் பேசினோம்.

சாதுராஜன்
சாதுராஜன்
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

``எனக்கு பூர்வீகம் க.பரமத்தி அருகில் உள்ள கோடந்தூர்தான். நான் படிக்கிற காலத்துல கோடந்தூரில் 10,000-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருந்துச்சு. கரூரிலேயே அதிக பனைமரங்கள் உள்ள ஊரா எங்க ஊர்தான். நான் சிறுவனா இருக்கும்போது, பனைமரத்துல எறி நுங்கு பறிப்பது, பனைமட்டையில காத்தாடி செஞ்சு விளையாடுறது, பனைமரத்து இறக்குன கள்ளை அப்படியே மிச்சம் வைக்காம கடகடன்னு குடிக்கிறனு, பனையோடு இணைஞ்ச வாழ்கை வாழ்ந்தேன். வீட்டுக்கு வீடு அப்போ பனைமரங்கள் இருந்ததால, கடந்த 70 வருஷத்துக்கு முன்னால திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரத்தில் போய் மரம் எற சில குடும்பங்களை அழைச்சுட்டு வந்திருக்காங்க. அவங்க நிரந்தரமா எங்க ஊர்ல தங்குறதுக்காக, ஊர் விவசாயிகள் அனைவரும் அவங்களுக்கு 40 ஏக்கர் நிலம் கொடுத்திருக்காங்க. பதனி இறக்குறது, கருப்பட்டி தயாரிக்கிறது, வீடு முடைய பனைமட்டைகளை பயன்படுத்துறனு பனைசார்ந்துதான் எங்க ஊர் பொருளாதாரமே இருந்துச்சு. ஆனா, காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமா பனை அழிக்கப்பட்டு, கடந்த 15 வருஷத்துக்கு முன்னாடி, எங்க ஊர்ல சுத்தமா பனைமரங்கள் அழிக்கப்பட்டுட்டு. ஊர்ல தங்கியிருந்த தொழிலாளர் குடும்பங்களும் மாத்துபொழப்பைத் தேடி வெளியூர்களுக்கு போயிட்டாங்க.

எங்க குடும்பமும் விவசாயக் குடும்பம்தான் என்றாலும், அப்பா சௌண்டப்பன் காலத்திலேயே கரூர்ல போய் சொந்தமா தொழில் பண்ணினாங்க.. தொழிலை பெருசா டெவலெப் பண்றதுல நானும் யோசிச்சதால, ஊரைப் பத்தி பெருசா தெரியலை. ஆனா, கடந்த 8 வருஷத்துக்கு முன்பு, ஊர் ரொம்ப வறட்சியா போனதைக் கேள்விப்பட்டு, நொந்துபோயிட்டேன். கடந்த மூணு வருஷமா தமிழகத்திலேயே அதிகமா வெயில் அடிக்கிற பகுதியா க.பரமத்தி பகுதி மாறிட்டு. அதுக்கு காரணம், இங்கு மரங்கள் குறைஞ்சுபோய், கல்குவாரிகள் பெருகியதுதான். அதனால், எங்க ஊரை பழையபடி பனைமரங்கள் நிறைஞ்ச ஊரா மாத்த நினைச்சேன். அதுக்காக, கடந்த எட்டு வருஷமா பனைவிதைகள் வாங்க பலபகுதிகளிலும் முயற்சி பண்ணினேன். ஆனா, இரண்டு லட்சம் பனைவிதைகள் ஒரே இடத்துல சேர்ந்தாப்புல கிடைக்கலை. இரண்டு வருஷமா கடுமையா முயற்சி பண்ணி, ஒரு மாசத்துக்கு முன்னாடி திருநெல்வேலி மாவட்டத்துல உள்ள ஓர் ஊர்ல, ஒரு கொட்டை ஒரு ரூபானு இரண்டு லட்சம் பனைவிதைகளை வாங்கி, லாரியில் ஏத்திக்கிட்டு வந்தேன். முதல்ல, எங்க ஊர்ல அத்தனை விதைகளையும் விதைக்க நினைச்சேன். ஆனா, எங்க ஊர் விவசாயிகள் யாரும் ஆர்வம் காட்டலை. ஊர் பொது இடத்துல விதைக்க நினைச்சேன். ஆனா, எப்படி விதைச்சாலும், அதிகபட்சம் ஊர் சாலைகளின் ஓரங்களில் 12,000 விதைகள் மட்டுமே விதைக்க முடியும்னு தெரியவந்துச்சு.

வெட்டப்பட்ட பனைமரங்கள்
வெட்டப்பட்ட பனைமரங்கள்

அதனால, கோயிலுக்கு முன்பு கொட்டி வச்சுக்கிட்டு, வறட்சி மிகுந்த பகுதியாக உள்ள க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர் ஒன்றியங்களைச் சேர்ந்த யாரும் பனை விதைகளை இலவசமா வாங்கிகிட்டு போகலாம்னு அறிவிச்சேன். பலரும் ஆர்வமா வந்து வாங்கிட்டுப் போனாங்க. ஆனால், தமிழகம் முழுக்க பலரும் பனைமரங்களை அழித்து, இப்போ அந்த மரத்தை தேடுற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க. இந்த நேரத்துல, பட்ஜெட்டில் பனைமரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிதான். ஆனா, அதை முறையா செயல்படுத்தனும். `பனை வெட்ட தடை. தவிர்க்கமுடியாமல் வெட்ட நேர்ந்தால், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கணும்'னு சொல்லியிருக்காங்க. ஆனால், வழக்கமாக நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டு மீறப்படுவதுபோல் இல்லாமல், இந்த விஷயத்தில் இரும்புக் கரம் கொண்டு செயல்படுத்தணும். இந்த சட்டத்தை முன்பே செயல்படுத்தியிருந்தால், எங்க ஊரில் இப்போது 10,000 பனைமரங்களும் அப்படியே இருந்திருக்கும். தமிழகம் முழுக்க கோடிக்கணக்கில் பனைமரங்கள் இருந்திருக்கும். அதேபோல், பனை மேம்பாட்டு இயத்துக்கு ரூ. 3 கோடி ஒதுக்கியிருக்காங்க. இந்த நேரத்தில், பனையில் கிடைக்கும் லாபக் கணக்குகளை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

பனை மரங்களை வளர்த்தால், அதிக நன்மைகள் கிடைக்கும். இங்கு பெரும்பாலும் கரும்பு பயிரிடுறாங்க. ஒரு ஏக்கர் கரும்பு விவசாயம் செய்ய, 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுது. அதனால், இந்தப் பகுதியின் வறட்சி இன்னும் அதிகமாகுது. ஆனால், பனைமரங்களுக்கு தண்ணீர் நாம் ஊற்றத் தேவையில்லை. அதேபோல், ஒரு ஏக்கர் கரும்பு விவசாயம் பண்ண, ஒரு லட்சத்து இருபத்திரெண்டாயிரம் வரை செலவாகும். கடைசியாக, அதுல கிடைக்கிற வருமானம், ஒரு லட்சத்து, அறுபதாயிரம் ரூபாய். ரூ. 38,000தான் லாபம். ஆனால், ஒரு ஏக்கர் நிலத்தில் 436 பனைமரங்களை வளர்க்கலாம். மரம் ஒன்றுக்கு வருஷம் ரூ. 3,200 வருமானம் கிடைக்கும். அந்த வகையில், 436 மரத்துக்கும் சேர்த்து வருஷ வருமானமாக, ரூ.13,95,000 கிடைக்கும். கரும்பு பயிர் செய்வதற்கு லேபர் சார்ஜ் அதிகம். ஆனால், பனைமர விவசாயத்தில் அதிகம் ஆள்கள் தேவைபடாது. ஒரு ஏக்கருக்கு பத்து வேலையாள்கள் போதும். மரம் ஏறகூட மெஷின் உள்ளது.

பனைவிதைகள் வழங்கும் சாதுராஜன்
பனைவிதைகள் வழங்கும் சாதுராஜன்
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

அதேபோல், கரும்பு பயிரிட நன்செய் நிலம்தான் வேண்டும். ஆனா, பனைமரங்களை தரிசு நிலங்களிலும் பயிரிடலாம். அதேபோல், பனைமரத்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். மரம் ஒன்று, பூமிக்கு அடியில் 2,000 லிட்டர் தண்ணீரை தேக்கி வச்சுருக்கும்னு சொல்றாங்க. அதேபோல, மழையை ஈர்த்து பொழிய வைக்கும் ஆற்றல் பனைக்கு உண்டு. பனம்பழம் ஜூஸ், க்ரீம், நுங்கு, நுங்கு பாயசம், கருப்பட்டி, கள், பதநீர், உத்தரத்துக்கு பனை மரங்கள், வீடுகட்ட தேவையான பொருள்கள், விசிறி, கூடை மாதிரியான பொருள்கள்னு பனையால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

எங்க கிராம விவசாயிகள்கிட்ட பேசினேன். ஆனா, அவங்களுக்கு பனையை விதைக்க ஆர்வம் வரலை. `ஆள் வச்சு பராமரிக்க முடியலன்னுதான், எங்க முன்னோர்கள் பனையை அழிச்சு மாத்து வெள்ளாமைக்கு மாறினாங்க. இப்போ, எங்களையும் அந்த கஷ்டத்துல தள்ளப்பார்க்குறீங்களா?'னு கேட்டாங்க. அதோட, `7 வருஷம் கழிச்சுதான் பனை பலனைக் கொடுக்கும்'னு மலைச்சாங்க. இப்படி, புரிதல் இல்லாமல் இருக்கும் விவசாயிகளிடம் பனை வளர்ப்பு குறித்த ஆர்வத்தை அரசு ஏற்படுத்தணும். இப்போ இருக்கிற பனைமரங்கள்ல விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்து, ஊதியம் கொடுத்து, அவர்களை ஊக்கப்படுத்தினா, கண்டிப்பா விவசாயிகளுக்கு இதுல ஆர்வம் வரும். அதேபோல, கரூர் மாதிரி வானம் பார்த்த பூமியைக் கொண்ட நிலங்களில் பனைகளை நட்டால், வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கும்.

பனை மரங்கள்
பனை மரங்கள்

அவர்களுக்கு தினமும் ரூ. 500 வரை சம்பளம் கிடைக்கும். பனையில் 150 நாள்கள் தொடர்ந்து வேலை இருக்கும். அதன்பிறகு, அதுசார்ந்த பொருள்களைக் கொண்டு உபதொழிலை வருஷம் முழுக்க செய்யலாம். பனைப்பால் இப்போது ரூ.30-ல் இருந்து ரூ. 50 வரை விக்குது. அதேபோல் அரசு, மரத்துக்கு தண்ணீர் பாய்ச்ச மானியமாக மரம் ஒன்றுக்கு ரூ. 2.50 கொடுக்குது. 400 மரம் வச்சா, ரூ. 1,000 மானியமா கிடைக்கும். பனைமரங்கள் அதிகரிச்சா, சர்க்கரை ஆலைகள் தேவையில்லாமல் போய்விடும். தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும். வேலையில்லாத திண்டாட்டமும் ஒழியும்.

அதேபோல, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறையும். பல கிராமங்களில் வருமானத்துக்காக நகர்புறங்களுக்கு குடிபெயர்றாங்க. ஒவ்வொரு கிராமத்திலும் 20 வீடுகள் சும்மா பூட்டியே கிடக்கு. ஊருக்கு ஊர் பனைமர வளர்ப்பை அதிகப்படுத்தினால், அவர்கள் எல்லோரும் மறுபடியும் கிராமத்துக்கு திரும்பும் சூழல் ஏற்படும். அதேபோல, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறையும் நிலையில், அதனால் ஏற்படும் மாசு குறையும். கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். அரசு இந்த விஷயங்களை எல்லாம் விவசாயிகளிடம் சொல்லி, அவர்களை ஊக்கப்படுத்தணும். இதை நான் தனிப்பட்ட முறையில், `இருப்பதை காப்போம்; வருவதை வளர்ப்போம்'னு பனை இயக்கமாகவே நடத்தலாம்னு முடிவெடுத்திருக்கிறேன். வரும் வருஷமும் ஒரு லட்சம் பனை விதைகளை வாங்கி கொடுக்க இருக்கிறேன். வறட்சி அதிகமாக நிலவும் க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றியங்களில் உள்ள தரிசு நிலங்களில் தலா 33 லட்சம் பனைமரங்களை வளர்க்க முடியும்.

பனை விதைகள் விதைப்பு
பனை விதைகள் விதைப்பு
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

அதன்மூலம், 66 லட்சம் பனைமரங்களிலும் சேர்த்து, ஆண்டுக்கு ரூ. 2,112 கோடி வருமானம் கிடைக்கும். தமிழகம் முழுக்க இதை விரிவுப்படுத்தினால், இதில் கிடைக்கும் கணக்கில்லாத வருமானத்தை நினைச்சுப் பாருங்க. இதை ஒவ்வொரு விவசாயிகிட்டயும் புரிய வைக்கப் போறேன். என் சார்பாக, என் வாழ்நாளுக்குள் அதிகபட்சம் ஒரு கோடி பனை விதைகளை வாங்கி, அனைவருக்கும் இலவசமாக கொடுக்கணும்னு நினைக்கிறேன். என் வருமானத்தில் அதுக்காக பெரிய பங்கை செலவிட இருக்கிறேன். அதேபோல், ஒரு ஏக்கரில் பனை விதைகளை நட ஆர்வம் காட்டும் விவசாயிகளுக்கு, என் சார்பாக அதற்கான பனை விதைகளை இலவசமாக கொடுத்து, அவர்களை ஊக்கப்படுத்த ரூ.1000-த்தையும் பரிசா தர்றதா அறிவிச்சுருக்கேன். தேவைப்பட்டா, அரசோடு இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன். அங்கங்கே பனைக்காடுகளை பார்க்கிற வரைக்கும் ஓயமாட்டேன்" என்று உறுதியான வார்த்தைகளில் கூறி முடித்தார்.